↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திரையில் எல்லா நடிகர், நடிகைகளுக்கும் வெளிச்சம் தரும் லைட்மேன்களின் ‘வாழ்க்கை’யோ இன்றுவரை இருட்டில் தான் உள்ளது.
”இன்னைக்கு தேதிக்கு எங்களுக்கு ஒரு கால்ஷீட்டுக்கு 550 ரூபாய் தான் சம்பளம். ஒரு கால்ஷீட்டுன்னா 8 மணி நேரம் வேலை இல்லை. 16 மணி நேரம் கூட ஆகும். அந்த சம்பளத்தை வெச்சுக்கிட்டு என்னால ஒரு டிவிஎஸ் 50 கூட வாங்க முடியல. வேலைக்கு சைக்கிள்ல தான் போயிக்கிட்டு இருக்கேன்.
வெளியில இருந்து பார்க்கிறப்போ சினிமாவுல எல்லாருமே கோடிக்கணக்குல சம்பாதிக்கிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கு. ஆனால் எங்க லைட்மேன்களோட வாழ்க்கையோ இன்னைக்கு வரைக்கும் இருட்டாத்தான் இருக்கு” என்கிறார் 25 வருடங்களுக்கும் மேல இந்த வேலையைச் செய்து வரும் ஒரு லைட்மேன். அவர்களின் நிஜ வாழ்க்கையின் வறுமைச் சூழலை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் படம் தான் ‘கண்ணாடி பொம்மைகள்’.
குணா என்ற கிராமத்து இளைஞன் “தெருக்கூத்து” நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு சினிமாவில் நடிக்க ஆசை வருகிறது. புதிதாக கல்யாணமான அவன், தன் மனைவியுடன் சென்னைக்கு வருகிறான். கதிர் என்ற லைட்மேன் அவனுக்கு வழிகாட்டுகிறார். நடிக்கும் வாய்ப்பு அவனுக்கு எங்கும் கிடைக்கவில்லை. நாயாய் பேயாய் அலைந்து, வெறுத்துப் போய், நடிகனாகும் முயற்சியை கைவிட்டு, லைட்மேன் வேலையில் சேருகிறான்.
எனினும், அவனுக்குள் உள்ள நடிப்பு தாகம் குறையவில்லை. ‘ராஜா ராணி’ என்ற பழைய படத்துக்கு மு.கருணாநிதி எழுதிய 5 நிமிட வசனத்தைப் பேசி, தன் நடிப்பு தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அதோடு முடிகிறது கதை.
படத்தின் முடிவில் நான்கு லைட்மேன்களின் நிஜ அனுபவத்தையும் படம்பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் நீங்கள் முதலில் படித்தது.
எல்லா ஹீரோக்களும் காலையில ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த உடனே உங்களால தான் நாங்க ஸ்க்ரீன்ல பளிச்சின்னு தெரியுறோம். நீங்க இல்லேன்னா நாங்க இல்லேன்னு ஆசையாப் பேசுவாங்க. சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்ச உடனே எதுவுமே தெரியாதது மாதிரி போயிடுவாங்க.
96-ல் சினிமாவுல பெரிய அளவுல ஸ்ட்ரைக் வந்துச்சு. அப்போ ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட சிரமமா இருந்துச்சு. ஒரு லைட்மேன் மனைவியோட தாலியைக்கூட விக்க வேண்டிய மோசமான சூழல். அந்த நேரத்துல அஜித் தான் எங்க லைட்மேன் குடும்பங்களுக்கு அரிசி, பருப்புன்னு சாப்பாட்டுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சார்.
நடிகர்கள்லேயே பிரபு, நெப்போலியன், அஜித் இவங்களைத்தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்கள எப்பவுமே எங்ககிட்ட அன்பாப் பேசுவாங்க.., சகஜமாகப் பழகுவாங்க. இந்த மாதிரி எங்ககிட்ட பேசினாலே, பழகினாலா போதும், எங்க மனசு மட்டுமில்ல, வயிறும் கூட நெறைஞ்சிரும் என்கிறது ஒரு லைட்மேனின் குரல்.
அது அவருடைய குரல் மட்டுமில்லை, சினிமா ஆசையில் ஊரை விட்டு ஓடி வந்து இன்று வரை ஜெயிப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் அத்தனை பேருடைய குரலாகத்தான் பார்க்க முடிந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top