8 எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்’. ஸ்ரீகாந்த், நீலம்உபாத்யாய், நரேன், வினோதினி நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் டி. சூர்யபிரபாகர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, ‘தயா’ செந்தில்குமார், சுப்ரமணியசிவா, ராஜேஷ்.எம் வெளியிட நடிகர் பரத் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் பேசும்போது “நான் சினிமாவுக்குப் புதியவன். அனுபவம் இல்லாததால் நிறைய இழப்புகளுக்குப்பின் பாடம் கற்றுக் கொண்டேன். எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்றாலும் அந்தத் தொழில் பற்றிய அனுபவமும், தொழில் நுட்பமும் இருந்தால் போதும். ஆனால் சினிமா எடுக்க இவை மட்டுமல்ல அரசியலும் வேண்டும். வேறுபலவும் தேவை. இதுதான் சினிமா.
பணம் உள்ள எல்லாரும் சினிமா எடுக்க முடியாது. இந்தப் படத்தின் மூலம் நிறைய ஞானம் பெற்றேன். இன்று இந்தத் தொழிலில் நம்பிக்கை குறைவாக இருக்கும் சூழல் உள்ளது. கடலில் போட்டதை கடலில்தான் தேடவேண்டும் என்பதைப் போல நான் சினிமாவில் விட்டதை சினிமாவில்தான் தேட வேண்டும். சினிமாவில் தேடுவேன். வெற்றி பெறுவேன். “என்று கூறினார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ‘தயா’ செந்தில்குமார் பேசும் போது : “நானும் 14 படங்களில் பலவித இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். புதியவர்கள் 7பேரிடமும் அனுபவசாலிகள் 7 பேருடனும் பணிபுரிந்து இருக்கிறேன். இரண்டு வகை இயக்குநர்களும் போராடியதைப் பார்த்திருக்கிறேன். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அவர்கள் நினைத்ததைத் தவிர எல்லாமே படத்தில் வந்திருக்கும். நாட்டில் பெண்கள் கற்பழிக்கப் படுவதாக செய்திகளில் பார்க்கிறோம்.
அது வருத்தப்படவேண்டிய விஷயம். கண்டிக்கப் படவேண்டிய விஷயம். நாட்டில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; சினிமாவில் ஆண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், இப்படி சினிமாவில் கற்பழிக்கப்பட்ட, கற்பழிக்கப்படுகிற இயக்குநர்கள் பலர். ஒவ்வொரு படத்திலும் அதுவும் முதல் படத்தில் கண்டிப்பாக நடக்கும். இதை எல்லா இயக்குநர்களும் அனுபவித்திருப்பார்கள். ஒரு படம் எடுத்து முடிந்ததும் டைரக்டரும் தயாரிப்பாளரும் சிலுவையில் அறையப் படுவார்கள். மறுபடியும் உயிர்த்தெழுவார்கள்.
மீண்டும் உயிர்த்தெழுந்துதான் இரண்டாவது படத்தையோ அடுத்த படத்தையோ எடுக்க வேண்டும். அவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தப் படத்தை இயக்கும் சூர்யபிரபாகர் என்னுடன் பணியாற்றியவர். கடுமையான உழைப்பாளி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்று கூறினார்
0 comments:
Post a Comment