↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தது எப்படி என்று பிடிபட்ட வேலைக்காரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அண்ணாநகர் கிழக்கு கியூ பிளாக் 15வது தெருவை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்தன் (61). அரும்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இதய சிகிச்சை நிபுணராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது மனைவி சாந்தி (47), தாயார் ஆண்டாள் (87) மற்றும் வீட்டு வேலைக்காரி மீனா (30) ஆகியோரை துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 119 சவரன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த நேரத்தில் டாக்டருக்கு படித்து வரும் ஆனந்தனின் மகன் வீட்டுக்கு வந்தார். தனது தாயாரும், வீட்டில் இருந்தவர்களும் கயிற்றால் கட்டிப் போடப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந் தார். உடனடியாக இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் தகவல் கொடுத் தார். அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலீசாருக்கு வேலைக்காரி மீனா மீது சந்தேகம் வலுத்தது.

அவரிடம் விசாரித்ததில் தனது கணவர் மற்றும் கூட்டாளிகளுடன் நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 2 தனிப்படையினர் மேற்கு வங்கத்திற்கு விரைந்துள்ளனர். பணி செய்த வீட்டிலேயே கொள்ளையடித்தது குறித்து போலீசாரிடம் மீனா கூறியதாவது: நான் கொல்கத்தாவில் உள்ள காரையா பகுதியை சேர்ந்தவள். எனக்கும், இம்ரான் (35) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பிழைப்பு தேடி சென்னை வந்தோம். ஒரு முறை ஆனந்தன் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். என் நிலையை பார்த்து அவர்கள் வீட்டில் வேலைக்கு சேர்த்தனர். என் பெயர் மீனா என்றும் அனாதை என்றும் அவர்களிடம் பொய் சொன்னேன். சீக்கிரத்தில் பணக்காரியாகும¢ ஆசையில் வேலை பார்த்த வீட்டிலேயே கொள்ளையடிக்க திட்டம் போட்டேன். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றேன். வரும்போது என் கணவர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பேர் என்னுடன் வந்தனர். அவர்கள் அரும்பாக்கத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர்.

சம்பவத்தன்று தங்கும் விடுதியில் தங்கி இருந்த எனது கணவருக்கு போன் செய்தேன். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தால் கொள்ளையடிக்க வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதன்படி, எனது கணவர் கூட்டாளிகளுடன் வந்தார். கதவை திறந்து நான்தான் அவர்களை உள்ளே அழைத்து வந்தேன். இது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாது. வந்தவர்கள் திட்டமிட்டபடி என்னையும் மற்றவர்களையும் கட்டிப் போட்டனர். திட்டமிட்டபடி துப்பாக்கி வைத்து மிரட்டி கொள்ளையடித்து தப்பினர். நாங்கள் யாரும் எதிர்பாராத விதமாக கொள்ளையடித்த ஒரு மணி நேரத்திலேயே டாக்டர் மகன் வந்து விட்டார். போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டார். இதனால், கணவர் மாட்டிக் கொள்வார் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் அதற்குள் தலைமறைவாகி விட்டனர். கொள்ளை சம்பத்தில் நான் ஈடுபட்டதை போலீசார் கண்டு பிடித்து விடமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் என்னை துல்லியமாக கண்டுபிடித்து விட்டனர் என்று மீனா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்போனில் கொள்ளையன் உருவம்

கொள்ளையர்கள் டாக்டர் ஆனந்தன் வீட்டிற்குள் நுழையும் காட்சி அவரது வீட்டு அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை பறிமுதல் செய்த போலீசார் அதன் மூலம் விசாரணை நடத்தினர். மீனாவின் செல்போனை பறிமுதல் செய்து அதை சோதனை செய்தபோது அதில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த ஒருவரின் புகைப்படம் இருந்தது. இது யார் என்று கேட்டபோதுதான் அது தனது கணவர் இம்ரான் என்று தெரிவித்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகை பணத்துடன் 5 பேரும் ஏதாவது லாரியில் ஏறி கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து மீனாவையும் அழைத்துக் கொண்டு நேற்று மாலையே 2 தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்தனர். அங்கு உள்ளூர் போலீசாரின் உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை விடுத்தும் பலன் இல்லை

கொள்ளை குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வீட்டில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது அவர்களின் பின்புலம் பற்றி நன்கு விசாரியுங்கள். அதன் பிறகே பணிக்கு அமர்த்துங்கள் என்று கமிஷனர் ஜார்ஜ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், இதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. மேலும், அனைவரது வீட்டிலும் அலுவலகத்திலும் கண்காணிப்பு கேமராவை பொருத்துங்கள் என்றும் கூறி வருகிறோம். இதையும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இந்த சம்பவத்திற்கு பிறகாவது மக்கள் போலீசாரின் அறிவுரையை கேட்க வேண்டும்“ என்றார். (Dinakaran)

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top