இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உருமாற நினைத்த இயக்குநர் பாலா, தற்போது தனது ‘பி ஸ்டூடியோஸ்’ சார்பில் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் அதர்வா-ஆனந்தியின் நடிப்பில் ‘சண்டிவீரன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தின் டிரெயிலரும், பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் கேமிராவில் காட்சிகளெல்லாம் அப்படியொரு அழகை காண்பித்திருக்கின்றன. அருணகிரியின் இசையமைப்பில் உருவான பாடல்கள் தாளம் போட்டு ரசிக்கும் அளவுக்கு இருந்தன.
விழாவில் அதர்வா பேசும்போது, “நான் ‘பரதேசி’யில் நடித்து முடித்தவுடன் அடுத்து ‘நான் தயாரிக்கும் பொழுதுபோக்கு படத்திலும் நீ நடிக்க வேண்டும்’ என்று பாலா சொல்லியிருந்தார். எனக்காக அவர் இன்னொரு பக்கம் கதையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் ஒரு பக்கம் கதை கேட்டேன்.
கதை சொன்னவர்களெல்லாம் இது பாலா தயாரிப்பு என்பதால் அவருக்குப் பிடித்ததுபோலவே கதை சொல்லி வந்தார்கள். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை.
இந்த நேரத்தில்தான் ஒரு நாள் பாலா திடீரென்று என்னை அவசரமாக அழைத்தார். நான் போய் சந்தித்தபோது அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ‘சற்குணம் சொன்ன கதையைக் கேட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கு. அதுல நீ நடிக்கணும்..’ என்றார். பாலாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து நான் கதை கேட்காமலேயே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரு வாரத்திற்குப் பிறகுதான் சற்குணம் ஸாரிடம் கதை கேட்டுத் தெரிந்து கொண்டேன். பிரமாதமான கதை. படத்தின் ஷூட்டிங்கெல்லாம் முடிஞ்சிருச்சு. படம் ரெடின்னு கூட சொன்னார் இயக்குநர்.
ஹீரோயின் ஆனந்தியை பத்தி சொல்லணும்னா அவர் ஒரு குழந்தை மாதிரி. குழந்தை மனம் கொண்டவர். ஆரம்ப நாட்களில் உற்சாகம் இல்லாமல்தான் இருந்தார். ‘ஏன்’னு ஒரு நாள் கேட்டேன். ‘எனக்கு டான்ஸ் ஆட ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல ஒரு பாட்டு சீன்கூட எனக்கு இல்லையே..?” என்று சொல்லி வருத்தப்பட்டார்.
இதை இயக்குநர் சற்குணத்திடம் சொன்னேன். அவர் ஆனந்தியை சந்தோஷப்படுத்துவதற்காகவே “உனக்காக ஒரு டூயட் பாடலை ரெடி பண்ணிருக்கேம்மா.. அதை நியூஸிலாந்துல போயி ஷூட் பண்ணப் போறோம். ரெடியா இரு..” என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டார்.
இதைக் கேட்டு சந்தோஷமான சந்தோஷம் ஆனந்திக்கு.. அதற்குப் பிறகு படப்பிடிப்புகளில் மிக உற்சாகமாக கலந்து கொண்டார். இதே மாதிரி அவரோட அம்மாகூட ‘எப்போ நியூஸிலாந்துக்கு போகணும்..? நிறைய வேலையிருக்கே. கொஞ்சம் முன்னாடியே சொன்னா தயாரா இருப்போம்’ன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. பாவம்.. கடைசியாத்தான் படம் முடிஞ்சவுடனே மெதுவா அது ‘பொய்’யின்னு சொல்லி கலாட்டா பண்ணிட்டோம்..” என்றார்.
ஹீரோயின் ஆனந்தியிடம் இதைப் பற்றி கேட்டபோது ஒருவித சலிப்புடன், “ஆமா ஸார்.. இயக்குநர் ரொம்ப நம்ப வைச்சு ஏமாத்திட்டார். நான் டான்ஸ் ஆடுறதுக்கு அவ்ளோ ஆசையா இருந்தேன்..” என்றார் செல்ல சிணுங்கலுடன்..!
அதனாலென்னம்மா..? தெலுங்குல ஒரு ஹிட் படத்துலயாவது நடிச்சிரு.. அதுக்கு பின்னாடி அகில உலகமே சுத்திரலாம்..!
0 comments:
Post a Comment