ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பால்கி.
இளையராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனுஷ் நடிகராகவும், அவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் பால்கி 'ஷமிதாப்' கதையை முதலில் அமிதாப் பச்சனிடம் தெரிவித்திருக்கிறார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு "நன்றாக இருக்கிறது, அந்த நடிகர் வேடத்தில் யாரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டு இருக்கிறார் அமிதாப் பச்சன்.

"ரஜினி அல்லது தனுஷ் மாதிரியான தென்னிந்திய நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும்" என்று கூற, "தனுஷிடம் பேசுங்கள்" என்று தனுஷுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

இப்படத்தின் மூலம் தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்வார் என்கிறது படக்குழு.