லிங்கா படத்தின் திரைக்கதை தொடர்பான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியது.
கதைத் திருட்டு புகாரின் பேரில், லிங்கா திரைப்படத்தை வெளியிடத் தடை கோரும் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் கே.ஆர்.ரவிரத்தினம் மேல்முறையீடு செய்தார்.
மனுவில், லிங்கா திரைக்கதையை எழுதியது தொடர்பாக ரஜினிகாந்தும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.
அதாவது, மூலக்கதையை பொன்குமரனும், திரைக்கதையை ரவிக்குமாரும் எழுதியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால், கதை, திரைக்கதையை தானே எழுதியதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பொன்குமரன் "கிங்காங்' என்ற பெயரில் லிங்கா கதையை பதிவு செய்திருந்ததாகக் கூறியுள்ளார். "கிங்காங்' கதை ஹிந்தியில் படமாக்கப்பட்டுவிட்டது.
இவ்வழக்கில் ரஜினி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய போதிய முகாந்திரம் இருந்தும், மதுரை மாநகர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவரங்களை கவனத்தில் கொள்ளாமல் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், தமிழக உள்துறை செயலர், டிஜிபி, ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments:
Post a Comment