இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய நேர்ந்தால் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இறுதிமுயற்சியாக அவர் தனது சகோதரர்களுடன் இணைந்து இராணுவ வழிகளை நாடலாம் என சர்வதேச உரிமை அமைப்பொன்று இன்று கடுமையான தொனியில் எச்சரித்திருக்கிறது.
இலங்கையில் ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் குறித்து பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் குழு (ஐ.சி.ஜி) இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னராக காலப்பகுதியிலும் தேர்தலை மையப்படுத்திய மிக மோசமான வன்முறைகள் தீவிரமடையலாம் என்றும் எச்சரித்துள்ளது.
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலும், நெருக்கடிகளும் அதற்கான வாய்ப்புகளும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே ஐ.சி.ஜி இந்தக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தத் தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிட தகுந்த வேட்பாளர் ஒருவர் இல்லை என்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அவரது அடிமட்ட மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க அவரது கட்சியின் முன்னார் பொதுச் செயலாளர் களமிறங்கியிருப்பது சரியான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அது தெரிவித்திருக்கிறது.
“மைத்திரிபால சிறிசேன களமிறங்கியிருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமே. இந்தத் தேர்தலில் சிறிசேன வெற்றிபெறுவாராயின், ஜனாதிபதியும், அவரது சகோதரர்களும், தமது ஆட்சியைத் தக்கவைக்க உச்ச நீதிமன்றத்தை அரசியல் ரீதியாக அடிபணியவைத்தல் மற்றும் இராணுவத்தைப் பிரயோகித்தல் போன்ற இறுதிவழிமுறைகளை நாடலாம்,” என்று ஐ.சி.ஜி கடுமையான தொனியில் எச்சரித்திருக்கிறது.
ஆகவே, சர்வதேச சமூகம் சிறிலங்கா மீது தீவிர கவனத்தை செலுத்தவேண்டுமென்றும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிற்கும் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தெளிவான செய்தியைத் தெரிவித்தால் தேர்தல் வன்முறைகளை தடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்முறையாக இலங்கையில் எதிர்கட்சிகள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக பலமான எதிரணியொன்றை உருவாக்கியுள்ளதாகவும், இது ஜனாதிபதிக்கும், அவரது சகோதரர்களுக்கும் கடுமையான சவாலாக அமைந்திருக்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு அதன் சர்வதேச கடப்பாட்டை நினைவுபடுத்தியுள்ள ஐ.சி.ஜி என்ற அந்த அமைப்பு, அதனை நிறைவேற்றத் தவறினால் பாரிய ராஜந்திர விளைவுகள் அவர்கள் சந்திக்க நேரிடும் என சர்வதேசம் எச்சரிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment