↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அனுஷ்கா ஷர்மாவால் உலக கோப்பை அரையிறுதியில் விராட் கோஹ்லி சொதப்பல் ஆட்டம் வெளிப்படுத்தினார் என்ற விமர்சனங்களுக்கு உடனடியாக பாய்ந்து வந்து பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி கேப்டன் டோணியை, தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்யும் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ்சிங்கை கண்டிக்காதது ஏன் என்பது டோணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

கடந்த டி20 உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ்சிங் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதில் இந்தியா தோற்றபிறகுதான், யுவராஜ்சிங் அணி தேர்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

கடைசி குடிமகனுக்கும் தெரிந்த இந்த விஷயம், முன்னாள் கிரிக்கெட்டரான யோக்ராஜ்சிங்கிற்கு இது தெரியாமலா இருக்கும். அப்படியிருந்தும், யுவராஜ்சிங் தேர்வில் டோணியின் குறுக்கீடு இருப்பதாக கூறி, உலக கோப்பை தொடருக்கு முன்பாகவே திரி கொளுத்தி போட்டார் யோக்ராஜ்சிங்.

ஆனால், ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் மீண்டும் பேட்டியளித்த யோக்ராஜ்சிங் முன்பைவிட மோசமாக டோணியை திட்டி தீர்த்துள்ளார். 2011 உலக கோப்பை பைனலில், யுவராஜ்சிங் இறங்க வேண்டிய நேரத்தில், டோணி களமிறங்கி நல்ல பெயரை தட்டி சென்றுவிட்டார் என்றும், டோணி பிச்சை எடுப்பார், நான் பத்திரிகையாளராக இருந்திருந்தால், டோணியை அடித்திருப்பேன், டோணி ராவணனை போல அகங்காரம் கொண்டவர் என்றெல்லாம், தெருவில் நின்று கொண்டு சண்டைக்காரர்களிடம் தகராறு செய்யும் நபரை போல பேட்டி கொடுத்துள்ளார் யோக்ராஜ்சிங்.

2011 பைனலில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் சொற்ப ரன்னில் நடையை கட்டிய நிலையில், ஒன் டவுன் பேட்ஸ்மேன் கோஹ்லி ஓரளவுக்கு ரன் எடுத்துவிட்டு வெளியேறினார். அப்போது முழுக்க இலங்கை கை ஓங்கியிருந்தது. இக்கட்டான நேரத்தில் டோணி, தானே களமிறங்கி கடைசிவரை நாட்-அவுட்டாக நின்று வெற்றிக் கனியை தட்டிப் பறித்தார்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திலும் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பது யாராலும் முடியாது. ஒரு பந்து, மொத்த போட்டியையும் மாற்றிவிடும். அப்படியிருக்கும்போது, ஏதோ 50 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் டோணி இறங்கி வெற்றி பெற்று ஹீரோவானது போல யோக்ராஜ்சிங் பேசியுள்ளது கிரிக்கெட் பற்றி தெரிந்த அனைவருக்கும் வயிற்றெரிச்சலான விஷயம்தான். இந்த லாஜிக்கை யுவராஜ்சிங்கே கூட ஏற்கமாட்டார். ஒருவேளை டோணி சொற்ப ரன்னில் அவுட் ஆகியிருந்தால், முன்கூட்டியே களமிறங்கியதற்காக எத்தனை விமர்சனங்களை அவர் சந்தித்திருக்க வேண்டிவந்திருக்கும்? ஆனால் ஒரு அணியின் தலைவராக ரிஸ்கை தனது தலைமீது சுமந்தவர் டோணி.

இத்தனைக்கும், இந்திய கிரிக்கெட் அணியில், முழுக்க, டோணி சாம்ராஜ்யம் நடப்பதாக கூறுவதும் உண்மைக்கு புறம்பானதே. டோணிக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகளால்தான், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரின் நடுவிலேயே டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது பெரும் வதந்தியாக பரவியது அனைவரும் அறிந்ததே. அவரது இருப்பையே காப்பாற்றிக்கொள்ள முடியாத டோணியா, மற்றொரு மகத்தான வீரருக்கு அணை போட முடியும்.

இதெல்லாம், யோக்ராஜின் திருதிராஷ்டிரருக்கு ஒப்பான, குறுகிய பார்வைக்கு வேண்டுமானால், தெரியாமல் இருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்களுக்குமா தெரியாது. சச்சினோ, கங்குலியோ, டிராவிட்டோ இதுவரை யோக்ராஜ்சிங் குற்றச்சாட்டை கண்டிக்கவில்லையே ஏன். அனுஷ்கா மைதானத்திற்கு வந்ததால்தான், கோஹ்லி சொதப்பலாக ஆடி உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்க காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு ரசிகர்களால் முன் வைக்கப்பட்டபோது, கொந்தளித்த இதே கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் தொடர்பான பிற முக்கிய புள்ளிகளும், டோணியை இவ்வளவு கேவலமாக சக வீரரின் தந்தை விமர்சிப்பதை கண்டும், காணாமல் இருக்கின்றனர். இது டோணியை தனிமைப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.


மாஜி வீரர்கள் மவுனத்திற்கு இரு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, நாம் பேச நினைத்ததை யோக்ராஜ் சிங் பேசிவிட்டார் என்ற பூரிப்பு, மற்றொன்று, யோக்ராஜ்சிங் ஒரு பெரிய ஆள் என்று அவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால், கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவிற்கு வந்த பிறகு இந்த லாஜிக்கெல்லாம் எடுபடாது மிஸ்ட்டர் எக்ஸ் பாய்ஸ்.

இந்த விவகாத்தில், டோணிக்கு இருக்கும் ஒரே ஆதரவு, ரசிகர்கள் சப்போர்ட்தான். யோக்ராஜ்சிங் பேட்டி வெளியானது முதலே, டிவிட்டரில் டோணிக்கு ஆதரவாகவே கருத்துகளை பதிந்துவந்தனர் ரசிகர்கள். யோக்ராஜ்சிங்கை மனநலம் பாதித்தவர் என்ற அளவுக்கு விமர்சனம் செய்து கொட்டி தீர்த்துவிட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top