↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நாட்டின் கல்வித் துறைக்கு பொறுப்பான அமைச்சர்களின் கல்வித் தகுதி தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. கல்வித்துறை இணை அமைச்சரான ஆர்.எஸ். கதேரியா தமது மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அப்போது கல்வித்துறையை கவனிக்கும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்ற சர்ச்சை வெடித்தது. அத்துடன் 2004ஆம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் அஞ்சல்வழியில் பிஏ படிப்பதாக கூறியிருந்தார். ஆனால் லோக்சபா தேர்தலின் போது பிகாம் முதல் பாகம் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாகிவிட என் கல்வித் தகுதியை பார்க்காதீர்கள்.. பணியை பாருங்கள் என்று வசனம் பேசினார். சிறிது காலம் கழித்து அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுவிட்டேன் என்றும் கூறினார். ஆனால் அது பயிற்சிக்கான சான்றிதழ் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அண்மையில் மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.எஸ். கதேரியாவும் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரானார். தற்போது கல்வித்துறையை கவனிக்கும் மனித வளமேம்பாட்டுத் துறை இணை அமைச்சரும் கல்வி குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பிஏ படித்த கதேரியா, இந்தி இலக்கியப் பாடத்தில் 43, ஆங்கில மொழிப் பாடத்தில் 42 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

ஆனால் ஆக்ரா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த போது போலி மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்திருக்கிறார். அதில் இந்தி இலக்கியத்தில் 53, ஆங்கில மொழிப் பாடத்தில் 52 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக திருத்தப்பட்டுள்ளது. அத்துடன் எம்.ஏ 2வது ஆண்டு மதிப்பெண் பட்டியலிலும் மோசடி செய்திருக்கிறார். இலக்கியம் தொடர்பான படிப்பில் 38 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கார். ஆனால் அவர் கொடுத்திருக்கும் போலி மதிப்பெண் பட்டியலில் 72 மதிப்பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கதேரியா, 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் என்னிடம் தோல்வி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இது போல ஒரு வழக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார். அத்துடன் மாயாவதி தலைமையிலான உ.பி. அரசு விசாரணை நடத்தி என் மீது எந்த தவறும் இல்லை என்று கூறிவிட்டது என்கிறார்.

மத்திய இணை அமைச்சர் கதேரியா மீது மொத்தம் 27 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் இந்த மதிப்பெண் பட்டியல் மோசடி வழக்கானது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 420-ன் கீழ் செய்யப்பட்டுள்ளது. . தற்போது அந்த வழக்கு ஆக்ரா அமர்வு நீதிமன்றத்தில் வரும் 26ம் தேதிக்கு விசாரணை வருகிறது. இந்த வழக்கில் கதேரியா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன் பல ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடாத நிலைமை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top