↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சென்னை விமான நிலைய இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் உள்ளிட்ட 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். காவல்துறை வரலாற்றில் டிரான்ஸ்பர் என்பது பெரிய விசயமில்லை என்றாலும் திடீரென விமானநிலைய இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டது ஏன் என்று கேள்வி எழாமல் இல்லை. வைகோவை வரவேற்க விமானநிலையத்தில் குவிந்த மதிமுக தொண்டர்கள் மீது உடனடியாக வழக்கு பதியாமல் விட்டதே இந்த அதிரடி இடமாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னை வந்தார். பினாங்கில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய வைகோவை அக்கட்சி தொண்டர்கள் வரவேற்க குவிந்தனர். கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் வைகோவை வரவேற்க பன்னாட்டு முனையத்தின் வருகை பகுதி வரை சென்றனர். வழக்கமாக கார் நிறுத்துமிடம் வரை மட்டுமே அரசியல் கட்சித் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் விமான நிலைய போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாததால் தொண்டர்கள் வரவேற்க கூடிய எல்லைப்பகுதியை கடந்து சென்றனர். இதில் போலீசாருக்கும் ம.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதமும் ஏற்பட்டது. 

சாரட் வண்டியில் ஊர்வலம் 
வைகோவை சாரட் வண்டியில் சிறிது தூரம் ஊர்வலமாக அழைத்து வர தொண்டர்கள் விரும்பி சாரட் வண்டியை கொண்டுவந்தனர்.ஆனால் அனுமதி அளிக்க போலீசார் மறுத்ததால் சாரட் வண்டியிலிருந்து தொண்டர்களிடம் பேசினார் வைகோ. அதன் பிறகு சிறிது தூரம் ஊர்வலமாக நடக்க முயன்ற வைகோவை தடுத்து அவருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆய்வாளர்.

போலீசாரிடம் வாக்குவாதம் 
வைகோ போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். விமான நிலையத்தில் ஊர்வலமாக செல்ல அனுமதிக்காததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வைகோ தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

உள்துறை அமைச்சகத்திடம் புகார் 
பின்னர் விமான நிலைய உயர் அதிகாரிகளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் அரசியல் கட்சி பிரமுகர்கள் "வருகைப் பதிவு" இடம் வரை அத்துமீறி நுழைந்து வருவதை எப்படி அனுமதித்தீர்கள் என்று விமான நிலைய போலீசாரிடம் விளக்கம் கேட்டனர். உள்துறை அமைச்சகத்திடமும் புகார் கொடுக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி கட்சி பிரமுகர்கள் விமான நிலையத்திற்குள் புகுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படுவதை எடுத்து கூறினர்.

உத்தரவிட்ட கமிஷனர் 
இந்த பிரச்சினை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய பாதுகாப்பில் எவ்வித குளறுபடியும் குந்தகமும் ஏற்படாத வகையில் போலீசார் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். 

400 பேர் மீது வழக்கு 
இதைத் தொடர்ந்து விமானநிலைய ஆணைய விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்பட 400 பேர் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிரடி மாற்றம் 
இந்த நிலையில் சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மகிமை வீரன், அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். மைலாப்பூர் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் விமான நிலையத்திற்கு நியமிக்கப்பட்டார். 

திமுக - மதிமுக 
கூட்டணிக்கு இதற்கு முன்னர் பிஜேபி பிரமுகர்கள் உட்பட பலர் விமான நிலையத்தில் கூட்டம் போட்டுள்ளனர் அப்போதெல்லாம் அவர்கள் மீது வழக்கு இல்லை. ஆனால் மதிமுகவினர் 400 பேர் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளது. 

முப்பெரும் விழாவில் 
ஏற்கெனவே தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘‘ஜனநாயகத்தை காப்பாற்ற, பணநாயகத்தை வீழ்த்த, சர்வாதிகாரம் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்'' என்று பேசியுள்ளார். 

மதிமுக மாநாட்டில் 
பூந்தமல்லியில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் வைகோவும் தி.மு.க.வை ஆதரித்து பேசினார். அவர் பேசும்போது, ‘‘தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்து முன்னணியில் இருந்தது. இப்போது கடைசி மாநிலமாகி விட்டது. எதிரியை நாங்கள் முடிவு செய்து விட்டோம். எதிரியை வீழ்த்துவதற்கு நண்பனை ஆதரிப்போம்'' என்று பேசினார். 

கருணாநிதி கண்டனம் 
ஜெயலலிதா கைதை கண்டித்து கலிங்கப்பட்டியில் வைகோ வீட்டுமுன்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் நடத்த அனுமதி அளித்து அதன் மூலம் பிரச்சினை செய்தனர். கருணாநிதி அதை கண்டித்து அறிக்கை விட அதன் மூலம் பகை குறைந்து உறவு துளிர்த்தது.

கூட்டணிக்கு வரவேற்பு 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமணவிழாவில் வைகோவும், ஸ்டாலினும் சந்தித்து பேசியது கூட்டணிக்கான அச்சாரமாக பேசப்பட்டது. கூட்டணி அமைந்தால் வரவேற்பதாகவும் கருணாநிதி கூறினார். ஆனால் தாங்கள் இன்னமும் பாஜக கூட்டணியில் இருப்பதாகத்தான் வைகோ கூறியுள்ளார். தற்போது மதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் தமிழக போலீசாரே அக்கட்சியை திமுக திசைக்கு தள்ளிவிடுகிறார்களோ என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top