தீபாவளிக்கு முதல் நாள், அதாவது வரும் 22-ம் தேதியே ரிலீஸாகும் சூழலில் இருக்கும் ‘கத்தி’யின் கழுத்தில் இன்னமும் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது..
பிரதான அரசியல் கட்சிகளெல்லாம் களத்தில் இல்லாமல் ஒதுங்கிக் கொள்ள.. தமிழீழத்தை விரும்பும் மாணவர் இயக்கங்கள்தான் சோர்ந்து போகாமல், இடைவிடாமல் ‘கத்தி’ படத்திற்கெதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து கத்தி படத்திற்கெதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்து வருபவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
ஒரு மாதத்திற்கு முன்பாகவே இது பற்றி ஒரு கூட்டத்தைக் கூட்டி ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எச்சரிக்கை விடுத்தார்கள் இந்த அமைப்பினர்.
ஆனால் அதையெல்லாம் ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளிவிட்டு ‘படம் தீபாவளி ரிலீஸ்’ என்று தைரியமாக அறிவித்த பின்பு இவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன..?
அடுத்தது என்ன என்று யோசிக்க இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டனவாம். அது பற்றி கூட்டம் முடிந்த பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.
“எங்களது சுய விளம்பரத்திற்காக ‘கத்தி’ படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனே தனக்கும் இலங்கை விமானத் துறைக்கு வர்த்தகத் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்..?
‘கத்தி’ படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும், எங்களை மதிக்காமல் ‘படம் தீபாவளிக்கு ரிலீசாகும்’ என்று இப்போது அறிவித்து இருக்கிறார்கள்.
‘கத்தி’ படத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம், ‘இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடாதீர்கள்’ என்று நாங்கள் வலியுறுத்த இருக்கிறோம்.
‘இது ராஜபக்ஷே ஆதரவாளார்களால் தயாரிக்கப்பட்ட படம்’ என்பதற்கான ஆதாரங்களை திரையரங்கு உரிமையாளர்களிடம் காண்பித்து, ‘தயவு செய்து கத்தி படத்தை வெளியிடாதீர்கள்’ என்று கேட்க இருக்கிறோம்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து கட்சியினர், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து, தத்தமது மாவட்டகளில் இருக்கும் திரையரங்குகள், விநியோகஸ்தர்களை சந்தித்து இந்தப் படத்தைத் திரையிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் இது விஷயமாக சந்தித்து பேச இருக்கிறோம்.
‘கத்தி படத்தின் சேனல் ரைட்ஸை ஜெயா டி.வி. வாங்கிவிட்டது’ என்று படக் குழு கூறி வருவது ஒரு ராஜதந்திர நடவடிக்கை. ஜெயா டி.வி. நிறுவனம் இப்படத்தை வாங்கவில்லை. ஜெயா டி.வி. நிர்வாகத்திடம் நாங்கள் இது பற்றி கேட்டபோது, ‘அவர்கள் தேவையில்லாமல் எங்களது பெயரை இழுக்கிறார்கள்..’ என்றும், ‘கத்தி படத்தை நாங்கள் வாங்கி விட்டோம் என்பது பொய்யான செய்தி’ என்றும் கூறினார்கள்.
லைக்கா நிறுவனர் ‘எங்களது 2 நாள் வருமானம்தான் இந்தக் கத்தி திரைப்படத்தின் தயாரிப்புச் செலவு’ என்று கூறினார் அல்லவா..? அப்படியென்றால், வேறு ஏதாவது ஒரு நலிந்த தயாரிப்பாளரிடம் இந்த படத்தைக் கொடுத்து வெளியிடச் சொல்லட்டும். நாங்கள் எதிர்க்கவில்லை. இல்லையேல்.. நடிகர் விஜய்யே இந்தப் படத்தை தன் பெயரில் வாங்கி வெளியிடட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை.
இதையும் மீறி லைக்காவின் பெயரிலேயே இந்தக் ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வந்தால், ஜனநாயக ரீதியில் எங்களது எதிர்ப்பை நிச்சயம் பதிவு செய்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார் வேல்முருகன்..!
இவங்க ஒரு முடிவோடதான் இருக்காங்க.. நம்ம சினிமாக்காரங்க என்ன முடிவுல இருக்காங்களோ..? தெரியலை..!
0 comments:
Post a Comment