அரைமணி நேர ‘ஜாமீன்’ மகிழ்ச்சியில் பட்டாசு, லட்டு குத்தாட்டம் என அ.தி.மு.க.வினர் கட்சித்தலைவி வெளியில் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் தலைமைக்கழகம் தொடங்கி தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
அதே உற்சாக மனநிலை கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ள பகுதியில் குவிந்திருந்த அ.தி.மு.க.வினரிடமும், ஜெ. சிறைப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா ஜெயில் முன்பாகத் திரண்டிருந்த கட்சிக்காரர்களிடமும் களைகட்டியிருந்தது.
பின்னர், ஜாமீன் மனு நிராகரிப்பு என்ற உண்மையான தகவல் வெளியாக... அத்தனை இடங்களிலும் சட்டென நிலைமை மாறி, அழுகுரலும் வேதனையும் பெரிதாக வெளிப்பட்டது. அவர்களால் நம்ப முடியவில்லை. முதலில் கொடுத்த ஜாமீனை ரத்து செய்து விட்டார்களோ என்று குழம்பினர். தவறான தகவலைச் சொன்னவர்கள் யார் என்று கோபப்பட்டனர்.
ஜெ. உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயங்கார் சமுதாயத்தவர். சட்டத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடியவர். வழக்கின் தன்மையின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்குவதில் இவரை குன்ஹாவுக்கு சகோதரர் என்று சொல்கிறார்கள் கர்நாடக நீதித்துறையினர்.
கம்யூனிசக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட சந்திரசேகரா, ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்டவர். இவரும் கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதியான ஸ்ரீதர்ராவும் நண்பர்கள். இந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் ஜாமீன் மீது அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அவர்களின் பேச்சிலும் அது வெளிப்பட்டது.
வழக்கறிஞர்கள் மணிசங்கர், செந்தில் அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முதலில் வர, அடுத்து நவநீதகிருஷ்ணன் வந்தார். அவருக்குப் பின் ராம்ஜெத்மலானி அணியும் அரசு வழக்கறிஞர் அணியும் வந்திறங்கியது. 10:35 மணிக்கு சிரித்த முகத்துடன் கோர்ட்டுக்கு வந்தார் சந்திரசேகரா.
ஜெ.வின் வக்கீல் ராம்ஜெத்மலானியிடம் அ.தி.மு.க. வக்கீல்கள், "நம்ம பெட்டிஷன் 73வதாக உள்ளது. ஆனால் நீங்கள் அவசரமாக புறப்பட வேண்டியிருப்பதைச் சொல்லி முதல் வழக்காக எடுக்கச் சொல்லுங்கள். நீதிபதி ஒப்புக் கொள்வார் என புன்னகையுடன் சொன்னார்கள். அதை நம்பி ஜெத்மலானி ஜெ.வின் மனுவை முன்கூட்டியே எடுக்கக் கோரினார்.
"எல்லா வக்கீல்களுக்கும் வேலை இருக்கிறது' என்று சொல்லி... "வரிசைப்படிதான் மனு விசாரணைக்கு எடுக்கப்படும்' என்றார் சந்திரசேகரா. அவர் பரிசீலித்த வழக்குகளில் ஒன்று ஜாமீன் வழக்கு. "கொலைக் குற்றத்துக்கு ஜாமீன் இல்லை' என அவர் மறுத்ததால், ஜெ. தரப்பு வக்கீல்கள் பதட்டமாயினர்.
11:30 மணிக்கு ஜெ.வின் வழக்கை விசாரிக்கத் தொடங்கினார் நீதிபதி. அவரிடம், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய தீர்ப்பு மற்றும் தங்கள் வாதங்கள் முழுவதும் அடங்கிய எழுத்துப்பூர்வமான நகல் இரண்டையும் கொடுத்து வாதங்களைத் தொடங்கினார் ஜெத்மலானி.
அவரைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன் சார்பில் அமித் தேசாய், இளவரசிக்காக அஸ்மத் பாஷா ஆகியோர் வாதாடினார்கள். குன்ஹாவின் தீர்ப்பு தவறு என்பதே அவர்களின் முதன்மை வாதமாக அமைய, "ஜாமீனை அதிகம் வலியுறுத்தவில்லையே'' என அ.தி.மு.க. வக்கீல்கள் கவலையோடு கவனித்தனர்.
அரசு தரப்புக்காக வாதாடிய பவானிசிங் எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பை சமர்ப்பித்திருந்த போது, குற்றவாளிகள் தரப்பிலான வாதம் முடிந்த பிறகு தன்னுடைய வாதத்தில், "ஜெ.வையும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் நிபந்தனை ஜாமீனில் விட எந்தத் தடையுமில்லை' என்றார்.
அ.தி.மு.க. தரப்பில் மகிழ்ச்சி பொங்கியது. அப்போது நீதிபதி சந்திரசேகரா, "பெயில் பற்றி எனது ஆர்டரில் சொல்கிறேன்' என்றதும் அ.தி.மு.க.வினரின் நம்பிக்கை இரு மடங்கானது. ஜாமீன் கிடைத்து விட்டதாகவே உள்ளிருந்து செய்திகளை அனுப்ப, அதுதான் அரைமணி நேர உற்சாகக் கொண்டாட்டங்களுக்கும் வாண வேடிக்கைகளுக்கும் வழிவகுத்தது.
தனது தீர்ப்பின் தயாரிப்புக்காக சிறிதுநேரம் எடுத்துக்கொண்ட நீதிபதி சந்திரசேகரா, அதன்பின் அளித்த தீர்ப்பில், "சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இப்ராகிம் கலிபுல்லாவும் ஜெ.வுக்கு சாதகமாக பல தீர்ப்புகளை வழங்கிய பி.எஸ்.சவுகானும் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தீர்ப்பை உதாரணமாக எடுத்துக்காட்டி, "ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. ஊழல் ஓர் அரசின் நிர்வாக எந்திரத்தையே செயலிழக்க வைத்து, தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சிக்கு வழியமைத்துவிடும்.
ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் ஜெ.வை குற்றவாளி என அவர் தீர்ப்பளிக்கவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் 6 அம்சங்களின் கீழ் அவர் தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு உடனே ஜாமீன் வழங்க வேண்டும் என சட்டம் சொல்லவில்லை. அரசு வழக்கறிஞர் பவானிசிங் எழுத்துப்பூர்வமாக எதிர்த்தார். வாதிடும் போது ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை. இது ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. லாலு, பத்து மாதம் சிறையிலிருந்த பிறகுதான் ஜாமீனில் வந்தார்.
எனவே ஜெ.வின் ஜாமீன் மனுவை நிராகரிக்கும் உரிமை கோர்ட்டுக்கு உள்ளது'' என நால்வரது ஜாமீனையும் நிராகரித்தவர், "அப்பீல் மனு மீதான விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்'' என்றார்.
இந்த ஒரிஜினல் தீர்ப்பு ஃப்ளாஷ் ஆனபோது... ஆரம்பத் தகவலின் அடிப்படையில் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். பட்டாசு சத்தம் நின்று, கதறல்கள் அதிகமாயின.
ஜாமீன் மனு மீதான உத்தரவு பற்றி நம்மிடம் பேசிய கர்நாடக சட்ட வல்லுநர்கள், "ஜெ.வின் வழக்கறிஞர்கள் மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சித்தார்கள். ஜெ.வை ஜாமீனில் விடுவிப்பது, அதே நேரம் தீர்ப்புக்கு தடை கோர முயற்சிப்பது, மூன்றாவதாக டி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிரான அப்பீல் மனுவை ஏற்க செய்வது. இதில் மூன்றாவதில் மட்டும்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
ஜாமீனையும், தீர்ப்பை ரத்து செய்யக் கோரியதையும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி நிராகரித்துவிட்டார் நீதிபதி சந்திரசேகரா.
ஜெ., இனி சுப்ரீம் கோர்ட் போகலாம். அங்கும் நீதிபதி சந்திரசேகரா கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பு பெற போராடவேண்டும்.
ஏற்கனவே குன்ஹாவின் தீர்ப்பை சுமந்து கொண்டிருக்கும் ஜெ.வின் முதுகில் கூடுதல் சுமையை தனது தீர்ப்பு மூலம் ஏற்றி வைத்துள்ளார் நீதிபதி சந்திரசேகரா என்கிறார்கள் விரிவாக.
0 comments:
Post a Comment