↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படம் வெளியாகும் அரங்குகளை முற்றுகையிடப் போவதாக மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. இது தொடர்பாக முற்போக்கு மாணவர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு, இளைய தமிழ்ப்புலிகள், மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் தீபாவளிக்கு லைகா தயாரிக்கும் ‘கத்தி' படம் திரைக்கு வருவதாகவும், இன்று அந்த படத்தின் முன்மாதிரி காட்சிகள் வெளியிட இருப்பதாகவும் பத்திரிகைகள் மூலம் தெரிய வந்துள்ளோம்.

தங்களிடமும் மற்றவர்களிடமும் நேரடியாக அல்லது பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் மூலமாக ‘சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் கூட்டாளிதான் லைகா நிறுவனர் சுபாஷ்கரன்' என்பதை ஆதாரங்களுடன் சமர்ப்பித்து இருந்தோம். மேலும், இது சம்பந்தமான எதிர்ப்பினை பல இடங்களில் பல விதங்களில் நாங்கள் தெரிவித்து வருகிறோம். ஒருவர் தன்னை ‘லைகா தரப்பு' என்று கூறி, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது நாங்கள் "லைகா வெளியேறினால் எதிர்க்க மாட்டோம்" என்று கூறினோம். இரண்டாவது நாள், "வடபழனியில் இருக்கும் பழைய ரம்பாவின் வீட்டில் படப்பிடிப்பு நடக்கிறது" என்றும், "உங்களை முருகதாஸ் பார்க்க விரும்புகிறார்" என்றும் சொல்லி எங்களை அழைத்து சென்றார். அங்கு முருகதாஸை சந்தித்த நாங்கள், எங்களுடைய நிலைப்பாட்டை எடுத்து கூறினோம். அப்பொழுது அவர், "கத்தி' படம், லைகாவுடன் ஒப்பந்தம் போடப்பட்ட படம் இல்லை" என்றும், நான் ஐயங்கரன் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் போட்டு உள்ளேன்" என்றும் கூறினார். மேலும், "லைகா இதனுள்ளே இருப்பது, பட பூஜையின்போது எனக்கு வந்த காசோலையை வைத்துதான் தெரிந்து கொண்டேன்" என்றும் கூறினார். 

"பின்னர் லைகா தொடர்பான சர்ச்சைகள் பற்றி ஐயங்கரன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அனைத்தையும் அவர்கள் மறுத்தார்கள். அதனால் படத்தினை தொடர்ந்தேன்" என்றும், "எனக்கு இதுவரை லைகா பற்றிய முழு தகவல்களும் கிடைக்க வழி இல்லை. நானும் விஜய்யும் குறுகிய வட்டத்திற்குள் பயணிப்பவர்கள்" என்றும் கூறினார் "நானும் விஜய்யும் என்றும் தமிழீழ ஆதரவாளர்கள்" என்றும் கூறினார். "விஜய்யும் நானும் ஒருநாள் இந்த பிரச்சனைகளைப் பற்றி தனியாக பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ‘இவை அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் தயாரிப்பாளரை மாற்றி விடக்கூடாது?' என்றும், ‘அவர்களைப் பற்றிய உண்மைகளை எப்படி தெரிந்து கொள்வது?' என்றும் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். ஆகவே, நீங்கள் அது சம்பந்தமான ஆதாரங்களை, படம் வெளிவருவதற்கு முந்தின நாள் எனக்கு கொடுத்து உதவினீர்கள் என்றாலும், என் பிள்ளைகள் மேலும், சாப்பிடும் சாப்பாட்டின் மீதும் சத்தியமாக, படத்தினை விட்டு லைகாவை நானும் விஜய்யும் வெளியேறி விடுவோம். 

ராஜபக்சேவின் தொடர்பில் இருப்பவனிடம் தான் நாங்கள் படம் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என்ற ஈனத்தனமான புத்தி எங்களுக்கு இல்லை," என்று கூறி, அவரின் ஆதரவையும், தமிழ் ஈழ உணர்வுகளையும் வெளிப்படுத்தியதை அடுத்து அங்கிருந்து நாங்கள் வெளியேறினோம். பின்னர் தகுந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க முற்பட்டபோது, சந்திக்க முடியாமலேயே போய் விட்டது. அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த ஆதாரங்களை வெளியிட்டு, மக்கள்முன் வைத்தோம். பின்னர் சென்னை வந்து செய்தியாளர்களை சந்தித்த சுபாஷ்கரன், "எங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று முதலில் கூறிவிட்டு, பின்னர் இறுதியில் தொடர்பு இருப்பதை அவரே கூறி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். 

தமிழ் திரைப்பட உலகத்தினர் சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, "அவருக்கு நாங்கள் துணையாய் இருக்கிறோம்" என்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அத்தனை கோடி தமிழர்களின் சார்பில் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார் என்பதையும், அதனை நடைமுறைக்கு கொண்டு வர துணை நிற்கவேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டு உள்ளோம். இவை அனைத்தையும் முருகதாஸ் மற்றும் விஜய் கருத்தில் கொள்ளாமல், ‘கத்தி' படத்தினை தீபாவளிக்கு லைகாவின் பெயரிலையே திரைக்கு கொண்டு வந்தால், ‘தமிழர்கள் எத்தனை பேர் செத்தால் எமக்கு என்ன வந்தது? எங்களுக்கு அன்னா ஹசாரே, ராகுல் காந்தி, மோடி, ஆமீர்கான் மட்டுமல்ல, தமிழகத்தின் ஒன்றுமே அறியாத அப்பாவி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் எவரை பற்றியும் கவலைப்படாமல் இக்காரியத்தை செவ்வனே செய்வோம் என்று நடந்துகொண்டால், அது விபச்சாரத்திற்கு சமம் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆம், இக்காரியம் எம்மை பொறுத்தமட்டில் பணத்திற்காக இனத்தை வைத்து விபசாரம் செய்வது போலத்தான். ஆகவே, தயவுகூர்ந்து தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வேலைகளையும் கூர்ந்து கவனித்து, இப்படத்தினை தடுத்து நிறுத்தி, சிங்கள இனவெறியர்களின் கூட்டாளியான சுபாஸ்கரனின் லைகாவை வெளியேற்றி விட்டு, அதன்பிறகு படத்தினை வெளியிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அப்படி தாங்களும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, படம் லைகாவின் தயாரிப்பிலேயே வெளிவருமேயானால், மாணவர்களாகிய நாங்கள் இப்படம் வெளிவரும் திரையரங்குகளின் முன்னால் ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தவேண்டிய கட்டயத்திற்கு ஆளாவோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்".

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top