சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.
37 வயதான அஜ்மல் தனது பந்துவீச்சு முறையைத் திருத்திக் கொண்டதை அடுத்து, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளத.
இலங்கையின் காலி மைதானத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுந்தது. அதேபோல, வங்கதேசத்தைச் சேர்ந்த சோஹக் காஸியின் பந்துவீச்சு மீதும் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் இருவரது பந்துவீச்சு குறித்தும் சோதிக்கப்பட்டது. இருவரும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 15 டிகிரிக்கும் மேல் மணிக்கட்டை சுழற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை. விளையாட்டு சோதனை மையத்தில் இருவரும் கடந்த மாதம், தங்கள் பந்துவீச்சை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த மையம் அவர்கள் இருவரது பந்துவீச்சும் முறையாக இருப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து ஐசிசி இருவரையும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தது. இதனால், சயீத் அஜ்மல் வரும் உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
0 comments:
Post a Comment