“சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’, ‘ஈசன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தேன். பிறகு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டதற்காக, ‘7-ஆம் அறிவு’ படத்தில் போதி தர்மராக வந்த சூர்யாவின் மனைவி கேரக்டரில் நடித்தேன். சின்ன வேடம் என்றாலும் படத்துக்கும், கதையோட்டத்துக்கும் அந்த கேரக்டர் முக்கியமானது என்று தோன்றியதால் நடித்தேன். ‘பூஜை’ படத்தில் விஷாலின் அத்தை மகளாக நடித்திருந்தேன்.
எனக்கும், அவருக்குமான காட்சிகள் படத்தின் கதையோட்டத்துக்கு முக்கியமானதாக இருந்ததாலும், டைரக்டர் ஹரி கேட்டுக் கொண்டதாலும் நடித்தேன். எனவே, சின்ன வேடம் என்றோ அல்லது பெரிய வேடம் என்றோ நான் தரம் பிரித்துப் பார்ப்பது இல்லை. என் திறமையை வெளிப்படுத் தும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பேன்.
இதனால், என் ஹீரோயின் இமேஜ் கண்டிப்பாக பாதிக்காது. படம் முழுக்க தோன்றினால் மட்டும்தான் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்களா? இதுபோல் மிக முக்கியமான திருப்புமுனை கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கலாம். ஹீரோயினாக ‘மேளதாளம்’, ‘பிறவி’, ‘விழித்திரு’ படங்களில் நடித்து வருகிறேன். படத்தில் எத்தனைபேர் நடிக்கிறார்கள் என்று பார்ப்பதைவிட, எந்த கேரக்ட ருக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது என்று பார்ப்பது தான் முக்கியம்.
எல்லா மொழி ரசிகர்களுக்கும் என்னைத் தெரிகிறது. அதனால் என்னை அந்தந்த மொழியில் நடிக்க வைக்கிறார்கள். மலையாளத்திலும், தெலுங்கிலும் நான் நடித்த சில படங்கள் ரிலீசாகியுள்ளன. அங்குள்ள ரசிகர்கள் என்மீது அளவற்ற அன்பு மழை பொழிகிறார்கள். ஒருவருடைய மனதில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
கடந்த வருடம் அஜீத்தின் ‘வீரம்’ படத்தில் நடித்தேன். அதில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர், இந்திப் பட டைரக்டர் பால்கியிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். உடனே மேக்-அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்த பால்கி, ‘ஷமிதாப்’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதில் அமிதாப்பச்சன், பாலிவுட் ரேகா நடிக்கின்றனர். தனுஷ், அக்ஷரா ஹாசன் ஜோடி. இவர்களுடன் நான் இணைந்து நடிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன.
தனுஷ், பால்கி மற்றும் ‘ஷமிதாப்’ படக் குழுவைச் சேர்ந்த அனைவரும், நான் எப்படி வசனத்தை உள்வாங்கிக்கொண்டு பேசி நடிக்கிறேன் என்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். என்னிடம் தனுஷ், இந்த விஷயத்தைப் பற்றி அடிக்கடி கேட்பார். நான் பதில் சொல்லாமல் சிரிப்பேன். மும்பையில் ‘ஷமிதாப்’ படக் குழுவினருடன் பணியாற்றி யது மறக்க முடியாத நல்ல அனுபவம். இதையடுத்து இந்தியில் மேலும் ஒரு பட வாய்ப்பு வந்துள் ளது. எனக்குப் பொருத்தமாக இருந்தால் நடிப்பேன்.
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே தெளிவாகச் சொல்லிவிடுவேன், ‘ஒரு காட்சியில் கூட கிளாமராக நடிக்க மாட்டேன்’ என்று. என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்களுக்காக மட்டுமே காத்திருக்கிறேன். நான் சினிமாவை விட்டு விலகும்போது, நான் நடித்திருந்த நல்ல கேரக்டர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும்.
எனக்கான லட்சிய கேரக்டர் ஒன்று இருக்கிறது. ஆனால், இன்னும் நான் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை. சினிமாவுக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் லட்சிய கேரக்டரில் நடித்துவிட முடியாது. இதை நான் உணர்ந்திருக்கிறேன். இப்போது எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்படுகிறதோ, அதில் என்னால் எவ்வளவு தூரம் சிறப்பாக நடிக்க முடியும் என்று மட்டுமே பார்க்கிறேன். ‘அருந்ததி’ படத்தில் அனுஷ்கா நடித்திருப்பாரே, அதுதான் என் லட்சிய கேரக்டர்.
என் தந்தை ஆனந்த் வர்மா, நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அவருக்குப் படம் இயக்கித் தயாரிக்கும் எண்ணம் இல்லை. எனக்காக ஒரு பவர்ஃபுல் கதையை எழுதியுள்ளார். இயக்குனர்கள் அவரை அணுகினால், அந்தக் கதையை சொல்வார். அதில் எனக்கான லட்சிய கேரக்டர் இருக்கிறது. காலம் கனியும்போது, நடப்பது நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
மாற்றுத்திறனாளி என்பதை பாரமாக நினைத்தது இல்லை. அதை என் பிளஸ் பாயிண்டாகத்தான் நினைக்கிறேன். யாரும் என்னைப் பார்த்து இரக்கப்பட வேண்டாம். அனைவரும் எப்படி இயங்குகிறார்களோ, அப்படியே நானும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கிடைத்த பெற்றோர், என்னை நன்கு புரிந்துகொண்டு, என் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.”
0 comments:
Post a Comment