↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, பவுலிங், ஃபீல்டிங்கிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை திணறடித்தது.
நடப்பு உலக கோப்பையின் 2வது போட்டி மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே நடந்து வருகிறது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் இயோன் மார்கன் தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்றார். பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் பவுலிங்கை இங்கிலாந்து கேப்டன் தேர்வு செய்தபோதே ரசிகர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன.
தொடக்கத்தில் அதிரடி
இதையடுத்து, டேவிட் வார்னரும், ஆரோன் பின்ச்சும் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆன்டர்சன் பந்து வீச்சு நன்றாக ஸ்விங் ஆவதால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிகவும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் முதல் மூன்று ஓவர்கள் கடந்ததும், வார்னரும், பின்சும் அதிரடி காட்டினர்.
அடுத்தடுத்த பந்துகளில் அவுட்
ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருந்த நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார் வார்னர். 18 பந்துகளில் அவர் 22 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்த பந்திலேயே, ஷேன் வாட்சன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து, அவுட் ஆனார். ஹாட்ரிக் பந்தில் ஸ்மித் பேட்டிங் செய்தார். அந்த பந்தை யார்க்கராக வீசினார் பிராட். இருப்பினும் தக்க நேரத்தில் பேட்டை வைத்து தடுத்துக் கொண்டதால் ஹாட்ரிக் வாய்ப்பை பிராட் இழந்தார்.
ஆரோன் பின்ச் சதம்
அடுத்தடுத்த பந்துகளில் இரு பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனதால், 57 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற சரிவுக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது. பின்ச்சுடன், ஸ்மித் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே ஸ்மித் 5 ரன்களில் வோக்ஸ் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். கேப்டன் பெய்லி, பின்ச் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க போராடியது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பிறகு அதிரடி காண்பிக்க தொடங்கியது. ஆரோன் பின்ச் சதம் எடுத்து அசத்தினார். இந்த உலக கோப்பையின் முதல் சதம் இதுவாகும்.
மேக்ஸ்வெல்... மேக்சிமம்
அதிரடி காண்பித்த ஆரோன் பின்ச், 128 பந்துகளில் 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இயோன் மார்கன், மிட் ஆப் திசையில் இருந்து சரியாக குறிபார்த்து பந்தை வீசி, ஸ்டம்பை தகர்த்து பின்ச் விக்கெட்டை வீழ்த்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜார்ஜ் பெய்லி, 55 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டீவன் ஃபின் பந்து வீச்சில் போல்ட் ஆனார். மிட்சேல் மார்ஷ் 23 ரன்களில் அவுட்டான நிலையில், ஐபிஎல் ஹீரோவான கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காண்பித்தார். அவர் 40 பந்துகளில் 66 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினும் விளாசி தள்ளி 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 5 விக்கெட்டுகளையும், பிராட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆன்டர்சன், வோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஹேடின், மேக்ஸ்வெல், ஜான்சன் ஆகியோரை 50வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் அடித்தடுத்து அவுட் செய்து இங்கிலாந்து பவுலர் ஸ்டீவன் ஃபின் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
தொடக்கத்திலேயே வீழ்ச்சி
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வந்தது இங்கிலாந்து. அணியின் ஸ்கோர் 25 ஆக இருந்தபோதே, தொடக்க வீரர் மொயீன் அலி, மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் பெய்லிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்களில் நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து கேரி பேலன்ஸ் 10 ரன்கள், ஜோ ரூட் 5 ரன்கள், கேப்டன் மார்கன் ரன் ஏதும் எடுக்காமலும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 10 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய இயான் பெல்லும் 36 ரன்களில் அவுட் ஆனார். ஜோஸ் பட்லரை, அவுட் ஆக்க ஆஸி. வீரர் ஸ்மித் பிடித்த கேட்ச் அபாரமாக இருந்தது.
மிட்சல் மார்ஷ் அபாரம்
இவர்கள் அனைவரின் விக்கெட்டையும் மிட்சல் மார்ஷ் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 23வது ஓவரில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது. முதல் 20 ஓவர்களுக்குள்ளேயே மார்ஷ் எதிரணியின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த அடியில் இருந்து இங்கிலாந்து எழும்ப முடியவில்லை.
இங்கிலாந்து தோல்வி
கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களிலும், ஸ்டூவர்ட் பிராட் ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்டீவன் ஃபின் 1 ரன்னிலும் அடுத்தடுத்து நடையை கட்ட, மறுமுனையில் ஜேம்ஸ் டைலர் மட்டும் அபாரமாக ஆடினார். அவர் 90 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் சதத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் மறுமுனையில், ஆன்டர்சன் ரன் அவுட் ஆக, இங்கிலாந்து 41.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Home
»
sports
»
sports.tamil
» 111 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி.! பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றிலுமே அசத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment