இயக்குநர் பாலாவின் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘பிசாசு’. இந்தப் படத்தில், இரண்டு இடங்களில் இளையராஜாவைக் கலாய்க்கும் வகையில் மிஷ்கின் காட்சிகளை அமைத்துள்ளதாக ராஜாவின் ரசிகர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
நாயகன் வீட்டில் தங்கியிருக்கும் பேய், நாயகனுடன் படுத்திருக்கும் நண்பனைக் கீழே இழுத்துப் போடும். சிலமுறை இப்படி நடக்க... இருவரும் பேய்க்குப் பயந்து வெறும் டவுசருடன் அபார்ட்மெண்ட்டின் கீழே ஓடி வருவார்கள். அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வரும் போலீஸ், இருவரின் நடவடிக்கைகளும் ‘ஒருமாதிரியாக’ இருக்கவே அழைத்து விசாரிப்பார். அவர்கள் இருவரும் வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்ல, ‘ரெண்டு பேரு கீழ்ப்பாக்கத்துல இருந்து தப்பிச்சிட்டாங்களானு விசாரி’ என்று கான்ஸ்டபிளிடம் கூறுவார். ‘நாங்க வயலினிஸ்ட் சார், இளையராஜாவுக்கு வாசிக்கிறோம்’ என்று நாயகன் சொல்ல, ‘ஓ... இது வேறயா?’ என்று நக்கல் தொனியில் கேட்பார் போலீஸ். அதாவது, இருவரும் உண்மையிலேயே பைத்தியம்தான் என்பது போல இருக்கும் அவரது தொனி.
படத்தின் இரண்டாம் பாதியில், பேயான நாயகியின் தந்தை ராதாரவி, ‘நீ என்ன பண்ற?’ என்று நாயகனிடம் கேட்பார். ‘நான் வயலினிஸ்ட்’ என்பார் நாயகன். ‘ஆர்க்கெஸ்ட்ராவில் வாசிக்கிறியா?’ என்று ராதாரவி கேட்க, ‘இல்லை சார், மியூஸிக் டைரக்டர்களுக்கு வாசிப்பேன். இளையராஜாவுக்கு கூட வாசிச்சிருக்கேன்’ என்று சொல்ல, சுரத்தே இல்லாமல் எகத்தாளத்துடன் ‘ஓ...’ என்று சொல்வார் ராதாரவி.
இந்த இரண்டு காட்சிகளும் இளையராஜாவைக் கிண்டல் செய்வது போல் அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ‘இரண்டு பேருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை இப்படியா பகிரங்கப்படுத்துவது?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைக்க இளையராஜா காலில் விழுந்து மிஷ்கின் கெஞ்சியதாகவும், ஆனால் இளையராஜா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment