ஹீரோக்கள் அனைவருக்கும் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அந்த ஆசையை மூன்று அல்லது ஐந்து படங்களுக்குப் பிறகு அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால், புதுமுக ஹீரோவான சுரேஷ்குமார், தனது முதல் படத்திலேயே சவால் மிகுந்த இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
பொறியியல் பட்டதாரியான சுரேஷ்குமார், டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால், அங்கே இருந்த நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு பயிற்சியும், நடனப் பள்ளி ஒன்றில் நடனப் பயிற்சியும் பெற்றார்.
பிறகு வேலையை விட்டுவிட்டு, நடிக்க வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்த அவர், சென்னையில் கூத்துப்பட்டறை ஆசிரியர் ஒருவரிடமும் நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார். பிறகு சினிமா வாய்ப்பு தேடி அலைந்த அவருக்கு சில தேடல்களுக்குப் பிறகு ‘பூக்களுக்கு மரியாதை’ என்ற படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது முடியும் தருவாயில் உள்ள இந்தப் படத்தில்தான் சுரேஷ்குமார், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போதே, இவருடைய திறமையைப் பார்த்து, இவருக்கு ‘மிஸ் பண்ணாதிங்க; அப்புறம் வருத்தப்படுவிங்க ‘ என்ற படத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்விரு படங்கள் மட்டும் இன்றி, தெலுங்கிலும் இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த அனுபவத்தை பற்றி சுரேஷ்குமாரே பேசும்போது, “கேமரா முன்பு நிற்பதே ஒரு புதுமையான அனுபவம்தான் என்ற நிலையில், இரட்டை வேடம் என்றதும், முதலில் எனக்குக் கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் நான் டெல்லியில் பயின்ற நடிப்பு பயிற்சியும், சென்னையில் கூத்துப்பட்டறை ஆசிரியரிடம் பயின்ற பயிற்சியும் எனக்கு உதவியாக இருந்தது. மேலும், ‘பூக்களுக்கு மரியாதை’ படத்தின் இயக்குனர் எனக்கு கொடுத்த ஊக்கமும், தைரியமும் என்னை அனைவரிடமும் பாராட்டு வாங்கும் அளவுக்கு சிறப்பாக நடிக்க வைத்தது. இரண்டு வேடங்களில் ஒன்றில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளேன். ரொம்ப சிறப்பான கதாபாத்திரமாக அமைந்துள்ளது..” என்றார்.
0 comments:
Post a Comment