எந்தப் பெரிய படமாக இருந்தாலும் பரவாயில்லை. கதை என்னுடையது என்று ஒரு கல்லை விட்டெறியலாம்... வந்தவரை லாபம்.. போனா கல்லுமட்டும்தானே என நினைப்புடன் சில சுமார் மூஞ்சி குமார்கள் தீயா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவர்களில் உண்மையாகவே கதையைப் பறிகொடுத்த ஒன்றிரண்டு பேருக்கு இது பொருந்தாது. ஆனால் மற்றவர்கள் பக்கா ப்ளாக்மெயிலர்கள். இவர்களின் ஒரே நோக்கம் பணம் பறிப்பது மட்டும்தான்.
முன்பெல்லாம் எப்போதோ ஒன்றிரண்டு குரல்கள்தான் இப்படி கேட்டு வந்தன. இப்போதோ, எந்தப் படம் வந்தாலும் கதைத் திருட்டு பஞ்சாயத்தைக் கூட்டிவிடுகிறார்கள். கமல், விக்ரம், விஜய், ஷங்கர் என டாப் கலைஞர்களின் படங்களைக் குறிவைத்து இந்த கதை திருட்டு புகார்களைக் கூறி வந்தவர்கள், இந்த முறை ரஜினி படத்தையும் விட்டு வைக்கவில்லை. லிங்கா மீது இரு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ரூ 5 கோடிக்கு உறுதி கொடுத்த பிறகுதான் படத்தையே ரிலீஸ் செய்தார்கள். இத்தனைக்கும் வழக்குப் போட்டவர் சொன்ன கதைக்கும் லிங்கா கதைக்கும் இம்மி கூட தொடர்பில்லை என்று தெரிந்துவிட்டது. இப்போது அடுத்த கதைத் திருட்டுப் புகாருக்கு காலைப் பிறாண்ட ஆரம்பித்துள்ளார் ஒரு உதவி இயக்குநர்.
கவுதம் மேனனின் உதவியாளரிடம் தான் சொன்ன கதையைத்தான் அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் என எடுத்துள்ளதாகக் கேள்விப்படுவதாகவும், இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாகவும் அவர் துள்ள ஆரம்பித்துள்ளார் (ஒரே ஹாலிவுட் பட டிவிடியை நிறைய பேர் பார்த்துவிடுவதால் வரும் கோளாறாக இருக்குமோ!). இவரை நீதிமன்றம் வரை ஆட விடுவார்களா.. கோடம்பாக்கத்துக்குள்ளேயே அடக்கி வைக்கப் போகிறார்களா என்பது, சமீபத்தில் இந்த மாதிரி வழக்குகளுக்கு எதிராக முழங்கிய நடிகர் சங்க தலைகள் சரத்குமார், ராதாரவிக்கே வெளிச்சம்!
0 comments:
Post a Comment