↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஒருவர் தப்பித் தவறி போலீஸ் வேடம் போட்டுவிட்டால், அவரை அந்த யூனிஃபார்மையே கழட்டவிடாமல் செய்வதில் தமிழ் சினிமாவுக்கு நிகர் தமிழ் சினிமாதான். ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும் சகல கேரக்டர்களிலும் நடிக்கிற வரம் வாங்கி வந்து இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தலைவாசல் விஜய். ஒருகாலத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தமிழ்ப் படங்களிலும் தலைகாட்டியவரை இடையில் காணோம். இடைவெளியில் மலையாளத்தில் 60 படங்கள் நடித்து முடித்துவிட்டு இப்போது மீண்டும் 'அனேகன்’, 'பூஜை’ என்று தமிழில் ரீ  என்ட்ரி.
''என் முதல் படம் 'தலைவாசல்’. ஆனா, அதுக்கு முன்னாடியே 'நீலா மாலா’ சீரியல் மூலம் நான் நடிகனானேன். அப்புறம் 'தொலைந்து போனவர்கள்’ சீரியல்ல குடிகாரனாக நான் நடிச்சதுக்கு கிடைச்ச பரிசுதான், 'தேவர் மகன்’ படம். விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடிச்ச 'உன்னை நினைத்து’ படத்துல லைலாவுக்கு அப்பாவா நடிச்சிருப்பேன். சூர்யாவை லைலா காதலிக்கிறபோது, அவங்க காதலை வெச்சு சூர்யாகிட்ட நிறைய பணம் வாங்கித் தரச்சொல்வேன். அப்புறம் பணக்கார இளைஞன் ஒருத்தன் லைலாவை விரும்புவது தெரியவந்ததும், அவன்கிட்ட நிறைய பணம் வாங்கலாம்னு நானே லைலாவிடம் காதலனை மாத்திக்கச் சொல்வேன். 
அந்தப் படம் பார்க்க நான் என் மனைவி என் மாமியார்னு குடும்பத்தோட தியேட்டருக்குப் போயிருந்தோம். திடீர்னு ஒரு ரசிகர் 'டேய்... நீ அவளுக்கு அப்பனா, இல்ல மாமாவாடா’னு கத்தினார். என் மாமியார் ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க. அப்புறம் நடிப்புனு சொல்லி சமாதானப்படுத்தினேன்.
அதே மாதிரி 'கோகுலத்தில் சீதை’ படத்துல வேலைக்குப் போற பொண்ணுங்களை பஸ் ஸ்டாப்ல பார்த்து பாலியல் தொழிலுக்குப் பழக்கப்படுத்துற கேரக்டர். 'காலைல எழுந்து அரக்கப்பரக்கக் குளிச்சு அவசர அவசரமா சாப்பிட்டு பஸ்ல நசுங்கிப் பிதுங்கி ஆபீஸ் போய், நிக்க நேரம் இல்லாம வேலை பார்த்து மேனேஜர்கிட்ட திட்டு வாங்கி நொந்து நூலாகி பஸ்ல வீட்டுக்கு வந்து அப்புறமா சமைச்சு... இப்படிக் கஷ்டப்பட்டு சில நூறு சம்பாதிக்கிறத விட சில நிமிஷத்துல ஆயிரக்கணக்கா சம்பாதிக்கிற வேலை நான் தரேன்’னு சொல்வேன். உடனே அந்தப் பொண்ணு கடுப்பாகி என் மூஞ்சில காறித் துப்புவா. இந்த சீன்ல நடிச்சப்போ எனக்கு எல்லா இடங்களிலும் பயங்கர எதிர்ப்பு. இன்னும் படத்துல அந்த சீன் இருக்கு. ஆனா டி.வியில போடும்போது இந்த சீனைத் தூக்கிடுவாங்க. ஆனா இப்போ ரியல் கேரக்டர் வேற, நடிப்பு வேற என்ற தெளிவு ரசிகர்களுக்கு அதிகமாயிடுச்சு.''
''திடீர்னு தமிழ் சினிமா வில் இருந்து காணாமல் போனது எப்படி?'
''விதவிதமான கேரக்டர் பண்ணினாலும் ஒரு சமயத்துல என்னையும் ஒரே மாதிரியான கேரக்டருக்கு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. நானும் அந்த ஸ்டீரியோ டைப் கேரக்டர்கள் பிரச்னைல சிக்கிக்குவேனோனு பயம் வந்தது. அதனால அந்த மாதிரி கேரக்டர்களைத் தவிர்க்க ஆரம்பிச்சேன். அப்போதான் மலையாளத்துல ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. கேரளாவில் மலையாளிகள் கொண்டாடுற நாராயண குரு என்ற மகானோட வாழ்க்கை வரலாற்றுப் படத்துல அந்த மகானா நடிக்க என்னைக் கூப்பிட்டாங்க. படம் பேர் 'யுக புருஷன்’. அதுல மம்முட்டி சார் சிஷ்யனா நடிச்சு இருப்பார். படம் பெரிய மரியாதையைக் கொடுத்தது.
அடுத்து மோகன்லால் கூட 'சிகார்’னு  ஒரு படம், 'ஹீரோ’னு ஒரு மெகா ஹிட் படம். இன்னும் பல பெரிய படங்கள்னு போய் மிகக் குறுகிய காலத்துல 60க்கும்  மேற்பட்ட படங்கள்ல நடிச்சு முடிச்சேன். எல்லாத்துலேயும் விதவிதமான கேரக்டர்ஸ். 'கமல் சாரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழ்நாட்டுல இருந்து வந்து இவ்வளவு படங்கள் நடிச்ச ஒரே நடிகர் நீங்க மட்டும்தான்’னு இப்பவும் என்னை பாராட்டுறாங்க. மலையாளப் படங்கள் தொடர்ந்து வந்துட்டு இருக்கு.'
''மறுபடியும் தமிழ்ல பல பெரிய படங் களின்  லிஸ்ட்ல உங்க பேரும் தெரியுது...''
''ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'அநேகன்’ படத்துல ஒரு பயந்தாங்குளி பிராமணன் கேரக்டர்ல நடிக்கிறேன். படத்துல பத்துப் பதினஞ்சு சீன்தான் வரும். ஆனா அந்த கேரக்டரோட பாதிப்பு, படம் முழுக்க இருக்கும் என்கிற மாதிரியான கேரக்டர். 'பூஜை’ படத்துல நடிகர் ஜெயப்பிரகாஷும் நானும் தொழிலதிபர்களா நடிச்சிருக்கிறோம்.
புகழேந்தி தங்கராஜ் இயக்கும் 'கடல் குதிரைகள்’ படத்துல அணு உலை எதிர்ப்பாளரா ஒரு நல்ல கேரக்டர் பண்ணி இருக்கேன். மலையாளத்தில் வந்த ’தட்டத்தின் மறயத்து’ படத்தை தமிழ்ல ரீமேக் பண்றாங்க. அதுல ரொம்ப நாளைக்குப் பிறகு நானும் என் நண்பன் நாசரும் இஸ்லாமிய சகோதரர்களா நடிக்கிறோம்.
படத்துல எனக்கு வசனமே இருக்காது. கிளைமாக்ஸ்ல ஒரே ஒரு வசனம்தான். 'பர்தா என்பது ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்தை மறைக்கத்தானே தவிர, அவள் அறிவையோ சிந்தனையையோ மறைக்க இல்ல’னு ஒரு வசனம். அந்தப் படத்துல நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது' என்றார் தலைவாசல் விஜய்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top