↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படத்தை வெளியிட்டால் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று 150க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நடித்திருக்கும் 'கத்தி' திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா. ஆகையால் 'கத்தி' படத்தை எதிர்க்கிறோம் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

'கத்தி' தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கும் நிலையில் இன்று காலை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பண்ருட்டி தி. வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை கு. ராமகிருட்டிணன், தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பண்ருட்டி தி. வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'கத்தி' படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும், மதிக்காமல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். 'கத்தி' படத்தை பொறுத்தவரை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் பேசி படத்தை வாங்கி வெளியிடாதீர்கள் என்று வலியுறுத்த இருக்கிறோம்.

ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் என்பதற்கான ஆவணங்களையும் கொடுத்து தயவு செய்து படத்தை வெளியிடாதீர்கள் என்று கூற இருக்கிறோம். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் இருக்கிற கட்சிகள் அனைத்துமே, சம்பந்தப்பட்ட மாவட்டகளில் இருப்பவர்கள் அங்கிருக்கும் திரையரங்குகள், விநியோகஸ்தர்களை சந்தித்து திரையிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறோம். லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனே எனக்கும் இலங்கை விமானத் துறைக்கும் வர்த்தகத் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்?


லைக்கா நிறுவனம் வெளியிடாமால், வேறு ஒரு நிறுவனம் 'கத்தி' படத்தை வெளியிட்டால் எங்களது போராட்டம் குறித்து பரிசீலனை பண்ணுவோம். ஜெயா டி.வி தொலைக்காட்சி நிறுவனமும் இப்படத்தை வாங்கவில்லை. டி.வி நிர்வாகத்திடம் பேசியதற்கு தேவையில்லாமல் எங்களது பெயரை இழுக்கிறார்கள் என்றும், நாங்கள் வாங்கிவிட்டோம் என்பது பொய்யான செய்தி என்று கூறினார்கள். ஜெயா டி.வி வாங்கி விட்டது என்று படக்குழு கூறி வருவது ஒரு ராஜதந்திர நடவடிக்கை. விஜய் சொந்தமாக வாங்கி வெளியிடட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை.

லைக்கா நிறுவனர் எங்களது 2 நாள் வருமானமே 'கத்தி' திரைப்படம் என்று கூறுகிறார் அல்லவா, அப்படியென்றால் வேறு ஏதாவது ஒரு நலிந்த தயாரிப்பாளரிடம் இந்த படத்தைக் கொடுத்து வெளியிடச் சொல்லட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. மீறி திரைக்கு வந்தால், ஜனநாயக ரீதியில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது சுய விளம்பரத்திற்காக 'கத்தி' படத்தை நாங்க எதிர்க்கவில்லை. இவ்வாறு தி. வேல்முருகன் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top