அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று அஜீத். இன்னொன்று விஜய்.
படத்திலும் சரி, நிஜத்திலும் சரி, யாரோ யாரையோ திட்டினால்தான் பிழைப்பு என்றால், அதை சந்தோஷமாக செய்வதற்கு ஒரு பெரும் கூட்டம் கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த பெரும் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் ‘கங்காரு’ பட இயக்குனர் சாமி. போன வாரமெல்லாம் கொம்பன் கிருஷ்ணசாமி? இந்த வாரம் முழுக்க இந்த சாமியா? என்று அதிர்ச்சியடைய தேவையில்லை. இவர் தரப்போகும் பிரச்சனை சென்சார் வரைக்கும் போகுமா என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் விஜய்யை பற்றி சர்ச்சைக்குரிய வசனங்களை வைத்தால் அதற்கெல்லாமா சென்சார் கத்தரி தூக்கும்?
கடந்த ஒரு வருடமாகவே அஜீத்திடம் கதை சொல்ல முயன்று வருகிறாராம் சாமி. அவரை எளிதில் ரீச் பண்ணுவதற்கு இதைவிட சிறந்த குறுக்கு வழி இல்லை என்று முடிவு செய்திருக்கலாம். அது அவருக்கே வெளிச்சம். ஆனால் படத்தில் விஜய்- அஜீத் ரசிகைகள் என்று இருவரை காண்பித்திருக்கிறாராம். அந்த இருவரும் தங்கள் ஹீரோதான் டாப் என்று பேசுகிற வரைக்கும் கூட பிரச்சனையில்லை. ஆனால் திட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்புவதுதான் பிரச்சனை. அதிலும் அஜீத் ரசிகை விஜய்யை திட்டுவதை காது கொடுத்து கேட்க முடியாது என்கிறார்கள். பல வருடங்களாக விஜய்க்கும் கதை சொல்ல முயன்றவர்தான் சாமி என்ற தகவலும் வருகிறது. அந்த ஆத்திரத்தையெல்லாம் மனதில் கொண்டுதான் வசனம் எழுதியிருக்கிறாராம்.
அதே நேரத்தில் அஜீத்தை திட்டுகிற விஜய் ரசிகை பஞ்சு மிட்டாயால் ஒத்தடம் கொடுப்பது போல பேருக்கு நாலு வார்த்தைகள் மட்டும் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கிறதாம் காட்சி. படம் வெளிவருவதற்கு முன்பே இதென்ன ஓரவஞ்சனை? என்ற கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். ‘படத்தை எங்கிட்ட காட்டிட்டுதான் ரிலீஸ் பண்ணணும்’ என்று விஜய்யின் அப்பா கிளம்பி வராமல் இருந்தால் சரி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.