↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நாடு முழுவதுமே காணாமல் போன ஆம் ஆத்மி தனது பழைய கோட்டையான டெல்லியை மீண்டும் பிடித்து வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. வாழ்வா, சாவா என்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள இந்த வெற்றி, அக்கட்சிக்கும், இந்திய மாற்று அரசியலுக்கும் முக்கியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் பலத்த அடி வாங்கிய ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வளர்ந்தது எப்படி என்பது குறித்து பிற மாநில மக்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் இவைதான்:

1) டெல்லி மக்கள் தாங்கள் மோடி அரசால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தனர். அரவிந்த் கேஜ்ரிவால்தான் மோடியை எதிர்க்க சரியான ஆள் என்று நம்பினர். அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க கூடாது என்பதே டெல்லி மக்களில் பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. எனவேதான், கேஜ்ரிவால் வெளிப்படையாக தான் செய்ததை தவறு என்று ஒப்புக்கொண்டார். எனவே, கேஜ்ரிவால் ஒரு நேர்மையாளராக மக்களால் பார்க்கப்பட்டார். மக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், இனிமேல் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் வாக்களித்தார்.

2)ஆம் ஆத்மி வெறும் தர்ணா செய்யும் கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயன்றது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக, மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினோம். தேர்தல் வாக்குறுதிகளை ஒரே நாளில் தயாரிக்கும் முறையை மாற்றி மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரித்தோம். டெல்லியில் நேர்மறையான பிரசாரத்தை மட்டுமே முன்வைத்தோம். யாரையும் தாக்கவில்லை. வளர்ச்சி மட்டுமே பிரச்சாரத்தில் இடம் பெற்றது.

3)கடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மிக்கு தன்னார்வலர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால், சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, இம்முறை அவர்களை ஒருங்கிணைத்து, பூத் மட்டத்தில் பணியாற்ற செய்தோம். 10க்கும் மேற்பட்ட தேர்தல் கமிட்டிகளை உருவாக்கினோம். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே ஆம் ஆத்மி தேர்தலை எதிர்கொள்ள முழு அளவில் தயாராகியிருந்தது. கேஜ்ரிவால் டெல்லி சட்டசபை தொகுதிகளில் அதற்குள்ளாக இருமுறை சுற்றுப்பயணத்தை முடித்திருந்தார்.

4)டெல்லியை தவிர்த்து வேறு எந்த ஒரு மாநில தேர்தலிலோ, உள்ளாட்சி தேர்தலிலோ போட்டியிட கூடாது என்பது கேஜ்ரிவால் திட்டமாக இருந்தது. கட்சிக்குள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆம் ஆத்மி தொண்டர்களின் சக்தி முழுவதையும் விரையம் செய்யாமல், மொத்தமாக டெல்லி தேர்தலில் காண்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் கேஜ்ரிவால் அவ்வாறு முடிவெடுத்திருந்தார். அதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.

பாஜக ஒரு பெரும் தவறு செய்தது. தினமும் கேஜ்ரிவாலை கேவலப்படுத்தும் வகையில், கார்டூன்களை வெளியிட்டு விளம்பரம் செய்தது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை வைத்து கேஜ்ரிவால் மீது பழிபோடச் செய்தது. ஆனால் நாங்கள் டெல்லியின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இவ்வாறு ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top