↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

முதன்முறையாக தந்தை முகத்தை பார்க்கும் ஆவலுடன் திருச்சி சென்றுள்ளனர் இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குழந்தைகள். இலங்கை கடற்படையால் 2011 நவம்பர் மாதம் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர் தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த். 

இந்த ஐந்து பேர் மீதும் போதை மருந்து கடத்தல் வழக்குக்கு தேவையான ஆவணங்களை உருவாக்கி குற்றவாளி கூண்டில் நிறுத்தியது இலங்கை. இதைத்தொடர்ந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, கடந்த மாதம் 30ம்தேதி, இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தமிழகமே கொந்தளிப்புக்கு உள்ளானது. மீனவர்களின் குடும்பங்கள் நிலை குலைந்தன. இதில் சோகம் என்னவென்றால்,

எமர்சன் மற்றும் பிரசாந்த் ஆகிய இரு மீனவர்களும் தம்தம் மனைவிமார் கர்ப்பமாக இருக்கும்போது கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் குழந்தைகள் பிறந்தன. இதனால் தந்தையின் முகத்தை கூட அந்த இரு குழந்தைகளும் இதுவரை பார்த்தது கிடையாது. போனில் பேசும்போது மட்டுமே குரலை கேட்டுள்ளன. இதுதான் உங்கள் தந்தை என்று தாய்மார்கள் போட்டோவை காண்பித்ததை பார்த்துதான் அக்குழந்தைகள் வளர்ந்துள்ளன. 


இந்நிலையில்தான், இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக இலங்கை அதிபர் ராஜபக்சே ஐந்து மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் ஐவரும் இன்று திருச்சிக்கு விமானம் மூலம் வருவார்கள் என்ற தகவல் வெளியானது. இதனால் ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த அந்த மீனவர்கள் குடும்பத்தினர் இன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் திருச்சி கிளம்பி சென்றனர்.

தங்களது தந்தையை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு மீனவர்களின் பிள்ளைகள் முகத்திலும் தெரிந்தது. தந்தையை பார்க்க போகும் நெகிழ்ச்சி, அவர்கள் விடுதலையானதால் கிடைத்த மகிழ்ச்சி போன்றவற்றால் மீனவர்களின் பிள்ளைகள் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தனர். 

அவர்களின் குடும்பத்தாரும் இரவு முழுக்க விழித்திருந்து இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். எமர்சனின் மனைவி லாவண்யா கூறியதாவது: 'கடந்த 3 வருடமாக என் கணவர் இன்னைக்கு வருவாரு நாளைக்கு வருவார்னு எதிர்பார்த்து காலத்தை கடத்தி கொண்டிருந்தேன். அவர பிடிச்சுட்டு போனப்ப எனக்கு 2வது குழந்தை உண்டாகி 2 மாதம் ஆகியிருந்தது. அந்த குழந்தை பிறந்து இன்று வரை அப்பாவோட முகத்தை பார்ததில்லை. அவரோட போட்டோவ காட்டித்தான் குழந்தையை வளர்த்து வருகிறேன். 

இந்த சூழ்நிலையில்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதிச்ச செய்தி கிடச்சது. அந்த செய்தி எங்களை உசுரோட கொன்னுடுச்சு. தூக்கு கயித்து வாசல்ல நின்னுகிட்டு இருந்த அவரையும், அவரோட கடலுக்கு போன 4 பேரையும் மீட்டுத்தர சொல்லி 19 நாளா தினம் தினம் செத்து பிழைச்சு வந்தோம். மத்திய, மாநில அரசுகள் மற்றும் இலங்கை அரசின் முயற்சியால் இப்ப அவரோட தண்டனை ரத்தாகி இருக்குற செய்தி எங்கள் வயித்துலை பாலை வார்த்திருக்கு. 

தூக்கு தண்டனையில இருந்து எங்க மீனவங்க 5 பேரோட உயிரை காப்பாத்த போராடிய அத்தனை பேருக்கும் எங்க நன்றிகளை காணிக்கையாக்குறோம். 3 வருடத்துக்குபின் என் கணவரை காண நானும் பிறந்த நாளில் இருந்து இன்று வரை தன்னோட அப்பாவின் முகத்தையும், பரிசத்தையும் உணர முடியாத என் மகளும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம் என்றார். 5 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் மூலம் பேசி தாங்கள் விடுதலையான செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top