காலைக் கடனை முடிக்க செல்பவர்களை தடுத்து நிறுத்தி காலை வணக்கம் சொல்லும் போராட்டத்தால் ஒரு கிராமத்தில் முற்றிலுமாக கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ளது பெக்கினகேரி என்ற கிராமம். இங்கு 711 குடும்பங்கள் வசிக்கின்றன. சில ஆண்டுகள் முன்புவரை இக்கிராமத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் கழிவறைகள் கிடையாது.
காலையில் எழுந்ததும் வயக்காடு பக்கமாக காலைக் கடனை முடிக்க ஒதுங்குவது ஊர்க்காரர்கள் வழக்கமாக இருந்தது. இதை தடுத்து, பொது இடங்களில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்ல கிராம பஞ்சாயத்து, அங்கன்வாடி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர். அந்த குழுவின் பெயர் குட்மார்னிங் குழு.
இக்குழுவின் வேலை என்னவென்றால், காலையிலேயே கிடுகிடுவென காட்டுப்பக்கமாக ஓடும் காலைக் கடனாளிகளை வழிமறித்து குட்மார்னிங் சொல்வதுதான். காலை 5.30 மணி முதல் 8 மணிவரை இந்த குழுக்கள், காலைக்கடன் முடிக்க மக்கள் எங்கெல்லாம் ஒதுங்குவார்களோ அங்கெல்லாம் குவிந்து நின்று குட்மார்னிங் சொல்லிவந்தனர். காலைக்கடனை முடித்துவிட்டு திரும்பி வரும்போதும் அவர்களை வீட்டுக்குச் செல்ல விடாமல் வழியிலேயே நிறுத்தி, கழிவறையின் அவசியம் குறித்து பாடம் எடுக்க ஆரம்பித்துள்ளனர் இந்த குழுவினர்.
முதலில் ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்கள் நம்மை தொல்லை செய்கிறார்கள் என்று நினைத்த ஊர்மக்கள், தினமும் இவர்கள் இப்படியே பேசுவதை கேட்டு மனம் மாறி கழிவறை கட்ட ஆரம்பித்தனர். கழிவறை கட்ட மனமிருந்தும் பணமில்லாதவர்களுக்கு கிராம பஞ்சாயத்து மூலம் கடனுதவி அளிக்கப்பட்டு கழிவறை கட்டப்பட்டதாம். இப்போது ஊரில் கழிவறை இல்லாத வீடு கிடையாது. குட்மார்னிங் குரல்களும் கேட்கவில்லை. இது எப்படி இருக்கு?
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment