↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காவிரியும், முல்லை பெரியாறும் தமிழகத்தின் உயிர் மூச்சை உட்கொள்ள துடிக்கும் இந்த நேரத்தில்தான் அணைக்கட்டு பிரச்சினை குறித்த ரஜினிகாந்த்தின் லிங்கா திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போதைய சூழல்தான் நதிநீர் இணைப்பு திட்டத்தை ரஜினிகாந்த் மீண்டும் கையிலெடுக்க சரியான நேரம் என்கின்றனர் விவசாயிகளும், சமூகவியலாளர்களும். அரசியல் குறித்து லிங்கா திரைப்பட நிகழ்ச்சியொன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது மீண்டும் அவர் மீது லைம் லைட்டை விழச் செய்துவிட்டது. இதனால் ரஜினி குறித்த செய்திகளும் மீடியாக்களில் அதிகரித்து விட்டன. அதில் முக்கியமானது ரஜினியின் லிங்கா கதை குறித்த வழக்கு.

லிங்கா கதை திருடப்பட்டது என்று மதுரை ஹைகோர்ட் கிளையில் ரவி ரத்தினம் என்பவர் தொடர்ந்த வழக்கிற்கு, பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை சார்ந்து லிங்கா படத்தின் கதை இருப்பதால், அந்தக்கதை என்னுடையது என மனுதாரர் கூற முடியாது. அவரது கதையை நான் திருடியதாக கூறுவதை மறுக்கிறேன். பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாற்றுக்கு யாரும் உரிமை கோர முடியாது என்று கூறியுள்ளார்.

ரவிக்குமாரின் பதிலை வைத்து பார்க்கும்போது லிங்கா படம் முல்லை பெரியாறு அணை மற்றும் பென்னி குக் தொடர்புடையது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. நாட்டு மக்களுக்கு நீர் ஆதாார பிரச்சினை குறித்த தகவலை கொண்டு செல்ல ரஜினி போன்ற மாஸ் நடிகரை பயன்படுத்திய ரவிக்குமாரை இதற்காக பாராட்டலாம். ஆனால், படத்தில், நதிநீர் குறித்து பஞ்ச் வசனம் பேசப்போகும், ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையில் பேசிய ஒரு பஞ்ச் இப்போது நினைவுக்கு வருகிறது.

அது 2002ம் ஆண்டு. காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழ் நடிகர்கள் நெய்வேலியில் பேரணி நடத்தி கர்நாடகாவுக்கு மின்சாரம் தரக்கூடாது என்று முழக்கமிட்டனர். ஆனால் அதில் ரஜினி பங்கேற்கவில்லை. ரஜினி பெங்களூருக்காரர் என்ற விமர்சனங்கள் அதிகரித்தன. இதைத்தொடர்ந்து, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அப்போது ரஜினி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலகை திரும்பி பார்க்க செய்தார். நதிநீர் பிரச்சினைகளால் மாநிலங்கள் அடித்துக்கொள்வதை தவிர்க்க நதிநீரை இணைக்க வேண்டும் என்றும், அதற்காக தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1 கோடியை தருவதாகவும் கூறியதுதான் அந்த அறிவிப்பு.

இதன்பிறகு, வாஜ்பாய் ஆட்சி முடிந்து, 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இப்போது மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் ஆட்சி செய்கிறது. இடைப்பட்ட காலத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை மட்டுமல்ல, ஏதாவது ஒரு குடிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூட ரஜினி வாய் திறக்கவில்லை. திட்டத்தை யாராவது கொண்டுவரட்டும், அப்போது கேட்டால் பணம் தரலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்து விட்டார் போலும். இத்தனைக்கும் நதிநீர் இணைப்பு குறித்து நடப்பு பட்ஜெட்டில் அறிவித்தாகிவிட்டது.

ஆம்...கடந்த ஜூலை 10ம்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2014-15ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த திட்டம் குறித்த பூர்வாங்க ஆய்வு பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்துவிட்டார். ஆனால் அதன்பிறகும் ரஜினியிடமிருந்து இந்தாங்க நான் சொன்ன ரூ. 1 கோடி.. இதையும் வச்சுகிட்டு வேகமா வேலையை பாருங்க என்ற வசனம் வரவில்லை.

இப்போது லிங்கா படத்தில் நதிநீர்.. அணை... விவசாயி என்றெல்லாம் ரஜினி பேசப் போகும் வசனத்தை பார்த்து புழகாங்கிதம் அடையப் போகிறார்கள் தமிழர்கள்.'தன்னை வாழ வைத்த' ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தனது படத்தையே, அளித்த திருப்தியோடு ரஜினியும் இமயமலைப் பக்கம் ஓய்வெடுக்க சென்றுவிடுவார்.

உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன்பேர் சொல்லும் என்ற லிங்கா பாட்டுக்கு, வாயசைக்கப்போகும் ரஜினி அவர்களே, ஒரு கோடியை அரசுக்கு தந்தால், இந்த உலகம் உங்கள் பெயரை கட்டாயம் சொல்லும்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top