"நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை, வரும் தேர்தலில் நிற்கப் போகிறேன்" என்று நடிகர் சரத்குமாருக்கு பதிலடி தரும் வகையில் நடிகர் விஷால் கூறினார்.
இனிமேல் நடிகர் சங்கம் மீது அவதூறாக பேசிக்கொண்டே இருந்தால், சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்படுவார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று காலை திருச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். முதன்முறையாக விஷால் குறித்து சரத்குமார் பேசிருப்பதால் பரபரப்பு நிலவியது. | படிக்க விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்: சரத்குமார் எச்சரிக்கை
இது குறித்து நடிகர் விஷால் கேட்டபோது, "நடிகர் சங்கம் குறித்து நான் எங்கே தப்பாக பேசினேன். முதலில் எங்கே பேசினேன் என்று கூற வேண்டும். துணைத் தலைவர் காளை என்னைப் பார்த்து நாய் என்று கூறி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். இப்போது என்னை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கி விடுவேன் என்று கூறுகிறார்கள்.
பொதுக்குழுவிற்கு வரவில்லை என்கிறார்கள், வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூடுகிறது. என்னை கூப்பிட்டார்கள். நான் போய் கடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டேன்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கட்டிடம் தொடர்பாக பொதுக்குழுவில் பேசிய போது, ஜனவரிக்குள் வழக்கு முடிந்து விடும். அதற்கு பிறகு கண்டிப்பாக பண்ணிவிடலாம் என்று என்னிடம் தெரிவித்தார். இப்போது மாற்றி பேசுகிறார்.
என்னைப் பொறுத்தவரை நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் நல்லா இருக்க வேண்டும். அதற்கு ஒரு கட்டிடம் வேண்டும் என்று கேட்கிறேன். அதை கட்டுவதற்கு இளம் தலைமுறை நடிகர்கள் அனைவரும் இணைந்து ஒரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறோம் என்று சொல்கிறேன். இவ்வாறு நான் கேட்பது தவறா? கேட்டதற்கு நீக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.
நடிகர் சங்கத்தைப் பற்றி பொதுக்குழுவில் மட்டும் தான் பேச வேண்டும். வெளியே எல்லாம் பேசக் கூடாது என்று சொன்னார். தற்போது அவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சங்கப் பிரச்சினைப் பற்றி பேசியிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?
இனிமேல் இந்தப் பிரச்சினையை விடப் போவதில்லை. துணைத் தலைவர் என்னை நாய் என்று கூறுவதற்கு முந்தைய நாள் வரை எனக்கு நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் எண்ணமில்லை. என்றைக்கு நாய் என்றாரோ அன்றே முடிவு செய்துவிட்டேன். நான் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்பேன். அதற்காக தலைவர் பதிவியில் எல்லாம் நிற்கமாட்டேன். நாசர், பொன்வண்ணன், ராஜேஷ் உள்ளிட்ட நாங்கள் அனைவருமே தேர்தலில் நிற்போம். இதை பதவி மோகம் என்பது தவறு.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு இன்னும் பூமி பூஜையே நடக்கவில்லை. அதற்குள் 170 கோடி, 240 கோடி வருமானம் கிடைக்கும் என்கிறார்கள். வழக்கு நடந்துக்கிட்டு இருக்கு, அதற்குள் இதெல்லாம் சொல்கிறார்கள். ஜனவரியில் வழக்கு ஜெயித்துவிடுவோம் என்று சொன்னார் அல்லவா, ஜனவரியில் வழக்கு என்னாச்சு என்று கண்டிப்பாக கேட்பேன். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் வரும் வரை நான் கேள்வி கேட்கத் தான் செய்வேன். கேள்வி கேட்பது தப்பு என்று யார் சொல்ல முடியும். நல்ல விஷயத்திற்காக கேள்வி கேட்பதில் தவறில்லை.
சங்கத்தின் விதி எண் 13-ன் படி நடிகர் குமரிமுத்து தவறாக பேசினார் என்று நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார்கள் அல்லவா... தற்போது காளை மற்றும் ராதாரவியையும் இதே விதியின் கீழ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும். சட்டம் என்பது எல்லாருக்கும் பொது தானே.
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்கிறார்கள் அல்லவா... என்னை நீக்குவது பற்றி கவலையில்லை முதலில் நான் என்ன தவறு செய்தேன் என்று கூறச் சொல்லுங்கள்" என்று காட்டமாக கூறினார் விஷால்.
..............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment