கமலஹாசன் தன்னைப் பகுத்தறிவு வாதியாகக் காட்டிக் கொண்டாலும் அவரது படைப்புகள் எல்லாம் தசாவதாரம், விஸ்வரூபம் என்று புராணப் பெயர்களையே சூடி நிற்கின்றன. அந்த வகையில்தான் பாபநாசம் படப்பெயரும் அமைந்துள்ளது!
நடிகர் கமலஹாசன் தன்னைப் பகுத்தறிவுவாதியாகக் காட்டிக்கொண்டாலும் அவரது படைப்புகள் எல்லாம் தசாவதாரம், விஸ்வரூபம் என்று தெய்வப் பெயர்களையே சூடி நிற்கின்றன. அந்த வகையில்தான் பாபநாசம் படமும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை மாவட்டம் நாங்குநேரி சென்ற கமலஹாசன் அப்போது நாங்குநேரி வானமாமலை மட ஜீயர் சுவாமிகளை சந்தித்திருக்கிறார்!
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றிகரமாக ஓடியது திரிஷ்யம் படம். இதைத் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான் தமிழிலும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக கெளதமியும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாங்குநேரி, குற்றாலம், மேலக்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.
இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமாக நாங்குநேரி ஸ்ரீவானுமாமலை பெருமாள் கோயிலுக்கு வந்த கமலஹாசன், படப்பிடிப்பை முடித்துவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள ஜீயர் சுவாமிகளின் மடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஜீயர் சுவாமிகளை சந்தித்து உரையாடியுள்ளார். ஜீயர் சுவாமிகளின் முன்பு கமலஹாசன் நெற்றி நிறைய விபூதியுடன் அமர்ந்து பேசும் காட்சிகள் வெளிவரவே பரபரப்புக் கிளம்பி விட்டது.
நாங்குநேரி ஸ்ரீவானுமாமலை பெருமாள் கோயிலில் என்ன நடந்தது? என்பது குறித்து அக்கோயிலைச் சேர்ந்த, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்களிடம் கேட்ட போது;
நாங்குநேரி கோயில் சார்ந்த பகுதிகளில் இதற்கு முன்பும் சினிமா படப்பிடிப்புக்கள் நடந்துள்ளன. அதைப்போல கமலஹாசன் படம் சம்பந்தமான ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்று தொடர்புடைய சினிமா நிறுவனத்தினர் முறைப்படி அனுமதி கேட்டனர். என்ன காட்சி என்ற விபரம் கேட்கப்பட்டு, முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.
பிற்பகல் மூன்று மணியளவில் கோயிலின் வெளியில் இருந்தே படப்பிடிப்பு துவங்கியது. படத்தில் ஆன்மீகம் சார்ந்த சந்நியாசி ஒருவரை கமல் தேடிவருவது போலக் காட்சி எடுக்கப்பட்டது. கமல் வரும் முன்பே அந்த சந்நியாசி போய்விட்டது போல அந்த காட்சி அமைந்திருந்தது. கமலஹாசன் நெற்றியில் திருநீறுடன் வெளிப்பிரகாரத்தில் நடந்து செல்வது போல காட்சி எடுக்கப்பட்டது. வரும்போது திருநீறு அணிந்துதான் வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்பு தளத்தில் கோயில் பற்றியும் ஜீயர் சுவாமிகள் பற்றியும் கமலஹாசனிடம் சிலர் எடுத்து கூறவும், ஜீயர் சுவாமிகளை சந்திக்க கமல் விரும்பினார். இதுபற்றி ஜீயரிடம் கூறப்பட்டது.
அனுமதி வழங்கப்படவே, ஜீயர் சுவாமிகளை கமலஹாசன் சந்தித்தார். மரியாதை நிமித்தமான அந்தச் சந்திப்பில் கமலுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. ஜீயர் சுவாமிகளிடம் அவர் ஆன்மிகம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஜீயர் சுவாமிகள், நல்ல கருத்துள்ள படங்களை எடுக்க வேண்டும் என்று கூற, கட்டாயம் தான் முயற்சிப்பதாகக் கூறினார் கமலஹாசன். ஜீயர் சுவாமிகளும், உங்களின் இந்தப் படம் நன்கு அமையவும் நீங்கள் மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள் என்றார். மிகக்குறுகிய நேரமே நடைபெற்ற இந்தச் சந்திப்பினை முடித்துக்கொண்ட கமலஹாசன் நன்றி கூறி விடை பெற்றார். இதுதான் நடந்தது.
கமலஹாசன், கோயிலின் மூல ஸ்தானத்திற்கோ, கொடிமரத்தினை தாண்டிய உள்பகுதிகளுக்கோ செல்லவில்லை. சிலர், மேல்சட்டையைக் கழற்றாமல் கமலஹாசன் கோயிலுக்குள் சென்றுவிட்டார் என்று பரபரப்புக் கிளப்பி வருகின்றனர்.
அது தவறானது. ஜீயர் சுவாமிகளை சந்திக்கும்போது சிலர் கமலஹாசனிடம் மேல் சட்டையை கழற்றலாமே என்றதற்கு கமலஹாசன் நாசூக்காக மறுத்துவிட்டார். எனவே, மேல்சட்டையை கழற்றுங்கள் என்று யாரும் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தவும் இல்லை என்று முடித்தார்கள்.
அதன்பிறகு கமலஹாசன் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள தேர், சப்பரம், பல்லக்கு போன்றவற்றைப் பார்த்து அவற்றையும் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கமல், நாத்திகம் பேசி வந்தாலும் சமயம் தொடர்பான இலக்கியங்களில் ஆர்வமுடையவர். திவ்யபிரபந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். எனவே, ஜீயரோடு அதுபற்றி விரிவாகப் பேசியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் சிலர்.
எது எப்படியோ, கமலஹாசனின் பாபநாசம் படத்திற்கு வானுமாமலை ஜீயர் ஸ்பொன்சரில் ஒரு விளம்பரம் கிடைத்தாகி விட்டது!
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
...........................................................................................................
0 comments:
Post a Comment