↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகர் : கார்த்தி
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் : முத்தையா
இசை : ஜி வி பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு : வேல்ராஜ்


பரமக்குடி அருகே உள்ள மூன்று கிராமத்தை சுற்றி நடக்கும் கதைதான் கொம்பன். 

அரச நாடு என்ற கிராமத்தில் ஆடு வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் கார்த்தியை அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பாசம் காட்டி வருகின்றனர். அந்த ஊரில் எந்தவொரு விஷயங்களாகட்டும் இவரைத்தான் ஊர் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். அதேபோல், அடிதடி விஷயங்களிலும் கார்த்தியே முன்னிலை வகிக்கிறார். கார்த்தியின் நடவடிக்கைகள் எதுவும் அவருடைய அம்மாவான கோவை சரளாவுக்கு பிடிப்பதில்லை. இதனால் வழக்கம்போல் தனது மகனை திட்டி தீர்த்து வருகிறார். 

இந்நிலையில் பக்கத்து ஊரான செம்மநாட்டில் வசிக்கும் தனது உறவுக்காரரான கருணாஸ் அழைப்பின் பேரில் அந்த ஊர் திருவிழாவுக்கு செல்கிறார் கார்த்தி. அங்கு நாயகி லட்சுமிமேனனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் கருணாஸ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க திட்டம் போடுகிறார். லட்சுமிமேனனின் அப்பா ராஜ்கிரண். தனது மகள் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் ராஜ்கிரண், அவளுக்கு நல்ல இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். 

கார்த்திக்கு லட்சுமிமேனனை பெண் கேட்டு வரும் கருணாஸிடம், கார்த்தியை பற்றி விசாரித்துவிட்டு அவருக்கு பெண் தருவதாக வாக்குறுதி தருகிறார் ராஜ்கிரண். அதன்படி, அரசநாட்டில் சென்று கார்த்தியை பற்றி விசாரிக்கிறார் ராஜ்கிரண். ஊரில் எல்லோரும் கார்த்தியை பற்றி நல்லவிதமாக கூறினாலும், அவருடைய முரட்டுக் குணத்தை பற்றியும் ராஜ்கிரணிடம் கூறுகிறார்கள். கார்த்தியின் முரட்டுக்குணத்தை பற்றி அறியும் ராஜ்கிரண் முதலில் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க தயங்குகிறார். இருப்பினும், கார்த்தியின் நல்ல குணத்துக்காக இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

இதற்கிடையில் ராஜ்கிரண் தன்னைப் பற்றி ஊரில் விசாரித்ததை அறியும் கார்த்தி, அவரது பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார். ஒருகட்டத்தில் லட்சுமிமேனன்தான் ராஜ்கிரணின் மகள் என்பதை அறிந்ததும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமணத்திற்கு பிறகு தனது அப்பா தன்னுடனே இருப்பார் என்று லட்சுமிமேனன் போடும் ஒப்பந்தத்தின் பேரில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. 

திருமணத்திற்கு பிறகு கார்த்தி வீட்டுக்கே வந்து குடியேறுகிறார் ராஜ்கிரண். தனது மாமனார் மீது சற்று வெறுப்பிலேயே இருந்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில், முன்பகை காரணமாக கார்த்தியை தீர்த்துக்கட்ட பக்கத்து ஊரைச் சேர்ந்த சூப்பர் சுப்பராயன் தகுந்த நேரம் பார்த்து காத்திருக்கிறார். இந்த விஷயம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது. இதை நேரடியாக கார்த்தியிடம் கேட்க தயங்கும் ராஜ்கிரண் தனது மகளான லட்சுமிமேனனை விட்டு கேட்கச் சொல்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினையில் ராஜ்கிரணை கார்த்தி அடித்து விடுகிறார். இதனால், வீட்டைவிட்டு வெளியேறி தனது சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறார் ராஜ்கிரண். 

பின்னர் ராஜ்கிரணின் உண்மையான பாசம் மற்றும் குணம் பற்றி தெரிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னுடனே அழைத்து வந்து வைத்துக் கொள்கிறார் கார்த்தி. இந்நிலையில், கார்த்தியை பழிவாங்க லட்சுமிமேனனை பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறார் சூப்பர் சுப்பராயன். அப்போது ராஜ்கிரண் வந்து எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு லட்சுமிமேனனை காப்பாற்றி செல்கிறார். இதனால் பகை மேலும் வளர்கிறது. கார்த்தியை மட்டும் குறிவைத்து காத்திருந்த கும்பல், தற்போது அவருடைய குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போடுகிறது. 

இதிலிருந்து தன் குடும்பத்தை கார்த்தி மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

கார்த்தி பருத்திவீரன் படத்திற்கு பிறகு கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கிறார். முறுக்கு மீசை, மடித்து கட்டிய வேட்டி என இவரது கெட்டப் அசத்தலாக இருக்கிறது. இவருடைய நடிப்பில் பருத்திவீரனின் சாயல் இருப்பதுதான் சற்று நெருடலாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சியில் தூள் கிளப்புகிறார். காதல் காட்சிகளிலும் ரொமான்ஸ் கூட்டியிருக்கிறார். 

லட்சுமிமேனன் கிராமத்துப் பெண் வேடத்துக்கு பொருந்தும் கச்சிதமான முகத்துடன் அழகாக வலம் வந்திருக்கிறார். இந்த படத்தில் இவர் கொஞ்சம் மெச்சூரிட்டியான பெண் போலவே தோற்றமளிக்கிறார். படம் முழுக்க பாவடை தாவணியிலும், புடவையிலும் வலம் வரும் இவருக்கு கனமான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார். 

கார்த்தியின் மாமனராக வரும் ராஜ்கிரண் அனுபவ நடிப்பில் மிளிர்கிறார். முத்தையா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். உண்மையான கிராமத்து வாசியாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இடைவேளைக்கு முன் இவர் பேசும் வசனங்கள் ஒருவித உணர்வை ஏற்படுத்துகின்றன. தம்பி ராமையாவும் கிடைத்த இடத்தில் சிரிக்க வைத்திருக்கிறார். வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயனும் நடிப்பில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் கிடைத்த சந்தோஷம் நமக்கு. இதுவரை காமெடி வேடத்தில் நடித்த கோவை சரளா இப்படத்தில் காமெடி, செண்டிமென்ட் கலந்து நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். 

கிராமத்து படங்கள் என்றால் வெட்டுக்குத்து, அல்லது பாசத்தை பிழியும் செண்டிமென்ட் காட்சிகள் இருக்கும். ஆனால், இப்படத்தில் இரண்டையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா. தனது முந்தைய படத்தில் அம்மா-மகன் பாசத்தை காட்டிய முத்தையா, இந்த படத்தில் மாமனார்-மருமகனுக்கு இடையே உள்ள நட்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். கிராமத்து படமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். இருப்பினும், வழக்கமான கதையும், அடுத்தடுத்து காட்சிகளை யூகிக்கும்படி வைத்ததும் சற்று பலவீனம். மேலும், சண்டைக்காட்சிகள் அதிகமாக இருப்பது சற்று போரடிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கருப்பு நிறத்தழகி’ பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார். 

மொத்தத்தில் ‘கொம்பன்’ கொம்பு சீவிய காளை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top