மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பி.க்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி எம்.பியாக உள்ள சச்சின் டெண்டுல்கர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.
இதனையடுத்து சாலை வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத புட்டம்ராஜு கண்டிகாவை அழகிய முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என சச்சின் கனவு கண்டார்.
அதன்படி, 400பேர் மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட அந்த கிராமத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கான்கிரீட் சாலைகளை சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது. கிராமத்தினர் உடல் நலனை கருத்தில் கொண்டு கிராமத்தில் குட்டி மருத்துவமனையும் கட்டப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிகூடம், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கிராமம் முழுவதும் பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நடைபெற்று வரும் பணிகளை அடிக்கடி பார்வையிட்டு தேவைப்பட்ட மாற்றங்களையும் சச்சின் செய்து வந்தார்.
கிராமத்தை மேம்படுத்தும் பணிக்காக சச்சின் தனது எம்.பி.நிதியில் இருந்து ரூ.2.75 கோடியும் மத்திய அரசு ரூ.3 கோடியும் வழங்கியது.
தனது தத்து கிராமத்தின் மாற்றம் குறித்து சச்சின் கூறுகையில், பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு பாருங்கள், நான் திட்டமிட்டதை விட அற்புதமான கிராமமாக மாறியிருக்கும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment