‘‘ ‘பருத்தி வீரனை’ இனிமே எடுக்க முடியாது. அது அமைஞ்ச படம். அதற்குப் பிறகு கிராமத்திற்குப் போகணும்னு ஆசையிருந்தும், கதைகள் சரிவர பொருந்தி வரவில்லை. அப்படியே வந்தாலும் ‘பருத்தி வீரன்’ ஜாடையிலேயே இருந்தது.
அதனால் கிராமத்திற்குப் போகிற ஆசையை மனசில் பூட்டி வச்சிட்டு அடுத்தடுத்து போயிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு முத்தையா இந்தக் கதையைக் கொண்டு வந்தார். பிடிச்ச விஷயம்னு பார்த்தால், ஒரு மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் நடக்கிற ஒரு கதை. கிட்டத்தட்ட டைரக்டர் முத்தையாவோட தாத்தா வகையில் நடந்த கதையும் கூட.
அப்படி ஒரு உண்மைத் தன்மையும் இருக்கு. ராமநாதபுரம்தான் களம். அது வானம் பார்த்த பூமி. மத்தபடி, ஆடு மேய்க்கலாம், கரிமூட்டம் போடலாம். பாதிப்பேர் மிலிட்டரிக்கு போயிட்டாங்க. மீதிப்பேர் சென்னைக்கு வண்டியக் கட்டிட்டாங்க. ‘கொம்பன்’னு வச்சுக்கிட்டு சண்டை இல்லாமல் எப்படி? கிராமத்தில் நடக்கிற மாதிரி அசலா பல விஷயங்கள் நடக்குது படத்தில்!’’‘‘ராமநாதபுரம் ஏரியாவை வச்சு படங்களே அதிகம் வந்ததில்லையே?’’
‘‘அவ்வளவு வறட்சி அங்கே. ‘அட, பசுமையா இருக்கே’ன்னு பக்கத்துல போய்ப் பார்த்தால் அங்கே இருக்கிறது கள்ளிச்செடிதான். எங்க கேமராமேன் வேல்ராஜ் மதுரைக்கு பக்கத்துல பிறந்த கிராமத்துக்காரர். ஆனா, இதுவரைக்கும் கிராமத்துப் படமே செய்ததில்லை. படு வறட்சியான கிராமத்து பேக்டிராப்பை கலர்ஃபுல்லா காட்டுவது ரொம்பக் கஷ்டம்.
அதை செய்திருக்கார். ஆச்சி மனோரமா மாதிரி கோவை சரளா மேடத்திற்கு ஒரு வேஷம். ‘சின்னக் கவுண்டரி’ல் ஆச்சி மனோரமா கெட்டப்புக்கு எங்க ஆத்தா படத்தைத்தான் மாடலா வாங்கிட்டுப் போனார் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார். இப்ப பார்த்தால் கோவை பாஷையை விட்டுட்டு ராமநாதபுர பாஷையில் பின்னி எடுக்கிறார் சரளா!’’
‘‘ராஜ்கிரண் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி பெர்பார்மென்ஸ் தருவாரே...’’‘‘அவர் அந்தப் பக்கமே பிறந்து வளர்ந்தவர். நான் சிட்டி பையன். என்னை மாத்திக்கிட்டு அவரோடு நிக்கிறது பெரிய சவால். நடிக்கிறதை விடுங்க, அவர் கூட பேசிக்கிட்டு இருக்கிறது கூட அருமையா இருக்கும். அவர் கிராமத்தில் இருந்து படம் பார்த்து, ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்தது,
விநியோகஸ்தரா மாறினது, புரொடியூசரா ஆனது, இளையராஜாவை சந்திச்சது, அவரே நடிச்சதுன்னு சம்பவங்கள் சும்மா தூள் பறக்கும். பொண்ணைக் கொடுத்தவங்க கொஞ்சம் இறங்கித்தானே வரணும். படத்தில் அப்படி பல இடங்களில் என்கிட்ட வருவார். மாமனார் - மருமகன் லந்து... பார்க்க நல்லாயிருக்கும்!’’
‘‘எப்படி இருப்பான் ‘கொம்பன்’? மீசையெல்லாம் பயமுறுத்துதே!’’‘‘ ‘கொம்பன்’ அட்டூழியம் செய்கிற ஆளில்லை. தண்ணி அடிக்கத் தெரியாது. ஊரோட இணைஞ்சு நிற்பான். பிறந்த மண்ணையும், மனுஷனையும் பார்த்து சந்தோஷப்படுற ஆளு. ‘பருத்தி வீரன்’ ஊரை விட்டு விலகியே நிப்பான்... இவன் ஊரே கதின்னு கெடப்பான். அந்த மீசை வச்ச பிறகு, கொஞ்சம் தனித்துவமான நடிப்பை கொடுக்க முடிஞ்சது!’’‘‘கொஞ்ச நாட்களாக நீங்க நடிக்கிற வரிசைப் பட்டியல் நல்லா யிருக்கு...’’
‘‘சொன்ன கதையை அக்கறையா கேட்டுத்தான் பண்றோம். சில சமயம் கவனிப்பு தவறுது. கதையை ரொம்ப ‘லைட்’டா எடுத்துக்கிட்டு நடிச்சாலும் நமக்குப் பத்தலைனு தெரியுது. சமயங்களில் இதுக்கு முன்னர் வந்த தோல்வி கூட நல்லதுனு தோணுது. அந்த மனநிலையில் எவ்வளவோ கத்துக்கிட்டோம். அப்படி எதுவும் இல்லாமல் போயிருந்தால் புதுசா கத்துக்கிட்ட விஷயம்னு எதுவுமே இல்லாமப் போயிருக்கும்!’’‘‘புது ஜோடி லட்சுமி மேனன் எப்படியிருக்காங்க?’’
‘‘ரொம்ப மாடர்ன் பொண்ணு லட்சுமி. ஆனா கிராமத்து வாகுக்கு கனகச்சிதமாகப் பொருந்துறது இன்னும் அழகு. ராஜ்கிரண், தாய் இல்லாமல் வளர்க்கிற பொண்ணு. அப்பாவையே அதட்டுகிற மாதிரி செல்லப் பொண்ணா வர்றாங்க. கிராமத்து பழக்கவழக்கங்களை என்னமோ ரொம்ப நாள் பக்கத்துல இருந்து தெரிஞ்சுக்கிட்டு இருந்த மாதிரி ஆச்சரியம். அவங்க அம்மி எல்லாம் பார்த்திருக்க நியாயமே இல்லை.
அம்மியில் மிளகாய் அரைச்சு நடிச்சதைப் பார்த்தா ஒருத்தரும் அவங்களை சந்தேகப்பட முடியாது. குழவிக் கல்லை தூக்கி ‘நச்’னு வழிச்சு தூக்கி வச்சது இன்னும் அதிசயம்!’’‘‘நீங்க பண்ற படங்களை அண்ணன் சரிபார்ப்பாரா?’’
‘‘அப்படியில்லை. ஆனா, படம் முடிஞ்சதும் அவருக்கு நேரம் இருந்தா போட்டுக் காட்டுவேன். பார்த்துட்டு உண்மையான அபிப்பிராயம் சொல்வார். ஆனா, அம்மா, தங்கச்சிகிட்ட கட்டாயம் காட்டிடுவேன். அவங்களும் அப்படியே. இப்பக்கூட ‘மெட்ராஸ்’ படத்தை மறுபடியும் அண்ணன் பார்த்திருக்கார். ‘டே, இப்பப் பார்த்தால் படம் வேற விதமா, இன்னும் புதுசா சில விஷயங்கள் தெரியுதுடா’ன்னு சொன்னார்!’’
‘‘பொண்ணு எப்படியிருக்கா?’’
‘‘பெயர் உமையாள். அண்ணன் பொண்ணு தியாதான் அவங்களுக்கு ரொம்ப தோஸ்த். தியா எங்க அண்ணனையே மாதிரி. அத்தனை பொறுமை. உமையாளை விட்டுப் பிரிய மாட்டாங்க. பக்கத்துல இருந்து பெரிய மனுஷி மாதிரி பார்த்துப்பாங்க. உமையாளுக்கு சிவி தாத்தாவும் ரொம்ப சிநேகிதம்!’’
0 comments:
Post a Comment