↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் காலிறுதியுடன் திரும்பின.
அரையிறுதியில் நியூசிலாந்திடம் தென்ஆப்பிரிக்க அணியும், இந்திய அணி, அவுஸ்திரேலியாவிடமும் தோற்று, தொடரை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் இன்று மெல்போர்னில் நடக்கும் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் மெக்குல்லம், குப்டில் களமிறங்கினர்.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் அணித்தலைவர் மெக்குல்லம் டக்-அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் குப்டிலுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் குப்டில் 34 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில்லியம்சனும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். இவர் ஜான்சன் வீசிய வேகத்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.
33 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 12 ஓட்டங்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த டெய்லர், எலியாட் சிறப்பாக விளையாடினர்.
நிதானமாக விளையாடி வந்த நிலையில், டெய்லர் (40) பால்க்னர் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கோரி ஆண்டர்சன் டக்- அவுட்டாக நடையை கட்டினார்.
இதனையடுத்து வந்த ரொஞ்சியும் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து இக்கட்டான நிலையில் சிக்கியது.
பின்னர் வெட்டோரி (9) ஜான்சன் பந்தில் பவுல்ட் ஆக, மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த எலியாட்டும் 83 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹென்றி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், சவுத்தி ஓட்ட முறையிலும் வெளியேறினர்.
இதனால் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
அவுஸ்திரேலிய தரப்பில், பால்க்னர், ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு பின்ஞ் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
வார்னர் 45 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த சுமித், அணித்தலைவர் கிளார்க் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
வெற்றி பெறும் தருணத்தில் கிளார்க் (74) அரைசதம் கடந்த நிலையில், ஹென்றி வீசிய பந்தில் பவுல்ட் ஆனார்.
இருப்பினும் அவுஸ்திரேலிய அணி 33.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுமித் (56) அரைசதம் கடந்த நிலையிலும், வாட்சன் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர்.
இதனால் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை வென்றது. உலகக்கிண்ண அரங்கில் இது அவுஸ்திரேலியாவுக்கு 5வது உலகக்கிண்ணம் ஆகும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top