கத்தி’ படத்துக்கு எதிராக கதகளி ஆடியதில் முக்கியமானவர் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.வேல்முருகன். ஆட்டம் முடிந்து படம் திரைக்கு வந்துவிட்டாலும் வேல்முருகனை சுற்றி கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் ஏராளம். சர்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைதேட வேல்முருகனைச் சந்தித்தோம்.
''லைக்கா நிறுவன அதிபரும் இலங்கைத் தமிழர் என்கிறார்களே... ஒரு தமிழர் தயாரித்த படத்தை எதிர்த்தது ஏன்?''
''பச்சைத்தமிழன் பாரிவேந்தர் தயாரித்த படம் 'புலிப்பார்வை’. அவர், பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறார். அரசியல் கட்சி வைத்துள்ளார். பெரிய செல்வந்தர். 'புலிப்பார்வை’ படத்தின் இயக்குநர் பிரவீன்காந்த், நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாம் தமிழர்கள்தான். 'புலிப்பார்வை’ படத்தின் கதை, காட்சி அமைப்புகள், புலிகள் இயக்கத்தை, ஈழத்தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல இருந்தது. அதனால், எதிர்ப்பு தெரிவித்தோம். 65 சதவிகித காட்சிகளை மாற்றி அமைத்து வருகிறார்கள். தீபாவளிக்கு அந்தப் படம் வெளிவரவில்லை. உள்நாட்டுத் தமிழர் என்றாலும் கொள்கையை விட்டுக்கொடுத்து நாங்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை.
லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன், ஈழத்தமிழராக இருந்தாலும் அவர், தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த ராஜபக்ஷேவின் கைக்கூலி. ராஜபக்ஷேவின் வர்த்தகக் கூட்டாளி. லைக்கா நிறுவனம்தான், தமிழக அரசு மிகக் கடுமையாக எதிர்த்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் கோல்டன் ஸ்பான்சராக இருந்தது. இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டும் மாநாட்டையும் நடத்தியது. சர்வதேச அரங்கில் ராஜபக்ஷேவின் போர்க்குற்றத்தை மறைக்க சிங்கள அரசு செய்யும் தகிடுதத்தங்களுக்கு சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் உடந்தையாக இருந்து உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறது. ஈழத்தமிழர்கள் வாழ்வில் விடியல் ஏற்படும் வரை இலங்கையோடு ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அந்த வகையில்தான், ஈழத்தமிழர் போர்வையில் தமிழ் திரை உலகில் ராஜபக்ஷே கும்பல் கால்பதிப்பதை எதிர்த்திருக்கிறோம். லைக்கா நிறுவனத்தை 'கத்தி’ படக்குழுவில் இருந்து வெளியேற்றும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்தோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதில் பெருமைப்படுகிறோம்.''
''லைக்கா பெயரை நீக்கியதால் எல்லாம் சரியாகிவிட்டதா?''
''திரைத் துறை, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் ஒரு நொடியில் தன்பக்கம் சுண்டி இழுக்கும் வசீகர ஆற்றல் கொண்டது. அந்த ஆயுதம் நல்லவர்கள் கையில் இருக்க வேண்டும். திரையுலகம் நல் வழியில் செல்ல வேண்டும். வியாபார நோக்கம் இருந்தாலும் சமூக அக்கறையோடு அவர்கள் செயல்பட வேண்டும் என்றுதான், எங்களின் நியாயமான கோரிக்கையை முன்வைத்தோம். அதை திரைத் துறையினர் இப்போது புரிந்து கொண்டுவிட்டனர். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்தவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். கோடி கோடியாக பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று லைக்கா போன்ற தயாரிப்பாளர்களிடம் கைநீட்டினால் எதிர்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை எச்சரித்து உணர்த்தி இருக்கிறோம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 'கத்தி’ ஒரு பாடமாக அமைந்துவிட்டது.''
''உங்கள் அமைப்பு 'கத்தி’ படத்தின் ரிலீஸில் கடைசி நேரத்தில் சமரசம் ஆகிவிட்டதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே?''
''இனம் என்கிற உணர்வுதான் எங்களை வழிநடத்திச் செல்கிறது. ஈழத்தமிழர்களின் பிணக்குவியல் மீது நிற்கும் ரத்த வெறிபிடித்த ராஜபக்ஷேவின் கூட்டாளி கொடுத்த பணத்தை வாங்கும் ஈனப்பிறவி கூட்டம் நாங்கள் அல்ல. இப்படி வதந்தி, புரளி கிளப்பும் துரோக கும்பல், சமரசம் ஆனதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். தடா, பொடா போன்ற கொடூர சட்டங்களில் கைதாகி சிறை சென்ற தியாகசீலர்கள் இந்தக் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத, எதிர்பார்க்காத தொண்டர்கள் எங்கள் அமைப்புகளில் இருக்கிறார்கள். எங்களுக்குப் பணம், பதவி ஒரு பொருட்டல்ல. பல்வேறு வழக்குகளை சந்தித்து லட்சியத்துக்காக வாழ்கிறோம். தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. எங்களது முடிவில் இறுதிவரை உறுதியாக இருந்தோம். எனவே, எப்படியாவது படத்தை வெளியிட்டாக வேண்டும் என்று லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர் நிலையில் இருந்து விலகியது. படம் வெளியானது. நாங்கள் முதலில் வைத்த கோரிக்கை அப்படியே நிறைவேறி இருக்கிறது. முழு வெற்றி கிடைத்துவிட்டது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எங்கள் மனசாட்சிக்குத் தெரியும். எங்களின் மனசாட்சியாக இருக்கும் மக்களுக்கும் தெரியும்!''
''இதில் சம்பந்தம் இல்லாமல் 'ஜெயலலிதாவுக்கு நன்றி’ என்று விஜய் அறிக்கைவிட்டாரே... அது எதற்காக?''
''எதற்காக நடிகர் விஜய், மக்களின் முதல்வர் அம்மாவுக்கு நன்றி சொன்னார் என்று எனக்குத் தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. இதுபற்றி அவர்தான் விளக்க வேண்டும்!''
Thanks to vikatan.com
0 comments:
Post a Comment