திருவாசகத்தில் “ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க” என்று ஒரு வாக்கியம் இருக்கு. அதில் ஏகன் என்றால் ஓர் ஆள், அனேகன் என்றால் பல ரூபங்களில் இருக்கும் ஒரே ஆள் என்று அர்த்தம். இந்தப் படத்தின் நாயகன் தனுஷ் நான்கு ரூபங்களில் வருகிறார்.
அதனால அனேகன் தலைப்பு சரியா இருக்கும்னு முடிவு பண்ணினேன்” கதையை உடைத்துப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் கே.வி.ஆனந்த்
‘அனேகன்’ என்ன களம்?
இதுவரைக்கும் முழுமையான காதல் படங்கள் எதுவுமே நான் பண்ணல. இந்தப் படத்துல அதைப் பண்ணியிருக்கேன். ஓர் ஆணும், பெண்ணும் சேர்வதுதான் படத்தின் பிரச்சினை. எதனால பிரச்சினை, எப்படி சேர்கிறார்கள் இதுதான் படம்.என்னோட எல்லாப் படங்களிலுமே பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைஞ்சு இருக்கும். இதனால கொஞ்சம் காதலும் இருக்கும். இதுல படம் முழுக்கக் காதல்தான். காதலை மையப்படுத்திப் படம் எடுத்தால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். இதை மனசுல வைச்சு பண்ணியிருக்கும் படம்தான் ‘அனேகன்’.
பெரிய பட்ஜெட் படத்தில் புதுமுக நாயகி ஏன்?
கதாநாயகி ஸ்கூல் பொண்ணாகவும் இருக்கணும், ஐ.டியில் பணியாற்றும் 25 வயசுப் பொண்ணாகவும் வரணும். ஏனென்றால் அந்தப் பாத்திரம்தான் மெயின் கேரக்டரா இருக்கும். நடிகையா நிறைய நடிப்பு விஷயங்கள் இருக்குற கதை இது. தனுஷ் பாத்திரத்திற்கு ரொம்ப சரி சமமாக இருக்கும். கேரக்டரை மனசுல வெச்சுத்தான் அமிராவைத் தேர்வு செஞ்சேன்.
நடிப்பிலிருந்து விலகியிருந்த கார்த்திக்கை மறுபடியும் நடிக்க வைக்க என்ன காரணம்?
ஒரு கம்பெனியோட பாஸ் கேரக்டருக்கு ஐம்பது வயது ஆள் தேவைப்பட்டார். கார்த்திக் நடித்த ‘கோபுர வாசலிலே’, ‘அமரன்’ ஆகிய படங்களுக்கு பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட இருந்தப்போ உதவி ஒளிப்பதிவாளரா பணியாற்றி இருக்கிறேன். அப்போது இருந்தே, எனக்கு கார்த்திக்கை ரொம்பப் பிடிக்கும்.
அவரு நடிக்காமல் இருக்கும்போது, நம்ம போய் கேட்டா பண்ணுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. நேர்ல போய் பார்த்து, கதையைச் சொன்ன உடனே நான் பண்றேன்னு சொன்னார். அவர் நடிக்க மாட்டார்னு சொல்லி, என்னோட உதவியாளர்கிட்ட பந்தயம் கட்டி 1000 ரூபாய் தோற்றுவிட்டேன். மறுபடியும் வர்ற கார்த்திக்கைப் பெரியளவில் பேச வைக்கிற படமா ‘அனேகன்’ இருக்கும்.
உங்களுடைய படங்களின் பாடல்களைத் தொடர்ந்து வெளிநாடுகளில் காட்சிப்படுத்துகிறீர்கள். இது சரியா?
முதல்ல இருந்தே காரணத்தைத் தேடணும். சினிமாவில் எதுக்குப் பாடல்? எப்போ பார்த்தாலும் ஏன் நாயகன், நாயகி மரத்தைச் சுற்றி டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட காரணத்தை முதல்ல கேட்கணும். சினிமா என்பது பொழுதுபோக்கு, அதில் ஒரு சில படங்களைத்தான், இது இந்த வகை படம் என்று பிரிக்க முடியும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும், ஒரே படத்தில் எல்லாமே இருக்கணும்னு நினைக்கிறாங்க.
நான் போய் ஒரு மலையை மட்டுமே காட்டல, அதுல ஒரு போட்டோகிராபி இருக்கு. எனக்கு எப்போதுமே ஒரு இயற்கையை போட்டோ எடுக்கிறது ரொம்பப் பிடிக்கும். பேஷன் போட்டோக்கள் எல்லாம் நான் பண்ணியதே இல்லை. எனக்குப் பெண்கள் என்றாலே ரொம்பக் கூச்சம். நான் ஒரு பத்திரிகை போட்டோகிராபர், அப்புறம் இயற்கை போட்டோகிராபர். எனக்கு முக்கியமா இயற்கை விஷயங்களைப் புகைப் படம் எடுப்பது ரொம்பப் பிடிக்கும்.
பாடல் காட்சிகளுக்கு எதற்கு வெளிநாடு என்றால், நாயகன், நாயகி ஆடும்போது சுற்றி எல்லாரும் நின்று பார்ப்பது போல எல்லாம் நான் எடுக்கல. பார்த்தாலே பிரமிப்பா இருக்கிற இடத்துல பாடல்களைப் படமாக்குறேன். எனக்கு இயற்கையில் ஈடுபாடு அதிகம். அதனால் அங்கு படமாக்குகிறேன்.
நீங்க ஒளிப்பதிவு பண்ணிய படங்களில், நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணிய படம் எது?
கண்டிப்பாக ‘முதல்வன்’தான். பல தளங்களில் படத்தின் கதை பயணிக்கும். விதவிதமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். படத்திற்கு ஒளிப்பதிவு ஸ்டைல் என்று முடிவு பண்ணுவார்கள். ‘முதல்வன்’ படத்திற்கு நீங்க ஸ்டைல் என்று எதையுமே சொல்ல முடியாது. ஷக்கலக்கா பேபி அப்படிங்கிற பாடலை ‘க்ராஸ் புராசஸிங்’ (CROSS PROCESSING) என்ற தொழில்நுட்பத்தில் பண்ணினோம்.
கேமராவில் ரேம்பிங் (RAMPING) ஷாட்ஸ் நிறைய பண்ணினோம். அதிக வேக கேமராவை வைத்துக்கொண்டு, வேகமாக காட்சிகள் நகர்வதுபோல பண்ணினோம். இன்றைக்கு ஆவிட் எடிட்டிங் முறையில் இதைச் சுலபமா பண்ணலாம். ஆனால், அதை அப்போதே கேமராவில் பண்ணினேன்.
இந்தியாவில் முதல் முறையா ரேம்பிங் முறையில் காட்சிகள் பண்ணினது ‘முதல்வன்’படத்தில்தான். இயக்குநர் ஷங்கர் அந்த மாதிரி விஷயங்களுக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். ‘முதல்வன்’ படத்தில் இம்மாதிரி நிறைய தொழில்நுட்பங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
அந்தப் படத்திற்கு எனக்குச் சாதாரண விருதுகூடக் கொடுக்கவில்லை. ‘விரும்புகிறேன்’, ‘நேருக்கு நேர்’ இப்படி நிறைய சின்ன படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. நான் ஒளிப்பதிவு பண்ணிய படங்களில், ரொம்ப சந்தோஷப்பட வைத்த படம் ‘முதல்வன்’.
அடுத்து யாரை இயக்கத் திட்டம்?
அஜித், விஜய் உள்பட அனைத்து நடிகர்களுமே எனக்கு நல்ல பழக்கம்தான். அடுத்து என்ன படம் என்பது என் மனசுல ஓடிட்டு இருக்கு. நான் எப்போதுமே கதை தெரியாமல், ஒரு தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் போய்ப் பேசுவது கிடையாது. நிறையப் பேர் கேட்டுட்டு இருக்காங்க. எனக்கு அது தப்பா தெரியுது. முதல்ல நான் பண்ற கதை, அந்த ஹீரோவிற்குப் பிடிக்கணும்.
இதுவரைக்கும் நான் படம் பண்ணிய எல்லாத் தயாரிப்பாளர்களுக்குமே முழுக் கதையையும் சொல்லியிருக்கேன். நீங்க கதையை எல்லாம் சொல்ல வேண்டாம், படம் பண்ணுங்க என்று சொல்லும் நிலையில் இருந்தாலும்கூட, முழுக் கதையையும் கூறிவிடுவேன். நான் முழுக் கதையையும் க்ளைமாக்ஸ் வரைக்கும் எழுதி முடிந்த உடனே, அந்தக் கதையே ஒரு ஹீரோவைக் கேட்கும். அப்போதுதான் ஹீரோவை முடிவு பண்ணுவேன்.
0 comments:
Post a Comment