டோணியைவிட கங்குலியே தனக்கு பிடித்த கேப்டன் என அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்தார். 2000வது ஆண்டில், நைரோபில் நடந்த ஐசிசி நாக்அவுட் கோப்பை (இப்போது சாம்பியன்ஸ் டிராபி என அழைக்கப்படுவது) போட்டித்தொடரில் கங்குலியின் கேப்டன்ஷிப்பின்கீழ் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. அப்போது அணியில் இணைந்தவர்தான் யுவராஜ்சிங். மற்றொரு நட்சத்திரமான ஜாகீர்கானும் இதே தொடரில் அறிமுகமாகியிருந்தார். அந்த வகையில் கங்குலி, டோணி ஆகிய இரு கேப்டன்கள் கீழும் ஆடி அனுபவம் உள்ள யுவராஜ் சிங் தனது அனுபவம் குறித்து தெரிவித்துள்ளதாவது:
வங்கதேசத்தில் நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் நான் அதிக பந்துகளை சந்தித்தும் ரன் எடுக்க முடியாமல் திணறியதற்காக ரசிகர்கள் என்மீது கடுமையாக ஆத்திரப்பட்டனர். ஆனால் யாருமே சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை. அன்றைய போட்டியின்போது, பேட்டுக்கு பந்து சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. மிகவும் ஸ்லோ பிட்சான அதில், என்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்தேன். இந்திய அணிக்கு மீண்டும் நான் தேர்வாகுவேனா என்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
நான் சிறப்பான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த முயன்று வருகிறேன். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் ஆகிய மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் தகுதி டோணிக்கு உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் பின்பற்றும் சுழற்சி முறை கேப்டன் நடைமுறை இந்திய அணிக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். டோணி தனது கேப்டன் பணியை சிறப்பாக செய்துவருகிறார். எனவே இந்தியாவுக்கு வேறொரு கேப்டன் தேவையேயில்லை. டோணி சிறப்பாக பணியாற்றினாலும், எனது ஃபேவரைட் கேப்டன் எப்போதுமே கங்குலிதான். இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment