திரைப்படங்களில் இருசக்கர வாகனம், கார்களில் பாதுகாப்பின்றி ஹீரோக்கள் நடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.திரைப்படங்களில் ஹீரோ அல்லது வேறு நட்சத்திரங்கள் புகை பிடிக்கும்போதோ, மது குடிக்கும்போதோ புகை பிடிப்பது, மது அருந்துவது உடல்நலத்துக்கு தீங்கானது என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என தணிக்கை குழு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் எல்லா படங்களிலும் குறிப்பிட்ட காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன. தற்போது டூவீலர், கார்களில் பாதுகாப்பின்றி நடிகர்கள் நடிப்பது போன்ற காட்சிக்கும் வாகனங்களில் பறந்தபடி சண்டை செய்யும் காட்சிக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உத்தரபிரதேச போக்குவரத்து கமிஷனர் ரவீந்திர நாயக், இது குறித்து மத்திய சென்சார் குழு தலைமை அதிகாரியிடம் கூறியதாவது:
'படங்களில் ஹீரோக்கள் ஹெல்மட் அணியாமல் டுவீலர்களிலும், சீட் பெல்ட் அணியாமல் கார்களும் ஓட்டியபடி நடிக்கிறார்கள். இது போக்குவரத்து விதிகளை மீறிய செயலாகும். இது இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை தூண்டுவதுடன் அதுபோல் தாங்களும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வாகனங்களில் படுவேகமாக சென்று சண்டை போடும் காட்சிகளும் இடம்பெறுகிறது. இதுபோன்ற காட்சிகளை படங்களில் அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதித்தால் மது, புகைப்பழக்கத்துக்கு எதிராக எச்சரிக்கை வாசகம் காட்டுவதுபோல் ஸ்டன்ட் காட்சிகளுக்கும் எச்சரிக்கை வாசகம் காட்டப்பட வேண்டும்' என கூறி உள்ளார். இவரது கருத்துக்கு இணையதள பக்கங்களில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தணிக்கை குழுவினரும் இதுகுறித்து ஆலோசித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment