↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆந்திர போலீசாரால் சித்தூர் வனப்பகுதியில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய இருவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் இன்று சாட்சியம் அளித்துள்ளனர். இதனால், ஆந்திர அரசுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. 

ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்காக திருவண்ணாமலையை சேர்ந்த சேகர், தர்மபுரியை சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோர், மனித உரிமை ஆணைய தலைமையகம் அமைந்துள்ள டெல்லிக்கு நேற்று இரவே சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். இவர்களை மதுரையை சேர்ந்த பீப்பிள் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு பாதுகாத்து வருகிறது. இதனிடையே மற்றொரு சாட்சியான ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த இளங்கோ, அடையாள அட்டை பிரச்சினை காரணமாக செல்லவில்லை. 

இம்மூவருமே, மேலும் 7 பேருடன் சேர்ந்து மரம் வெட்டுவதற்காக திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ்சை வழிமறித்து நிறுத்திய, ஆந்திர போலீசார், 7 பேரை இழுத்து சென்றுள்ளனர். ஆனால், இவர்கள் மூவரும் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்ததால், வேறு பயணி போலும் என்று நினைத்து ஆந்திர போலீசார் விட்டுச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில்தான், பிடித்துச் செல்லப்பட்ட 7 பேரும் என்கவுண்டரில் இறந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளது ஆந்திர அரசு. ஆனால், அவர்கள் பஸ்சில் இருந்து இறக்கி கொண்டு செல்லப்பட்டதை, சாட்சியங்கள், மனித உரிமை ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர், நீதிபதி, கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், சாட்சிகளிடம் முழுமையாக விசாரித்துவிட்டு, நீதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த வழக்கில், இம்மூவரின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top