↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்படலாம் என்று பலமாக பேசப்படுகிறது. உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை பயிற்சியாளராகப் பணியாற்றிய டங்கன் பிளட்சருக்கு அடுத்து யாரைப் போடலாம் என்ற தேடுதலில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் கங்குலியின் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது.
பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவை கங்குலி சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு எதற்கு என்று தெரியவில்லை. ஆனால் கங்குலியை பயிற்சியாளராக்க பிசிசிஐ முடிவு செய்து விட்டது. இதுதொடர்பாகவே கங்குலி, டால்மியாவைச் சந்தித்துள்ளார் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன. கங்குலியை ஐபிஎல் தலைவராக நியமிக்க முன்னதாக டால்மியா முயற்சித்தார் என்பது நினைவிருக்கலாம்.
கங்குலி பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் பயிற்சியாளர் பதவிக்கான பரிந்துரையில் அவரும் உள்ளார் என்று உறுதியாக கூறப்படுகிறது. ஏப்ரல் 26ம் தேதியன்று பிசிசிஐ நடவடிக்கைக் குழு கூடுகிறது. அப்போது புதிய பயிற்சியாளர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. உலகக் கோப்பைப் போட்டியுடன் பிளட்சரின் பதவிக்காலம் முடிந்து போய் விட்டது. அதேபோல இயக்குநராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிந்து போய் விட்டது என்பது நினைவிருக்கலாம்.
கங்குலி நியமனம் குறித்த செய்திகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அபய் குருவில்லா கூறுகையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஒரு இந்தியரைப் பரிசீலிப்பது நல்ல விஷயம், அருமையான விஷயம். அதிலும் கங்குலி நல்ல தேர்வு என்றார். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக கடந்த பல வருடங்களாக வெளிநாட்டுக்காரர்களே நீடித்து வருகின்றனர். கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்த நிலைதான். ஜான் ரைட் இருந்தார். பிறகு கிரேக் சேப்பல் வந்தார். அவருக்குப் பிறகு கேரி கிர்ஸ்டன் இருந்தார். இவரது காலத்தில்தான் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. கடைசியாக பிளட்சர் பணியாற்றினார். அடுத்து வெள்ளைக்காரர் யாராவது வருவார்களா அல்லது சுதேசி பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment