கிரானைட் கொள்ளையர்களின் பேராசையில் சிதைக்கப்பட்ட புராதன சின்னங்கள், இயற்கையை அழித்து வெட்டப்பட்ட கிரானைட் மரணக் கிணறுகள் மதுரை மாவட்டத்தில் மிரள வைக்கின்றன. சேதாரமாகி எஞ்சியுள்ள பெரும் மலைகள், இனி விவசாயமே செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் பாலைவன நிலங்கள் பயமுறுத்துகின்றன. கிரானைட் தொழில் என்ற பெயரில் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களை அழித்து மனிதர்கள், பறவைகள், சிறு விலங்குகள் என்று பல உயிரினங்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இடங்களை வேதனையுடன் சகாயம் சுற்றி வருகிறார். தினசரி காலை எட்டு மணிக்கே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் சகாயம் மதிய உணவு இடைவெளியில்கூட ஓய்வு எடுப்பதில்லை.
'விதிமீறலை விதி ஆக்காதீர்!’
கீழவளவு பகுதியில் இருந்த பொக்கிஷ மலை என்கிற சக்கரை பீர் மலை வெட்டப்பட்டிருப்பதைக் கண்ட சகாயத்திடம், 'நடுப்பகுதி உனக்கு, வால் பகுதி அவருக்கு, சைடு பகுதி எனக்கு என்று துண்டுத்துண்டாக அறுத்து பங்குபோட்டு கொண்டுள்ளனர் பி.ஆர்.பி., ஒலம்பஸ், பி.கே.எஸ். கிரானைட் தரப்பினர்' என்று சொன்னார்கள் அங்கே காத்திருந்த மக்கள். 'இந்த மலையை முதலில் அறுக்கும்போதே நாங்கள் சட்டப்படி எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டோம். ஆனால் மலையை காப்பாற்ற முடியவில்லை' என்று அப்போது மனு கொடுத்தார் ஜமாஅத் தலைவர் முகமது காசிம். 'இந்து முஸ்லிம் யார் திருமணம் செய்தாலும் இங்கு வந்து வேண்டினால், அவர்களுக்கு ஆண் பிள்ளைகள்தான் பிறக்கும். அதனால்தான் பல்வேறு இந்துக்கள் சக்கரை என்ற வார்த்தையை அவர்களின் பெயர்களுக்கு முன்னாள் வைத்துக்கொள்வார்கள். மத நல்லிணக்கத்துக்கு பெயர்போன இடத்தை அழித்துவிட்டனர்' என்றார் ஒரு முதியவர்.
பொக்கிஷ மலையைச் சுற்றி இருந்த கூத்தன் செட்டி புதுக்குளம், வேப்பம்குடி கண்மாய், குதிரை சாம்பான் கண்மாய் என்று அங்கிருந்த கண்மாய் பகுதிகளுக்குள் கிரானைட் கழிவுகளை மலைபோல் கொட்டி வைத்திருந்தனர். மேலும் அந்தப் பகுதி விவசாயிகளிடம் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி நிலங்களை சொற்ப தொகைக்கு மிரட்டி வாங்கி, அவர்களை அந்த இடத்தைவிட்டே விரட்டிவிட்டனர் என்கிற அதிர்ச்சித் தகவல்களையும் மக்கள் சோகத்துடன் சொல்ல, அதையும் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டார் சகாயம்.
அடைஞ்சான்பட்டியில் நடந்துபோகும் பாதை கிரானைட் கொள்ளையர்களால் மூடப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவித்தனர். அதை ஆய்வு செய்த சகாயம், பழைய அரசு பதிவேட்டில் பாதை இருப்பதைப் பார்த்துவிட்டு, 'விதிமீறலை விதி ஆக்காதீர்’ என்று ஆவணங்களை திருத்திய அதிகாரிகளைக் கடிந்துகொண்டார். எல்லா கண்மாய்களும் கிரானைட் கழிவுகள், கற்கள் என நிரம்பி பாதை இல்லாமல் இருந்தது. தாசில்தாரை அழைத்து, 'நீங்கள் ஒரு கண்மாயை முழுமையாகக் காட்டினால் உங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தருகிறேன்!’ என்று சொல்ல... அவர் அமைதியாக நின்றார்.
நிர்வாண குளியல்!
புது தாமரைபட்டி கிராமத்தில் ஆய்வு செய்துகொண்டு இருந்த சகாயத்திடம், 'ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்கிறோம். கிராமத்தைச் சுற்றி கிரானைட் தோண்ட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் வைக்கும் வெடிகளில் வீடுகள் பிளந்து இடிந்து விழுந்தன. புகார் சொன்னதால் அங்கு வேலை பார்க்கும் நபர்கள் எங்கள் தெருவில் உள்ள அடி பம்பில் வந்து ஜட்டியுடன் குளிப்பார்கள். சில சமயம் அதுவும்கூட இருக்காது. பொம்பளைங்க பயந்துக்கிட்டு தண்ணீர் எடுக்க போக மாட்டாங்க. ஒருநாள் தனியா போன ஒரு பெண்ணை பாலியல் தொல்லை தந்தாங்க. அவனைப் பிடித்து ஆலமரத்தில் கட்டி வைத்திருந்தோம். பி.ஆர்.பி மைத்துனர் வந்து அவனை மீட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தினமும் தொல்லை தர ஆரம்பித்தனர். மானத்தை அடகுவைத்து குடியிருக்க முடியாம வேறு இடம் போய்விட்டோம்' என்று பூட்டிய மற்றும் இடிந்த வீடுகளைக் காட்டி கதறி அழுதபடியே புகார் தந்தார் முருகன்.
'இந்த இடத்துலதான் நரபலி கொடுத்தாங்க...’ பாசுவதம் என்கிற 62 வயது பெண்மணி சகாயத்திடம், '2006-ல் இங்கிருந்த 52 வீடுகளை மிரட்டி வாங்கிக்கொண்டனர். நீங்கள் நிற்கும் இந்த இடம்தான், 10 வருடங்களுக்கு முன்பு 'ஐ.ஆர்8’ என்கிற நெல், ஓர் ஏக்கருக்கு 110 மூட்டைகள் வீதம் விளைந்து விருது வாங்கின பூமி. கிரானைட் இருக்குனு தெரிந்ததும் எங்களை மிரட்டியும், தராதவர்களை அடித்தும் வாங்கினார்கள். 500 அடிக்கு மேல பூமியை குடைந்து வெட்டியதில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. காசுக்குத்தான் கேன் தண்ணி வாங்குறோம். இப்போ எல்லா நிலங்களும் போய் கட்டட வேலைக்குப் போறோம். அதுக்கும் வெளி மாநில ஆட்களைக் கூட்டி வந்துடுறாங்க. எங்க பூமியில எங்களால பொழப்பு நடத்த முடியல. நெல், தானியம்னு பொன் விளைந்த பூமி இப்போ சுடுகாடா கிடக்கு. கோர்ட்டு்ல தீர்ப்பு கொடுக்கும் முன்பு, நீதிபதி ஐயா இந்தப் பூமியை ஒருமுறை நேரில் வந்து பார்த்துட்டுப் போகச் சொல்லி எழுதுங்க.. அப்போதான் விவசாயம் பார்த்த பூமி இப்படி சுடுகாடா போன விவரம் அவருக்குப் புரியும்' என்று கலங்கினார்.
பூமா என்கிற பிராமண சமூகத்துப் பெண், 'எனக்கு 60 வயது ஆகிறது. எங்க தாத்தா காலத்தில் வாங்கிய நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துட்டு வர்றேன். என் நிலத்தை மிரட்டிக் கேட்டும் நான் தரலை. அதனால என் நிலத்துக்குப் போகவிடாமல் வேலி போட்டு அடைத்துவிட்டனர். அறுவடை செய்ய முடியலை. ஒத்த பொம்மனாட்டியா இவங்ககூட மோதிட்டு இருக்கேன். என்ன ஆனாலும் ஆகட்டும் என்று விவசாயம் செய்து வருகிறேன்'' என்று தனது நெல் வயலை காட்டினார்.
அந்த ஊரைச் சேர்ந்த உஷா என்கிற பெண், ''எனது மூன்று வயது குழந்தையை இங்கு நரபலி கொடுத்துட்டாங்க. ஊரே சேர்ந்து ஒரு மாதம் போராட்டம் பண்ணியும் இன்னமும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கலை. எதுவும் நடக்கலை. இந்த இடத்துலதான் என் புள்ளையை பலி கொடுத்தானுங்க... நீங்களாவது ஏதாவது செய்யுங்கய்யா...' என்று அருகில் இருந்த கால்வாயை காட்டிக் கதறினார்.
'எதுவா இருந்தாலும் புகாராக கொடுங்க!’
சகாயத்திடம் பொதுமக்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பி.ஆர்.பி தரப்பில் இருந்து வேவு பார்த்த சூப்பர்வைசர் கண்ணன், பொதுமக்களிடமும் சகாயத்திடமும் சண்டைக்கு வந்தார். குரலை உயர்த்தி பொதுமக்கள் சொல்லும் குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை செய்து வந்தவரை சகாயம், ''உங்களிடம் நான் எதுவும் பேசவில்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் முறைப்படி புகாராக எழுதி உங்கள் தரப்பு விவரத்தைச் சொல்லுங்க'' என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.
கிரானைட் குவாரிகள் வந்த பிறகு மதுரை பகுதிகளில் உற்பத்தியாகிய உணவுத் தானியங்கள், சிறு குறு பயிர் வகைகள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய உணவுக் கழகத்துக்கு அனுப்பிய புள்ளி விவரங்களைக் கேட்டு வாங்கி இருக்கிறார் சகாயம். 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் உற்பத்தியான உணவு, உற்பத்தி என இரண்டு பட்டியல்களையும் எடுத்துக்கொண்டு, விவசாயிகளின் தொலைந்துபோன வாழ்வையும், விவசாய நிலங்கள் கிரானைட் கழிவுகளால் மலடாகி போன விவரங்களையும், நிலத்தடி நீர் இல்லாமல் போன காரணத்தையும், பென்னி குயிக் அமைத்து கொடுத்த நீர்வரத்து கால்வாய்கள், அவைகள் சேதாரப்படுத்தி நொறுக்கப்பட்ட கால்வாய்கள் என ஏராளமான விவரங்களுடன் கிரானைட் மாஃபியாக்களுக்கு எதிராக பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- விகடன் செய்திகள் -
சண்.சரவணக்குமார்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், நா.ராஜமுருகன்
0 comments:
Post a Comment