ஏஞ்சலினா ஜோலியின் ‘அன்ப்ரோக்கன்’ திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று வருகிறது. இப்படம் தொடர்பாக விமர்சகர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் 2015-ம் ஆண்டில் பெண்கள் ஆவலுடன் பார்க்கக் காத்திருக்கும் படங்கள் என்ற கட்டுரையை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள படங் களில் ஒன்று ஏஞ்சலினா ஜோலியின் ‘பை த ஸீ.’
இந்தப் படம் இவர் தயாரித்து இயக்கும் மூன்றாம் படம். ‘அன்ப்ரோக்கன்’ படம் திரையரங்குக்கு வருவதற்கு முன்னரே ‘பை த ஸீ’ பட வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஏஞ்சலினா ஜோலி. 2005-ம் ஆண்டில் வெளியான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்’ படத்துக்குப் பின்னர் மீண்டும் ப்ராட் பிட்டுடன் இணைந்து ‘பை த ஸீ’ படத்தில் நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.
திருமணத்துக்குப் பின்னர் இந்த ஜோடி முதன்முறையாகத் திரையிலும் தம்பதியாகத் தோன்றப்போகிறது. ஐரோப்பியத் தீவு நாடான மால்ட்டாவில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றுள்ளது.
இந்தப் படம் பெரிய பட்ஜெட் படமாகவோ ஆக்ஷன் படமாகவோ இருக்காது என்றும், ஒரு பரிசோதனைப் படமாகவும் சுதந்திர சினிமா போன்றும் இருக்கும் என்றும் இந்தப் படத்தைப் பற்றி ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார். என்றாலும் இது ஒரு காதல் கதையாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
தம்பதியிடையிலான உறவைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் பல வருடங்களுக்கு முன்னர் ஜோலி எழுதியுள்ளதாகவும், தங்களது திருமண உறவைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாகத் தீவு ஒன்றில் விடுமுறையைக் கழிக்கும் தம்பதி பற்றிய கதையாக இது இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்சு நாட்டில் 1970களின் மத்தியில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரிக்கும் கதை இது. ரோலண்ட் என்னும் அமெரிக்க எழுத்தாளர் கதாபாத்திரத்தில் கணவனாக ப்ராட் பிட்டும், வனெஸ்ஸா என்னும் நடன மங்கை கதாபாத்திரத்தில் மனைவியாக ஏஞ்சலினா ஜோலியும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் சுற்றும் இந்தத் தம்பதியரிடையே சச்சரவுகள் ஏற்படும் சூழலில் ஒரு கடற்கரையோர நகரில் தங்குகின்றனர். அப்போது அவர்களிடையே ஏற்படும் உணர்வுபூர்வ நெருக்கம் படத்தில் பேசப்படும் என்கிறார்கள்.
எமிலி டிக்கன்ஸனின் கவிதையான ‘பை த ஸீ’ என்பதிலிருந்து இப்படத்தின் தலைப்புக்கான எண்ணம் ஏஞ்சலினா ஜோலிக்குக் கிடைத்திருக்கலாம். ஏஞ்சலினாவின் நிஜ வாழ்வின் சில பக்கங்களும் இந்தத் திரைக்கதையில் நிழலாகக் காட்சிப்படுத்தப்படலாம் என்பதால் பெண்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் என்பது ஐரோப்பிய ஊடகங்களின் ஊகம்.
0 comments:
Post a Comment