சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக நான்கு சதங்களை விளாசிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து இடம்பெற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும் சுமித் சதமடித்துள்ளார். (அடிலெய்டு-162*, பிரிஸ்பேன்-133, மெல்போர்ன்-192, சிட்னி-117) விளாசி பிரமிக்க வைத்துள்ளார்.
டெஸ்டில் தொடர்ச்சியாக 4 அல்லது அதற்கு மேல் சதம் அடித்த ஐந்தாவது அவுஸ்திரேலியர் சுமித் ஆவார். இதற்கு முன்பு டான் பிராட்மேன் (தொடர்ந்து 6 டெஸ்டில் சதம்), ஜாக் பிங்கில்டன் (4), நீல் ஹார்வி (4), மேத்யூ ஹைடன் (4) ஆகிய அவுஸ்திரேலியர்கள் இச்சாதனையை செய்துள்ளனர்.
4 மற்றும் அதற்கு மேல் அடங்கிய டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையும் சுமித்துக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் 2003-04-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4 போட்டி கொண்ட தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் சதம் அடித்திருந்தார்.
இந்த டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் முதல் 6 வீரர்கள் 50-க்கும் மேல் ரன்களை எடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் முதல்தர 6 வீரர்கள் அனைவரும் ஒரே இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் கடப்பது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் இவ்வாறு நடப்பது 6-வது நிகழ்வாகும்.
அவுஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் (அடிலெய்டு 7-517, பிரிஸ்பேன்-505, மெல்போர்ன்-530, சிட்னி 7-572) 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. 4-க்கும் மேற்பட்ட தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் ஒரு அணி 500 ரன்களுக்கு மேல் எடுப்பது வரலாற்றில் இது 2-வது முறையாகும். இச்சிறப்பை பெற்ற மற்றொரு அணி தென் ஆப்பிரிக்கா (2003-04-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுக்கு எதிராக) ஆகும்.
அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இந்த தொடரில் இதுவரை 698 ரன்கள் திரட்டியுள்ளார். 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர்களில் அதிகபட்சமாக ரிக்கி பொண்டிங் 706 ரன்கள் (2003-04-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக) எடுத்துள்ளார். 2-வது இன்னிங்சில் சுமித் 9 ரன்கள் சேர்த்தால், இந்த சாதனையை முறியடித்து விடுவார்.
இந்த தொடரில் 4-வது வரிசையில் இறங்கிய ஆட்டக்காரர்களில் ஸ்டீவன் சுமித் (அவுஸ்திரேலியா), விராட் கோஹ்லி (இந்தியா) தலா 3 முறையும், மைக்கேல் கிளார்க் (அவுஸ்திரேலியா) ஒரு முறையும் சதம் அடித்துள்ளனர்.
ஒரே தொடரில் 4-வது வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மொத்தம் 7 சதங்கள் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
0 comments:
Post a Comment