↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பல எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தால், தான் இழந்த மதிப்பினை, 
மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் மீட்டுக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்தவர்கள், இந்த தொகுப்பில், மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அதிக முயற்சி செய்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, நாம் பயன்படுத்த என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அவற்றை எல்லாம் தர முயற்சித்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள சிறந்த வசதிகளையும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிமுகமான பல நல்ல விஷயங்களையும் கலந்து, இதனை வடிவமைத்துள்ளது. அத்துடன், இந்த சிஸ்டத்தினை, க்ளவ்ட் சேவையுடன் இணைத்து, (ஒன் ட்ரைவ்) நல்ல வசதிகளைத் தர முன்வந்துள்ளது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் மற்றும் விண்டோஸ் வாடிக்கையாளர்கள், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்பதற்கான கருத்துகளை முன்வைத்துள்ளனர். விண்டோஸ் 8 சிஸ்டம் வாங்கிப் பயன்படுத்திய பலரும், அதனால் கிடைத்த எதிர்பாராத ஏமாற்றத்தால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பலரும் அடுத்த சிஸ்டத்திற்கு மேம்படுத்தத் தயாராக உள்ளனர். ஆனால், அதே நேரத்தில், விண்டோஸ் 8 பயன்படுத்தத் தொடங்கிய பலர், விலை மலிவான, மற்ற நிறுவனங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாறி உள்ளனர். பலர், பெர்சனல் கம்ப்யூட்டர்களை விடுத்து, குரோம் புக், ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு மாறி உள்ளனர். இவர்களை மீண்டும் மைக்ரோசாப்ட் தன் குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், விண்டோஸ் 10 இலவசமாக வழங்கப்பட வேண்டும். விண்டோஸ் 7 மற்றும் அதன் பின்னர் வந்த விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 சிஸ்டம் வாங்கிய அனைவருக்கும் இது இலவசமாகத் தரப்பட வேண்டும். வர்த்தக ரீதியில், இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகத் தெரியலாம். ஆனால், தன் நிலையைச் சீராக்க, மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுத்தே ஆக வேண்டியதிருக்கும். தன் எதிர்கால வர்த்தகத்தில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த, இந்த முடிவினை மைக்ரோசாப்ட் எடுக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தினாலும், தன் புரோகிராம்களில் கூடுதல் வசதிகளைக் கட்டணத்தின் அடிப்படையில் தந்து இழப்பை ஈடு செய்திடலாம் என்றும் மைக்ரோசாப்ட் அலுவலர் கெவின் தெரிவித்துள்ளார். தற்போது ஆபீஸ் 365 தொகுப்பில், மைக்ரோசாப்ட் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. அதனுடன் இணைந்து விண்டோஸ் 10 சிஸ்டத்திலும் இனி தன் வர்த்தக ரீதியான செயல்பாட்டினை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், இதற்கு ஒரு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு வரலாம். இலவசமாக விண்டோஸ் 10 கொடுக்கப்படும் நிலையில், பெரும்பாலானவர்கள், தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்திட மாட்டார்கள். புதிய கம்ப்யூட்டர் வாங்க மாட்டார்கள். எனவே, கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்பவர்கள், இந்த இலவச அனுமதியை எதிர்ப்பார்கள். 

முன்பு புதிய விண்டோஸ் பதிப்பு வெளியிடப்படுகையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், புதிய சாதன வசதிகளை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களைப் புதிய கம்ப்யூட்டர் வாங்கும் வகையில் வழி நடத்துவார்கள். இது இப்போது நடைபெற இயலாது என இந்த தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணுகின்றன. ஆனால், நடுநிலையாளர்கள், இப்போதும் கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், விண்டோஸ் 10ஐப் பயன்படுத்தும்போது, புதிய வசதிகளைத் தரும் வகையில், தயாரிப்பில் புதுமைகளைக் கொண்டு வரலாம் என்று கூறுகின்றனர். 

இதற்கான தீர்வு ஒன்றை மைக்ரோசாப்ட் கண்டறிய வேண்டும்.
விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பிற்குப் பலத்த வரவேற்பு இருப்பதால், மைக்ரோசாப்ட் இது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் விண்டோஸ் 7/8/8.1 சோதனைத் தொகுப்பு வெளியிடப்பட்ட போது, பயன்படுத்திய வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் காட்டிலும், விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பிற்க்கு மிக அதிகமான அளவில் பயனாளர்கள் பதிந்துள்ளனர். ஏறத்தாழ 15 லட்சம் பேர் தாங்கள் பயன்படுத்தி வருவதாகப் பதிந்துள்ளனர். தினந்தோறும் 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை, பயனாளர்களின் பின்னூட்டங்கள் அடிப்படையில், 1,300 பிழைக் குறியீடுகள் கண்டறியப்பட்டு, குறை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால், விண்டோஸ் 10 வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முழுமையான தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top