↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோஹ்லி சிறந்த கேப்டனாக விளங்க வேண்டுமானால், மகேந்திரசிங் டோணியிடமிருந்து, விராட் கோஹ்லி பாடம் கற்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கிய ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோணி திடீரென ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கோஹ்லி தன்னிடம் மாற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து ஸ்டீவ் வாக் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ஷாங்காய் நகரில் இன்று நடந்த உலக விளையாட்டு விருதளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஸ்டீவ் வாக் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி விவரம்: கோஹ்லி இன்னமும், பக்குவப்பட வேண்டியது அவசியமாகும். உலக கோப்பை தொடரில் கோஹ்லியிடம் சில பிரச்சினைகள் காணப்பட்டன. கோஹ்லி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராகவும், எதையுமே தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்பவராகவும் காணப்பட்டார். 


ஒரு கேப்டனாக செயல்பட வேண்டுமானால், எதற்கெடுத்தாலும், உணர்ச்சிவசப்பட கூடாது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும். டோணியிடம் அதுபோன்ற இதயம் உள்ளது. டோணியை எந்த பிரச்சினையும் துளைத்து உள் செல்ல முடியாது. எனவே, கோஹ்லிக்கு, டோணிதான் நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும். கோஹ்லிக்கென்று தனித்திறமைகள் இருக்கலாம். ஆனால், டோணியிடமிருந்து சில விஷயங்களை கோஹ்லி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் எதைப்பற்றி விமர்சனம் சொன்னாலும், அதை டோணி பொருட்படுத்த மாட்டார். வெளியில் நடக்கும் விஷயங்கள், டோணியின் ஆட்டத்திறனை பாதிக்காது. டோணி எப்போதும் சிரித்தபடியே, தனது வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்.


கோஹ்லியின் விளையாட்டு ஆர்வம் எனக்கு பிடிக்கும். ஆனால், கேப்டனான பிறகு, ஒவ்வொரு சண்டை, தகராறையும் ஆரம்பித்து வைக்கும் நபராக கோஹ்லி தொடர முடியாது. தகராறை விலக்கிவிடும் நபராகவே கோஹ்லி இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கோஹ்லி இருவருமே தலை சிறந்த வீரர்கள். ஸ்மித்தைவிட, டெக்னிக்கலாக கோஹ்லி சிறந்த வீரர். அதேநேரம், நிலைமையை கண்டு ஆடி வெற்றிக்காக போராடுவதில் ஸ்மித் சிறந்த வீரர். இருவருமே நீண்ட காலத்திற்கு கேப்டனாக இருக்கப்போகிறவர்கள். அதிக ரன்களையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் எண்ணம் இல்லை. எனக்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் அனைத்தும் தெரியும் என்றாலும், பயிற்சியாளராக இருந்து அனுபவம் கிடையாது. மேலும், டீன் ஏஜ் பசங்களை வளர்ப்பது, சொந்த தொழில் போன்றவை காரணமாக இன்னும் ஐந்து வருடங்களுக்கு கோச்சிங் பற்றி நினைத்து பார்க்க முடியாது. ஆனால், ஐபிஎல் தொடரில் வீரர்களிடமிருந்து அழைப்பு வந்தால் உதவ தயார். இவ்வாறு ஸ்டீவ் வாக் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top