சமீபத்திய படங்களில் கொம்பனுக்குதான் கோலாகல வெற்றி. அந்த படம் ரிலீசானா திருநெல்வேலியில் குத்துவெட்டு நடக்கும். மக்களின் அமைதி வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை என்றெல்லாம் முழங்கிய டாக்டர் ஐயாவின் பேச்சு, எடுபடாமல் போச்சு. அதே பகுதியில்தான் இந்த படம் இன்னும் அதிக கலெக்ஷனாம். அதற்கப்புறமும் சக்சஸ்மீட் வைக்காமல் போனால் எப்படி? பிரஸ்சை அழைத்து தனது முதல் நன்றியை தெரிவித்துக் கொண்டார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
இந்த படம் தொடர்பான எந்த நிகழ்வுகளுக்கும் வராமலிருந்த லட்சுமிமேனன் வந்திருந்ததுதான் இன்னும் சிறப்பு. மைக்கை பிடித்த லட்சுமிமேனன், ‘முதல்ல உங்க எல்லாருக்கும் சொல்லிக்கிறேன். நான் படிப்பை முடிச்சுட்டேன்’ என்றார் பெருத்த கரவொலிகளுக்கு இடையே. (கல்லாதது உலகளவுங்கறதெல்லாம் சும்மாவா தங்கச்சி?) இன்னும் படிக்கிறார் படிக்கிறார்னு எல்லாரும் எழுதறீங்க. இனிமே அப்படி எழுதாதீங்க’ என்றார்.
‘கொம்பன் படம் பெரிய ஹிட்டாகியிருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த படத்தின் ஷுட்டிங்ல இதை இப்படி பண்ணுங்க. இப்படி நடிங்க என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் டைரக்டர் முத்தையா. ஒரு தடவ சொல்லிட்டா போதாதா? ஏன் திரும்ப திரும்ப அழுத்தம் கொடுக்கிறார்னு சமயத்துல கோபம் கூட வரும். ஆனால் இப்பதான் தெரியுது, அவர் எந்தளவுக்கு இந்த படத்தை பர்பெக்டா கொடுத்திருக்கார்னு’ என்ற லட்சுமி, அதிகம் பேசாமல் அமர்ந்து கொண்டது ஏமாற்றமே.
இறுதியாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இனிமேல் சென்சார் வாங்கிய படங்களுக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கணம் யோசிப்பது போல சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
“இந்தப் படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி ஐயா வெறும் அம்புதான். பின்னணியில் அரசியல் கலந்திருக்கிறது. அவருடைய எதிர்ப்பால் சுமார் 120 திரையரங்குகள் குறைவாகத்தான் கிடைத்தன. படம் இப்போது நல்லபடியாக ஓடுவதால் வரும் புதன்கிழமை முதல் திரையரங்குகளை அதிகரிக்க இருக்கிறோம்.
அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கும் சரியான நேரத்தில் எங்களால் படத்தை அனுப்ப முடியவில்லை. படத்தை தாமதமாக அனுப்பினால், அதற்கான பணத்தை கழித்துக் கொண்டுதான் கொடுப்போம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. அந்த பணத்தையும் ஒப்பந்தப்படி கழித்துவிட்டுத்தான் மீதியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மதுரைக்கு சென்று வர விமான டிக்கெட் செலவு.. ஒரு டிக்கெட் 16000 ரூபாய்.. பல நாட்கள் அலைந்திருக்கிறோம். வழக்கறிஞர்களுக்கான செலவு. படம் பார்க்க பிரிவியூ தியேட்டருக்கு வந்த நீதிபதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் கட்டணம்.. கிருஷ்ணசாமியின் வழக்கறிஞர்களுக்கும் உரிய கட்டணம்.. இப்படி பலவிதங்களில் பணம் தண்ணீராய் செலவானது. இதனால் நாங்கள் நிறைய பண இழப்பை சந்தித்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
படத்தின் பிரச்சினை முடிந்துவிட்டாலும், எனக்குப் பிரச்சினை துவங்கிவிட்டது. இந்தப் பிரச்சினை எழுந்தபோது நான் சென்றது 3 இடங்களுக்குத்தான். முதலில் எனது தந்தையிடம்.. அடுத்து கோவிலுக்கு.. அங்கு சென்று ஆண்டவனிடம் முறையிட்டேன். கடைசியாக பத்திரிகையாளர்களாகிய உங்களிடம்தான் வந்தேன்.
நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன்தான் இந்தப் பிரச்சினையை எளிதாகக் கடந்தேன். உங்களுக்கு படத்தை போட்டுக் காட்டிய பின்புதான் நான் கொஞ்சம் ரிலாக்ஸானேன்.. இனியும் இது தொடர்பாக எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்… நிச்சயம் உங்களிடம்தான் ஓடி வருவேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்..” என்றார்.
0 comments:
Post a Comment