தொடர்ந்து தன் படங்களில் ஏதாவது ஒரு மதத்தை விமர்சித்து மக்களைப் புண்படுத்தி வருகிறார் கமல் ஹாஸன். எனவே அவரைக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், என்று இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சில தினங்களுக்கு முன்தான் இந்து அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் காவல் ஆணையரிடம் ஒரு புகார் தந்தது. அதில் கமல் ஹாஸன் தன் உத்தம வில்லன் படத்தில் இந்துக்களை அவமதித்துள்ளார் என்று கூறி, படத்துக்கு தடை கேட்டிருந்தது.
இந்தப் புகாருக்கு பதிலளிக்கும் வகையில், படத்தில் தாம் எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சி வைக்கவில்லை என்று விளக்கம் தந்தார் படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்.
இந்த நிலையில் தேசிய அளவில் செயல்படும் முஸ்லிம் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய லீக் கட்சி, உத்தம வில்லன் மற்றும் கமலுக்கு எதிராக களமிறங்கியுள்ளது. அதுவும் திடுக்கிடும் கோரிக்கையுடன்.
இன்று சென்னை பெரு நகர காவல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் பொறுப்பாளர் நாசர் ஒரு புகார் மனுவைத் தந்துள்ளார். அதில், "நடிகர் கமல் ஹாஸன் தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்தி வருகிறார்.
முன்பு விஸ்வரூபம் படத்தில் அவர் முஸ்லிம்களை அவமதித்தார். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார். இப்போது உத்தம வில்லன் படத்தில் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளார்.
ஒரு நடிகராக அவர் தன் வேலையைப் பார்க்காமல், தொடர்ந்து மதங்களையும் அவற்றை மதிக்கும் மக்களையும் காயப்படுத்தி வருகிறார். எனவே சமூக அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கமல் ஹாஸனை தேசிய பாதுக்காப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
கமல் ஹாஸன் படங்கள் முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை சர்ச்சையில் சிக்கும். ஆனால் இப்போது அவரது ஒவ்வொரு படம் ரிலீசாகும் முன்பும் ஒரு சர்ச்சை உருவாகிறது. முன்பு தேவர் மகன், பிறகு விருமாண்டிக்கு பிரச்சினை வந்தது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவரது விஸ்வரூபம் படத்தை தமிழக அரசே தடை செய்து, பின்னர் விலக்கிக் கொண்டது. இப்போது உத்தம வில்லனுக்கு இந்து, முஸ்லிம் என இருதரப்புமே எதிர்ப்பு தெரிவித்து தடை கோருகின்றன. இது எங்கு போய் முடியப் போகிறதோ!
0 comments:
Post a Comment