↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இன்னும் வேறு வேறு இன்ப துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். அதிலும் முறையாக நடந்து கொண்டால், இன்பமன்றி துன்பமில்லை. இதையெல்லாம் நன்றாக உணர்ந்து வைத்திருப்பதால், சட்டென்று தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' என்ற ஒன்றை ஆரம்பித்துவிட்டார் விஷால்.

இது பற்றி விஷால் கூறும் போது, "நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் பாடங்கள் கிடைத்தன திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி வந்த மாதிரி உணர்ந்தேன்.

உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை. இந்த இடைவெளி தவிர என் தரப்பிலும் மன்ற செயல்பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன. அது மட்டுமல்ல என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு மாவட்ட நிர்வாகி. என்னைச் சந்திக்க முயன்றிருக்கிறார். தகவல் தொடர்பில் பிரச்சினை முடியவில்லை. சந்திக்க முடியாமலேயே போயிருக்கிறார். பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, உதவி கேட்டு வந்திருக்கிறார். மறுபடியும் சந்தித்த போது சொன்னார் அம்மா போய்ட்டாங்க.. அம்மா போனதுதான் மிச்சம். ஆனாலும் நான் உங்களுக்காக வந்திருக்கிறேன். என்றார் இது நடந்தது 2009ல். அது என்னை காயப்படுத்தி பாதித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்டேன். எதனால் இப்படி ஆனது? தகவல் தொடர்பு இடைவெளி. நம் அணுகுமுறையில் எங்கோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளைக் கூட எனக்குச் சரியாக அடையாளம் தெரியவில்லையே என வருந்தினேன்.

அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன். என் ரசிகர் மன்றம் இனி ‘அகில இந்திய புரட்சித் தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள்.. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம். நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது.. இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும். இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு, தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போக வேண்டும். இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது.

அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார். இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்துவந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம். முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன். இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும். மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.

‘பாயும் புலி' எந்த நிலையில் இருக்கிறது? 

முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்து. இன்றுமுதல் இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது. ‘பாயும் புலி' ரஜினி சார் தலைப்பு, ஏவிஎம்மில் தடையில்லா சான்று பெற்று அனுமதி வாங்கிவிட்டுத்தான் எடுக்கிறோம். ‘பாயும்புலி' தலைப்புக்கு ஒரு பலம் இருக்கிறது. அதற்காகவே வாங்கினோம். காஜல் அகர்வாலுடன் எனக்கு முதல் படம். இயக்குநர் சுசீந்திரனுக்கு 2 வது படம். மதுரை பின்னணிக் கதை. இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால் வழக்கமான ஒன்றாக இருக்காது. எப்போதும் சுசீந்திரன் நடுத்தர வர்க்கம் பற்றி பேசுபவர் சிந்திப்பவர். அது எனக்குப் பிடிக்கும். இந்தப் படமும் நடுத்தர வர்க்கம் பற்றிய கதைதான். இசை இமான். மதுரை பின்னணியில் ‘பாண்டியநாடு' படம் பார்த்து இருக்கிறார்கள். இதையும் பார்க்கப் போகிறீர்கள். நிஜ சம்பவங்களும் நிஜ முகங்களும் பார்க்கலாம். ஒரு நிஜ ரவுடியும் நடிக்கிறார். செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும்.

நடிகர் சங்கப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன? 

நடிகர் சங்கத் தலைவர்களில் சரத்குமார் ராதாரவி, அவர்கள் இருவர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நடிகர் சங்க இடம் 19 கிரவுண்ட்.. ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம் போல காட்சி தருகிறது. அதைக் கட்டச் சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல, சுமார் 2500 சிரமப்படும் நடிகர்களுக்காத்தான். அவர்களின் குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழி பிறக்காதா என்கிற எண்ணத்தில்தான். எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை. சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள் ராதாரவி இழிவாகப்பேசினார். என்னைக் கடனை அடைக்கச் சொன்னார்.. நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒவ்வொன்றாக நான் முடிப்பதற்குள் அவர்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள். 2500 குடும்ப மகிழ்ச்சிக்காகத்தான் இதைப் பேசுகிறேன்.

ஊழல் இல்லை என்கிறார்கள். ஏன், அவர்கள் சொன்ன தேதியில்கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடக்கட்டும். நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன். என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள்."

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top