நாட்டில் அன்றாடம் நடக்கும் முக்கியமான விஷயங்களுக்கெல்லாம் மூக்குக்கு முன் தலையை நீட்டி பேச ஆரம்பிக்கும் விஐபிகள் மத்தியில் மணிரத்னம் மட்டும் வேறு மாதிரி. ‘கருத்தாவது ஒண்ணாவது…’ என்று கழன்று கொள்வார். அவரை சந்திக்கவே முடியாது. கேள்வி கேட்பதற்கும் வழியில்லை. கருத்து கேட்பதற்கும் வாய்ப்பில்லை. மாட்டினால் இது பற்றி கேட்டுவிட வேண்டியதுதான் என்று காத்து கிடந்திருப்பார் போலும், கேட்டேவிட்டார் அந்த மூத்த நிருபர்.
உங்களை தொடர்பு கொள்ளவே முடியலையே? – இது நிருபர்
பேசறதுக்கு எதுவுமில்லாம இருக்கும் போது சந்திச்சு என்ன பேசுறது? அதுமட்டுமில்ல, உங்க பேனா, நோட் பேட் ரெண்டையும் வச்சுட்டு காபி ஷாப் வாங்க. நிறைய பேசுவோம். -இது மணிரத்னம்.
நாட்ல ஏதாவது முக்கியமான இஷ்யூஸ் நடக்கிற நேரத்திலேயும் கூட கருத்து கேட்கணும்னா முடியலையே? சொல்றது உங்க கடமையில்லையா?
கடமைதான். ஆனால் அதை சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிளாட்பார்ம் இருக்கு. இதோ எனக்கு இந்த ஸ்கிரீன் இருக்கு. என் கருத்தை நான் அதில் சொல்வேன். -ஒரு சுருக்கமான பதில் அழுத்தமாக சொல்லிவிட்டு அடுத்த கேள்வியை எதிர்கொண்டார் மணி.
இந்த படம் லிவிங் டூ கெதர் வாழ்கையை பற்றிய படமா?
இன்னும் கொஞ்சநாள்தான். படம் வெளியாகிரும். அதற்கப்புறம் அது பற்றி பேசலாமே?
எந்த கேள்விக்கும் நீட்டி முழக்கி பதில் சொல்லவில்லை அவர். நிருபர் கூட்டத்திலிருந்து பறந்து வந்த வீரியமான கேள்வி இன்னொன்று. ‘உங்க அலைபாயுதே படத்தின் பாதிப்புதான் அந்த படம் வெளிவந்த பல வருஷங்களாகியும் நாட்ல விடாமல் தொடருது. இப்போ கல்யாணம் பண்ணாமலே ஒரு குடும்பமா வாழறது பற்றி படமெடுத்திருக்கீங்க. இது இன்னும் எத்தனை வருஷத்துக்கு தமிழக இளசுகளை பாதிக்குமோ?’
அதற்கப்புறமும் விவாதித்துக் கொண்டிருக்க, அவர் என்ன சர்ச்சை விரும்பியா? படகென்று மைக்கை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பக்கம் தள்ளிவிட, அவர் ஒரு வார்த்தைக்கு மேல் பேசி யார் பார்த்திருக்கிறார்கள். பதிலில்லாமலே முடிந்தது அந்த கேள்வி.
மிக மிக விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு போனார் நன்றி சொல்ல வந்த சுஹாசினி மணிரத்னம். ‘ஒரு படத்தை விமர்சிக்க இங்கு வந்திருக்கிற நிருபர்களாகிய உங்க எல்லாருக்கும் தகுதி இருக்கு. உங்களுக்கு அனுபவம் இருக்கு. நீங்க எப்படி வேணும்னாலும் விமர்சனம் செய்ங்க. ஆனால் மவுஸ் நகர்த்த தெரிஞ்ச எல்லாரும் விமர்சனம் பண்றேன்னு கிளம்பிடுறாங்க. அதுதான் பொறுத்துக்க முடியல’ என்றார்.
‘மவுஸ் கூட்டம்’ என்ன பதில் சொல்லப் போகிறதோ?
0 comments:
Post a Comment