↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.
சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா அலறியவாறே தெருவுக்கு வந்து சிதிலங்களுக்கு இடையே சஸாக்கியின் உடலை கண்டெடுத்தாள். தன் செல்லமகள் இறந்துவிட்டாள் என்று கருதி கதறியபடியே சஸாக்கியை கட்டியணைத்தாள். உடலில் சூடு மிச்சமிருந்தது. இதயம் துடித்துக் கொண்டிருந்தது. ஆண்டவனுக்கு நன்றி சொல்லியவாறே சஸாக்கியை தூக்கிக்கொண்டு மருத்துவர்களிடம் ஓடினாள். சஸாக்கி பிழைத்தாள். காதுக்குப் பின்னான கழுத்துப் பகுதியிலும், கால்களிலும் காயம்.

கொடுங்கனவாய் இரவுகளில் மிரட்டிக் கொண்டிருந்த போர் ஒருவாறாய் முடிவுக்கு வந்தது. ஜப்பானிய மக்கள் தன்னிகரற்ற தன்னம்பிக்கையால் மேலெழத் தொடங்கினார்கள். சஸாக்கியோடு சேர்த்து அவளது தாய்க்கு மூன்று குழந்தைகள். காலனை வென்றவள் என்பதால் சஸாக்கி மீது தனி பிரியம். சஸாக்கி ஆரோக்கியமான குழந்தையாக வளர்ந்தாள். படுசுட்டி. பள்ளியிலேயே வேகமாக ஓடக்கூடியவள் என்பதால், அவள் ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுப்பாள் என்று அனைவரும் நம்பினர்.

பன்னிரெண்டு வயதாகி இருந்தபோது தன்னுடைய கால்களின் வலுவை இழந்துவருவதாக சஸாக்கி நினைத்தாள். பரிசோதித்த மருத்துவர் கண்ணாடியை கழட்டிக்கொண்டே உதட்டைப் பிதுக்கினார். ஏதோ தீவிரமான நோய் என உணர்ந்த பெற்றோர் உடனடியாக ஹிரோஷிமா ரெட்க்ராஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். போர் முடிந்துப்போன கொடுங்கனவாக இல்லாமல் சஸாக்கியை வேறு வடிவில் துன்புறுத்தியது. அணுகுண்டு வெளிப்படுத்திய கதிர்வீச்சால் அவளுக்கு லுக்கேமியா எனப்படும் கேன்சர் நோய் பாதித்திருந்தது. சஸாக்கியின் வாழ்நாள் இன்னும் சிறிது மாதங்களில் முடிந்துவிடுமென மருத்துவர்கள் சொன்னார்கள்.

நாளுக்கு நாள் சஸாக்கி மெலிந்துவந்தாள். நோய் அவளை தீவிரமாக படுத்தத் தொடங்கியது. மரணம் நிச்சயம் என்று தெரிந்தநிலையில் இன்னும் கொஞ்சநாள் வாழ அவள் ஆசைப்பட்டாள். ஒருநாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்கு அவளின் உயிர்த்தோழி சிஸுகோ வந்தாள். அவளிடம் நிறைய பேப்பர் துண்டுகள் இருந்தன. ஒரு துண்டை எடுத்து ஓரிகாமி (பேப்பர் மூலமாக பொம்மைகளை உருவாக்கும் கலை) முறையில் கொக்கு ஒன்றை செய்து பரிசாகக் கொடுத்தாள். நம்மூரில் கருடனை வணங்குவதுபோல, ஜப்பானியர்களுக்கு கொக்கு வழிபடக்கூடிய பறவை. “இதே மாதிரி ஆயிரம் கொக்குகளை நீயும் உருவாக்கு. உன் கோரிக்கைக்கு கடவுள் செவிமடுப்பார்” என்று ஆறுதல் சொன்னாள் சிஸுகோ. நாம் ஆயிரத்தெட்டு முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப் போல, இது ஜப்பானியர்களின் பாரம்பரிய நம்பிக்கை.

இந்த நம்பிக்கை சஸாக்கியை தொற்றிக் கொண்டது. தோழி கொடுத்த பேப்பர்களை மடக்கி, மடக்கி கொக்குகளை உருவாக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அவளால் இருபது கொக்குகளை உருவாக்க முடிந்தது. நாளுக்கு நாள் உடல் மோசமடைந்துக் கொண்டே செல்ல அவளால் நிறைய கொக்குகளை உருவாக்க முடியவில்லை. படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் ஒரு நாளுக்கு மூன்று கொக்குகளையாவது செய்துக் கொண்டிருந்தாள். இந்த வேண்டுதல் கடவுளின் காதை எட்டும். தன் உயிரை காப்பார் என்று தீவிரமாக நம்பினாள்.

கடவுளுக்கு கண் மட்டுமல்ல. காதுமில்லை. 1955, அக்டோபர் 25ஆம் தேதி சஸாக்கி மரணமடைந்தாள். மொத்தம் 644 கொக்குப் பொம்மைகளை அவள் கைப்பட செய்திருந்தாள். கடைசிவரை தன்மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட தன்னுடைய குழந்தையை கடவுள் கைவிட்டுவிட்டார்.
ஆனாலும் அவளது நண்பர்களும், பெற்றோரும் கடவுளை பழிக்காமல் சஸாக்கியின் ஆசையை நிறைவேற்றினார்கள். மீதி 356 கொக்குகளை சஸாக்கியின் சார்பாக அவர்களே உருவாக்கினார்கள். ஆயிரம் கொக்குகளும் சஸாக்கியோடு சேர்த்து புதைக்கப்பட்டது.

“என் குழந்தை ஒவ்வொரு கொக்கையும் மிகக்கவனமாக பேப்பரை மடித்து உருவாக்கினாள். ஒரு கட்டத்தில் பேப்பர் காலியானபோது, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு பொம்மைகளை செய்தாள். அந்த வேலையை செய்யும்போது அவளது கண்கள் மின்னுவதை கண்டிருக்கிறேன். குறுநகையால் உதட்டில் மகிழ்ச்சி வெளிப்படும். ஒட்டுமொத்தமாக அவளது முகம் நம்பிக்கையில் ஜொலிக்கும். இதை செய்வதின் மூலம் எப்படியும் உயிர் பிழைத்துவிடுவாள் என்று அவள் தீவிரமாக நம்பினாள்” என்று பிற்பாடு சொன்னார் சஸாக்கியின் தாய்.

சஸாக்கியின் உருக்கமான கதை ஜப்பான் எங்கும் பரவியது. எந்த பாவமும் அறியாமல் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பால் இறந்த ஆயிரமாயிரம் ஜப்பானிய குழந்தைகளின் உருவகமாக சஸாக்கி பார்க்கப்பட்டாள். சஸாக்கியின் பள்ளி தோழர்கள் ஓர் இயக்கமாக உருவாகி, அவளுக்கு நினைவுச்சிலை எழுப்ப நிதி திரட்டத் தொடங்கினார்கள். உலகெங்கும் சுமார் 3,100 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் பாக்கெட் மணியில் இருந்து காசு கொடுத்தார்கள். சிறுகச்சிறுக சேர்ந்த பணத்தில் ஒன்பது மீட்டர் உயரத்தில் சஸாக்கிக்கு ஒரு வெண்கலச்சிலை உருவாக்கப்பட்டது. ஹிரோஷிமா நகரில் போர் நினைவாக உருவாக்கப்பட்ட அமைதிப்பூங்காவில் இந்த சிலை 1958ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சிலையின் கையில் ஒரு கொக்கு. பீடத்தில் இவ்வாறாக எழுதப்பட்டது. “இது எங்கள் அழுகை. இது எங்கள் பிரார்த்தனை. உலகம் அமைதியாக இருக்கட்டும்” இன்று வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் ஹிரோஷிமா நகருக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள். போர் நினைவு அமைதிப்பூங்காவைப் பார்க்கிறார்கள். சஸாக்கியின் சிலையைப் பார்க்க வரும் குழந்தைகள் தவறாமல் தங்கள் கையால் பேப்பரில் உருவாக்கப்பட்ட கொக்கு பொம்மையோடு வரத்தவறுவதே இல்லை.

பிற்பாடு ஜப்பான் மீது குண்டு போட்ட அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஓர் அமைதிப்பூங்கா உருவாக்கப்பட்டது. அந்தப் பூங்காவிலும் சஸாக்கியின் முழு உருவச்சிலை 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்தச் சிலை சில விஷமிகளால் 2003ஆம் ஆண்டு சேதம் அடைந்தது. பின்னர் சஸாக்கி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அதே சிலையை சியாட்டில் நகரின் முக்கியமான இடமான க்ரீன்லேக் பூங்காவில் மீண்டும் நிறுவினார்கள்.

இன்று ஜப்பானில் சஸாக்கியின் கதை ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக சொல்லப்படுகிறது. ஜப்பானியப் பெண்களுக்கு சஸாக்கி ஒரு கதாநாயகி. ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்ட ஆகஸ்ட் 6, தேசிய அமைதிநாளாக அங்கே கொண்டாடப்படுகிறது. அன்று சஸாக்கிக்கு அஞ்சலி செலுத்த ஜப்பானியர்கள் தவறுவதேயில்லை.


கடந்த ஆகஸ்ட் 6 அன்று, க்ளிஃப்டன் ட்ரூமேன் டேனியல் என்பவர், சஸாக்கியின் அண்ணன் மஸாஹிரோவை சந்தித்தார். ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு நாசத்தில் பிழைத்து உயிர்வாழ்பவர்களுக்கு தன்னுடைய மரியாதைகளை தெரிவித்தார். ஜப்பான் முழுக்க இது பெரிய சம்பவமாக, தங்களது அமைதி கோரிக்கையை கடவுள் ஆசிர்வதித்ததாக பார்க்கப்படுகிறது. விஷயம் என்னவென்றால் க்ளிஃப்டனின் தாத்தா பெயர் ஹாரி ட்ரூமேன். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது இவர்தான் அமெரிக்க அதிபராக இருந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top