மூன்று மணி நேரப் படம் என்று இயக்குநர் சொன்னபோது அது வசூலைப் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். மல்டி பிளக்ஸில் இரண்டு மணி நேரப் படங்களே அதிகக் காட்சிகள் ஓடி அதிகமாக வசூல் செய்யும் என்பது ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் வசூல் கணக்கு.
“மூழ்கும் கப்பலில் ஒரு ரோமியோ ஜூலியட் கதை” என்று ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. கார் துரத்தல்கள், அட்டகாச வில்லன்கள் எல்லாம் இல்லாத காதல் கதையை, அதுவும் ஒரு கப்பல் விபத்தை மூன்று மணி நேரம் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம். இயக்குநரின் உந்துதலில் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் வெளியிடுவதில் தாமதங்கள், பட்ஜெட்டை மீறிய செலவு, ஒரு தோல்விப் படம் என்று கருதப்பட்டு வளர்ந்த படம்தான் டைட்டானிக்.
ஆனால் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 11 விருதுகள் பெற்று சமன் செய்தது டைட்டானிக். அதே போல அந்தக் காலகட்டத்தில் உலகில் அதிக வசூல் என்கிற சாதனையையும் செய்தது. இந்த வசூலை முறியடித்த படம் ஜேம்ஸ் கேமரூன் பின்னர் எடுத்து வெளிவந்த அவதார்! நிஜக்கதை என்பதால் மிகப் பிரபலம். ஏற்கனவே செய்தியாகவும் தொலைக்காட்சி தயாரிப்பாகவும் திரைப்படமாகவும் மக்களைச் சென்றடைந்த விஷயம் டைட்டானிக். உலகின் மிகப்பெரிய கப்பல் விபத்து என்பதால் டைட்டானிக்கை யாரும் மறக்க முடியாது. ஆனால் அதை ஒரு வெற்றிகரமான வணிக வெற்றிக் கதையாக மாற்றிய பெருமை இயக்குநரைச் சேரும்.
நொடிந்து போய் கடனில் உள்ள குடும்பத்தை மீட்க தன் மகளை ஒரு பெரிய குடும்பத்தில் கட்டி வைக்க நினைக்கிறாள் தாய். நிச்சயிக்கப்பட்டவனுடனும் தாயுடனும் வேண்டா வெறுப்பாகக் கப்பலில் பயணிக்கிறாள். ஒரு விரக்தி நிலையில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயல்கையில் அவனைச் சந்திக்கிறாள்.
ஒரு பரிசுச்சீட்டில் கப்பல் பயணம் வாய்க்க மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் காசில்லாத ஓவியன் அவன். அவளைக் காப்பாற்றுகிறான். அந்த நன்றிக்கு அவனை விருந்துக்கு அழைக்கச் சொல்கிறாள் தன் தாயிடம். புது மாப்பிள்ளையும் தாயும் அவன் வரவை ரசிக்கவில்லை. விருந்தும் ருசிக்கவில்லை. நிஜமான கொண்டாட்டம் காட்டுகிறேன் வா என்று அவளை மூன்றாம் வகுப்பு விருந்துக்கு அழைத்துச் சென்று அவளுடன் நடனமாடுகிறான்.
தன் நிலை தெரிந்து அவனைத் தள்ளி வைக்க நினைத்தும், அவன் காதலைப் புறக்கணிக்க இயலவில்லை. இருவரும் கலந்து போகிறார்கள். தன்னை நிர்வாணமாக ஓவியம் வரையச் சொல்லி ரசிக்கிறாள். அந்த வைர நெக்லஸ் மட்டும் அணிந்தவளை வரைகிறான். அது காலத்தை வென்ற ஓவியமாய் அனைவரும் அழிந்த பின்னும் ஜீவிக்கிறது.
கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகிறது. வெள்ளமும் ஓட்டமும் மரண ஓலங்களும் இறப்புகளுமாக ஒரு பலிபீடமாக மாறுகிறது டைட்டானிக். நிச்சயித்த பெண்ணை விட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கயமையாகக் காணாமல்போன குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு முதலில் வெளியேறுகிறான் வில்லன்.
மரண பயமும் நம்பிக்கையும் மாறி மாறி வருகிறது. மீட்கப்படும் வரை உயிரோடு இருக்க வேண்டும். கிடைத்த உடைந்த சிறு படகில் ஒருவர் மட்டும் உட்கார முடிகிறது. அவளைப் பத்திரப்படுத்தி கடல் நீரின் குளிரில் விரைத்து மெல்ல இறக்கிறான் காதலன். காதலி அவன் நினைவில் அவன் மனைவியாய் வாழ்கிறாள் 100 வயதுவரை. டைட்டனிக்கின் கதை அவள் ஞாபகங்களில்தான் விரிகிறது. முதுமையில் தன் இளமைப் பருவக் காதலில் திளைத்து மரணத்தைத் தழுவுகிறாள் ரோஸ். காதலன் ஜேக் உடன் தேவலோகத்தில் இணைகிறாள்.
திரைப்படம் இயக்குவதைவிடக் கடலின் அடியில் சென்று ஆராய்ச்சிகள் செய்வதுதான் அதிகம் பிடிக்கும் ஜேம்ஸ் கேமரூனுக்கு. இந்தப் படம் உருவாக 5 வருடங்கள் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திலேயே பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பிரம்மாண்ட அரங்குகளும், மினியேச்சர் வடிவங்களும், ஏராளமான தொழில் நுட்பமும் கலந்து உருவான படம் டைட்டானிக்.
1997-ல் வெளிவந்த இந்த படம் அந்தக் காலகட்டத்தில் கிடைத்த அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டு தயாரானது.
இருந்தும் படத்தின் வெற்றிக்குக் காரணம் காதல்தான். ஒரு விபத்தில் எத்தனையோ பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். மறைந்த மனிதர்களின் புதைந்து போன உறவுகளையும் உணர்வுகளையும் இந்த இருவரின் காதல் கதை மூலம் தொட்டுக் காட்டியிருப்பதுதான் நம்மை நெகிழ வைக்கிறது. காட்டியது ஒரு புனைவுக் காதல் கதை. இன்னும் எத்தனை எத்தனை நிஜக் காதல் கதைகள் நீரில் மூழ்கினவோ? எத்தனை காதல்கள் கரையிலேயே செத்து மடிந்தனவோ? அவற்றையெல்லாம் நினைக்க வைத்ததுதான் டைட்டானிக்கின் வெற்றி!
எல்லா நாடுகளிலும் இதைக் கண்டு நெகிழக் காரணம் இது உலகம் பேசும் ஒரே மொழியான. காதலைப் பேசியது.நம் மண்ணிலும் இயற்கைச் சீற்றங்களும் விபத்துகளும் நிறைய நடந்துள்ளன. அதை ஆவணப்படுத்தும் படைப்புகளாக இன்னும் ஆழமான படைப்புகள் வரலாம். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தைப் பயந்து பயந்து சொன்ன “கல்லூரி” படமும், சுனாமியைச் சின்னதாகப் பயன்படுத்திக் கொண்ட தசாவதாரமும் சில நல்ல உதாரணங்கள். கடல் தாண்டி காதல் வலி காட்டிய மரியானும் நல்ல முயற்சி. ஆனால் இன்னமும் சொல்லாத காதல் கதைகள் நிறைய நம்மிடம் உள்ளன. காதல் தோற்கலாம். ஆனால் காதல் கதைகள் தோற்றதில்லை.
0 comments:
Post a Comment