மகாத்மா காந்தியைப் போல அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவும் சிறந்த தேசபக்தரே என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சாக்சி மகாராஜ் கருத்து தெரிவித்து புதிய பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த நாள் முதலே அக்கட்சி எம்.பிக்களும் மத்திய அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் இணைந்துள்ளார்.
அவர் பேட்டி ஒன்றில், மகாத்மா காந்தியைப் போல கோட்சேவும் சிறந்த தேசபக்தர். கோட்சே தேசியவாதி. காந்தி இந்த நாட்டுக்கு நிறைய செய்துள்ளார் என்று சாக்சி மகாராஜ் கூறியிருக்கிறார்.
நாட்டின் தந்தை என்று போறப்படுகிற மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு எப்படி பாஜக எம்.பி. புகழாரம் சூட்டலாம் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜ்யசபாவில்.. இதனிடையே பாரதிய ஜனதா கட்சி ஆளும் மகாராஷ்டிராவில் அரசு விழாவில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு புகழாரம் சூட்டி பேசியதற்கு ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த பிரச்சனையால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ராஜ்யசபாவில் இன்று பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ஹுசைன் தல்வாய் பேசியதாவது:
மகாராஷ்டிராவில் அரசு சார்பில் விழாவில் சிலர் மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை புகழ்ந்து பேசியுள்ளனர். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாகக் கூறி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வேலைகளில் அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. இது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு ஹூசைன் பேசினார். இதனால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பிக்கள் தங்களது கையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி சபை தலைவர் முன் நின்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி எழுந்து, இதை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
மகாத்மா காந்தியை படுகொலை செய்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் அரசுக்கு எதிரானவர்களே. காந்தியை படுகொலை செய்த நபரை புகழ்பாடும் நடவடிக்கைகளை அரசு ஆதரிக்காது என்றார். இந்த பிரச்சனையால் ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் 2 முறை முடங்கியன.
0 comments:
Post a Comment